Tamilnadu

“மொட்டை அடிச்சுருங்க.. ஒருவரது தோற்றம்தான்..” - பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரண்யா தலைமையில் அமைச்சர்கள் வன்னி அரசு, ஜெகதீஸ்வரி ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், "நமது மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முடிவெட்டும் முறையை திருத்தம் செய்ய வேண்டும். வழக்கமான முறையில் முடி திருத்தி வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதியுங்கள்.

தப்பு தப்பாக முடிவெட்டி வந்தால் முதலில் மொட்டையடித்துவிடுங்கள் தப்பே இல்லை. அப்படி செய்தால்தான் சரியாக முடி திருத்தி வருவார்கள். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆட்சியர் மூலம் அறிக்கை விடுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் முடி திருத்தி வரும் முறையில்தான் முதல் தவறே நடக்கிறது. ஸ்டைலாக முடி திருத்தும் முறையை பெற்றோர் ஏன் அனுமதிக்கிறீர்கள்? முட்டாங்காலுக்கு மேல் ஸ்டைல் என பேண்ட் அணிந்து வருவதை ஏன் பெற்றோர்கள் அனுமதிக்கிறீர்கள்.

நம் பையன் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் ஏதோ ஒரு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு செல்ல நேரிடும். அப்போது அவனுடைய ஹேர் ஸ்டைலை பார்த்தே, 'இவன் நிச்சயம் தப்பு செஞ்சாருப்பான்' என்று ஒரு போலீசார் சொல்வது இயற்கை. அவர்களால் அப்படித்தான் சொல்ல முடியும், அப்படித்தான் சொல்வார்கள்.

ஒருவரது தோற்றம்தான் அவனது குணாதிசயத்தை நிர்ணயிக்கிறது. ஒருவர் நல்லது செய்வது, தவறு செய்வது இதெல்லாம் விசாரணைக்கு பின்னர்தான் முடிவு செய்வார்கள். ஆனால் ஒருவரை பார்த்தவுடன் அவரது உடை, ஹேர்ஸ்டைலை கண்டுதான் அவரது குணாதிசயத்தை முடிவு செய்வார்கள்.

எனவே பார்மல் முறையில் மட்டுமே மாணவர்கள் முடி திருத்தி வரவேண்டும் என்பதை நமது விருதுநகர் மாவட்டத்தில் உறுதி செய்ய கல்வித் துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த சமுதாயத்தில் ஆடை சுதந்திரம், முடி வெட்டும் சுதந்திரம் என்று பலரும் பேசி வரும் சூழலில், "ஒருவரது தோற்றம் தான் அவரது அவரது குணாதிசயத்தை முடிவு செய்கிறது" என்று இவர் பேசியுள்ளார். இவரது பேச்சு பலர் மத்தியிலும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கண்டனங்களையும் பெற்று வருகிறது.

Also Read: பாசிசத்திற்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்! : த.வெ.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு ஆ.ராசா எம்.பி கண்டனம்!