Tamilnadu

16 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் : தவெக ஆட்சியில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 16 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோசட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கம் அடுத்த கொட்டாவூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது 21). இவர் செங்கம் நகர பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, ஆசை வார்த்தைகள் பேசி காரில் கடத்திச் சென்றுள்ளார்.

வெளியூருக்கு அழைத்துச் செல்லும் வழியில், அச்சிறுமிக்கு சபரி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கம் காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காதலிப்பதாகக் கூறி சிறுமியை காரில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வாலிபர் சபரியைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

த.வெ.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், பட்டப்பகலில் சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Also Read: ரூ.12-க்கு கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க-வால் ஏன் முடியவில்லை? : மு.க.ஸ்டாலின் கேள்வி!