Tamilnadu
“யார் திறந்தால் என்ன? - அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே கழகத்தின் பணி” : அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி பதிவு!
யார் திறந்தால் என்ன?
“அறிதலே அறிவு. அறிவின் கூர்மையே பகுத்தறிவு” என்ற தந்தை பெரியார் கட்டமைத்த திராவிட இயக்கம் என்பது அறிவியக்கமாக செயல்பட்டு வருவதால் தான், தமிழ்நாடு உலக நாடுகளை ஒத்த வளர்ச்சியை எட்டி இருக்கிறது. திராவிட இயக்க வழிவந்த தி.மு.க தலைமையிலான ஆட்சி எப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அமைந்ததோ, அப்போதெல்லாம் அறிவுச் சுரங்கங்களாக இருக்கும் நூலகங்களில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு பொது நூலக இயக்ககத்தை 1972ஆம் ஆண்டில் உருவாக்கியவரே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான்.
அதன் பிறகு பெருநகரங்கள் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் சிறப்பான நூலக சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மூன்று நூற்றாண்டுகளை கடந்துள்ள சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக “அண்ணா நூற்றாண்டு நூலகம்” உருவாக்கப்பட்டது. உலகம் வியக்க அதனை பார்த்துப் பார்த்து உருவாக்கித் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
இப்படி அறிவியக்க வழியில் வந்ததோடு மட்டுமின்றி, அறிவுப்புரட்சிக்கும் நூலக கட்டமைப்பை வலுப்படுத்தி வித்திட்ட முத்தமிழறிஞரின் நூற்றாண்டை அர்த்தப்படுத்திடும் வகையில் தான், ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ மதுரையில் நம்முடைய கழகத் தலைவர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. மாமதுரையின் பெயர் சொல்லும் அடையாளங்களில் ஒன்றாக அந்த நூலகம் இயங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவச் செல்வங்களும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளையோரும் பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்.
அதற்கு கிடைத்த வரவேற்பும், மாணவச் செல்வங்கள் அடைந்த பயனையும் கவனித்த நம் தலைவர், கோவையிலும் பிரமாண்ட நூலகத்தை அறிவியல் மையத்தோடு சேர்த்து அமைக்க முடிவு செய்தார். திராவிட மாடல் அரசின் 2024-2025 நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பை வெளியிட்டார்கள். 2024 அக்டோபர் 14 அன்று பொது நூலகத்துறை சார்பில் நூலகம் அமையவுள்ள இடத்தை துறையின் அமைச்சர் என்கிற முறையில் நேரில் ஆய்வு செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக 2024 நவம்பர் 06 அன்று கோவையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அடிக்கல்லும் நாட்டினார்.
பொதுப் பணித்துறை மூலம் விறுவிறுப்பாக நடைபெற்ற கட்டுமான பணிகளை பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக 2025 ஜூன் 28 அன்று நேரில் பார்வையிட்டிருந்தேன். கட்டுமான பணிகள் நிறைவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2026 பிப்ரவரி 27 அன்று கழகத் தலைவர் அவர்களே நேரில் ஆய்வு செய்திருந்தார்.
இப்படி திராவிட மாடல் அரசு பார்த்துப் பார்த்து உருவாக்கிய “பெரியார் அறிவுலகத்தை” புதிதாக அமைந்துள்ள Take Diversion அரசு திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் குறிப்பிட்டு கடந்த 2026 ஜூன் 6 அன்று காணொலி ஒன்றினையும் வெளியிட்டு இருந்தேன். கோவையின் மாபெரும் அடையாளங்களில் ஒன்றாக திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்டுள்ள கோவை பெரியார் அறிவுலகம் தற்போது திறப்பு விழா கண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. “யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!”. இதுதான் நம்முடைய தலைவரின் பெருந்தன்மை; திராவிட இயக்கத்தின் நிலைத்தன்மை! (Sustainability).
கோவையில் பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாமல்
திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் நூலகம்,
சேலத்தில் பாரதிதாசன் அறிவுலகம்,
கடலூரில் அஞ்சலை அம்மாள் நூலகம்,
நெல்லையில் காயிதே மில்லத் நூலகம் ஆகியவையும் திராவிட மாடல் அரசால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, சிறப்பாக உருவாகி வருகிறது.
தனது மாநில மக்களின் நலனுக்காக உழைத்த தலைவர்களின் பெயர்களில் மாநிலம் முழுவதும் அறிவுத்திருக்கோயில்கள் அமைந்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அந்த பெருமையை உருவாக்கியது திராவிட மாடல் அரசுதான்!
மாணவனை அறிவுள்ள பகுத்தறிவுமிக்க மனிதனாக வளர்ப்பதுதான் ஒரு பள்ளியின் பெருமையாக இருக்க முடியும். ஒரு ஆசிரியரின் பெருமையாக இருக்க முடியும். அதேபோல அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதுதான் ஒரு தலைவனின் பணி! கொள்கையின் பணி! அப்பணியை தலைவராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும், கொள்கையாக திராவிடமும் செய்தது. தொடர்ந்து செய்யும்.
- முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Also Read
-
“வெள்ளை மனம் கொண்ட தேவா.. கானா என்றாலே தேவா தான்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்!
-
“போராட்டத்திற்கு ஆதரவு.. காங்கிரஸ் இரட்டை வேடம்” : திமுக MP-க்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
-
“இவர்களுக்கு எல்லாம் மூளை இருக்கிறதா?” : மாணிக்கம் தாகூர், ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“TVK Bad Party அல்ல, Breaking Bad Party”: தவெக MLA 135KG மெத்தம்பெட்டமைன் கடத்தல் -மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!