Tamilnadu

ரூ.12-க்கு கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க-வால் ஏன் முடியவில்லை? : மு.க.ஸ்டாலின் கேள்வி!

நடப்பு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை :ரூ.35 என்ற அதிக விலைக்குக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. த.வெ.க அரசின் இந்த முடிவிற்கு ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், வரும் டிசம்பர் 2026 முதல் மே 2027 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் உச்சகட்ட மின்தேவையை எதிர்கொள்வதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.41.50 என்ற, தமிழக வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்ச விலைக்குக் கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் கேரள மாநில அரசு ஒரு யூனிட்டை ரூ.14.50, ரூ.12.50 கொடுத்து வாங்கியதற்கே, கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேரள அரசால் ஒரு யூனிட்டை ரூ.14.50, ரூ.12.50 கொடுத்து வாங்க முடியும் போது த.வெ.க அரசு மட்டும் ஏன் ரூ.41.50 கொடுத்து வாங்க நினைக்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.

த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.

அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?

இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.

மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: குற்றத்தைத் தடுக்க திறமை இல்லாத முதலமைச்சர்; தனி நீதிமன்றம் போடுவதால் என்ன பயன்? - முரசொலி கேள்வி!