Tamilnadu
‘டோரதி’யின் வெற்றியும்... கலைஞர் போட்ட விதையும்! : தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
திருநங்கைகளின் வலிகளையும் உணர்வுகளையும் பொதுச் சமூகத்தைப் பார்க்கவைத்த, உணரவைத்த ‘டோரதி’ திரைப்படத்துக்கு வாழ்த்துகள். சமூக மாற்றத்துக்கான இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், எழுத்தாளர் சரவணன் சந்திரனும் சாதிய ஆதிக்கத்தையும் ஆணாதிக்கத்தையும் சமூக அரசியல் கலந்த தங்களது திரைக்கதையில் தோலுரித்து காட்டியுள்ளனர்.
பெண் சிசுக்கொலை முதல் ஆணவக்கொலை வரை ‘டோரதி’யின் பேசுபொருள்கள் கூர்மையானவை. பெரியவர்கள் முதல் ஜென் சி வரை, திருநங்கைகள் பற்றிய பார்வையை மாற்றி எழுதியுள்ளது ‘டோரதி’.
பசி, யாசகம், புறக்கணிப்பு, பாலியல் தொல்லைகள், வன்முறை, நேசத்துக்கு ஏங்கும் நெஞ்சம் எனத் திருநங்கைகளின் வாழ்வியலை இப்படத்தில் பார்த்தவர்கள், இனி அவர்களை நேரில் எதிர்கொள்ளும்போது அப்பெண்களை நடத்தும் விதம் நிச்சயம் மாறும் என நம்புகிறேன்.
இப்படத்தை பார்க்கும்போது, எனக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காகச் செய்த பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் நினைவில் எழுகின்றன. அதுவரை அவர்களை அழைத்துவந்த இழிவான பெயர்களை எல்லாம் தமிழ் மொழியிலிருந்து களையெடுத்து, 2006-ம் ஆண்டு ’திருநங்கை’ என மரியாதைக்குரிய வார்த்தைகளால் அவர்களை அழைத்தார். 2008-ம் ஆண்டில், இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்கென தனி நலவாரியத்தை அமைத்தார் கலைஞர்.
திருநர்களுக்கு அதிகாரபூர்வ அடையாள அட்டை வழங்கிய கலைஞர், அதன் மூலம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற அரசு ஆவணங்களை அவர்கள் பெற வழிவகை செய்தார். அவர்கள் தங்கள் பாலினத்தை வெளிப்படையாகப் பதிவு செய்து, சுயமரியாதையுடன் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்தார். 2011 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ம் நாள் திருநங்கையர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சியிலும் திருநங்கைகளின் கல்வி, வாழ்வாதாரம், சுயதொழில், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆதரவற்ற திருநங்கைகளுக்குப் பாதுகாப்பான தங்குமிட வசதியை ஏற்படுத்தும் அரண் இல்லங்கள், திறன் பயிற்சி, ஊர்க்காவல் படையில் நியமனம், சுயதொழில் நிதியுதவி என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம்.
திருநர் சமூகத்துக்கு உரிய ஏற்பை, மரியாதையை, உரிமையை, அங்கீகாரத்தை இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகத்தில் உறுதிசெய்தது தி.மு.க அரசு. அதன்வழியில் த.வெ.க அரசு திருநர் சமூக வாழ்வை மேம்படுத்திட புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். ‘டோரதி’ படக் குழுவினருக்கு அன்பும் நன்றியும்!
Also Read
-
“பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க நிர்வாகி பூபாலன், International Drug Mafia-வானதன் பின்னணி என்ன? - தி.மு.க ஐ.டி அணி கேள்வி!
-
“போதை பொருள் கடத்தலுக்கும், தவெக-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?” - முன்னாள் சபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி!
-
“யார்கிட்ட விளக்கம் கேட்க போறாரு?” - இந்து அறநிலையத்துறை Office உள்ளே புகுந்த மழைநீர்.. சேகர்பாபு கேள்வி!
-
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!