Tamilnadu

லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்ற முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்துடனும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்துடனும் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்த முறையான மற்றும் தெளிவான அறிக்கை இன்னும் அரசிடம் இருந்து வெளியாகவில்லை.அதேபோல், முந்தைய ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று சென்னை திரும்பியபோது, விமான நிலையத்திலேயே செய்தியாளர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன, இதனால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும் போன்ற விவரங்களை அவர் அங்கேயே விளக்குவார்; அதன் பிறகு அரசிடம் இருந்து விரிவான அறிக்கையும் வெளியாகும்.

ஆனால் முதலமைச்சர் விஜயோ, தான் நடிகராக இருந்தபோது வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்புவது போல, விமான நிலையத்தில் ரசிகர்களுக்குக் கையாட்டிவிட்டு நேராகத் தனது இல்லத்திற்குச் சென்றுவிட்டார். அவரது லண்டன் பயணமே, நடிகர் அஜித்தின் கார் பந்தயப் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக மட்டுமே அமைந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு சென்றிருந்தபோது, ஒவ்வொரு நாளும் எந்தெந்த நிறுவனங்களைச் சந்தித்தார், எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் உடனுக்குடன் வெளியாகின. இதனால் சாமானிய மக்களுக்குக்கூட அதன் விவரங்கள் எளிதாகத் தெரிந்தன.

'திராவிட மாடல்' ஆட்சியில்தான் முதலீடு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற வார்த்தைகளும், அவற்றின் பயன்களும் இன்றைய இளைஞர்களுக்கும் விரிவாகத் தெரியவந்தன. அந்த அளவிற்குத் தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்த்தார் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், இன்னும் தன்னைச் சினிமா கதாநாயகனாகவே நினைத்துக் கொண்டிருக்கும் விஜய், நடிகர் அஜித்தின் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று நாடகம் ஆடியுள்ளார். தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்களை எப்படிச் சாலைகளில் காக்க வைத்தாரோ, அதேபோல லண்டனிலும் தனது ரசிகர்களை வீதிகளில் காத்திருக்க வைத்துள்ளார்.

மக்களைக் காக்க வைப்பதும் அலைக்கழிப்பதும் விஜய்க்குப் பொழுதுபோக்காக மாறிவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது.இதே மனநிலையில்தான் தற்போதைய ஆட்சியும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மின்வெட்டுக்காக மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள். விவசாயிகளோ முழுப் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது பட்டினம்பாக்கம் மக்களும் தங்கள் உரிமைகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

"மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மாட்டேன், பத்திரிகையாளர்களைச் சந்திக்க மாட்டேன்; ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நான்தான்" என்ற மமதையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் விஜய் இப்படியே செயல்படப் போகிறார்? தமிழ்நாடு மக்கள் எத்தனையோ அரசியல் தலைவர்களுக்குப் பாடம் புகட்டியவர்கள், விஜய்க்கும் ஒருநாள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

Also Read: தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் விலைவாசி உயர்வு! - த.வெ.க.வின் நிர்வாகத் தோல்விக்கு எழும் கண்டனங்கள்!