Tamilnadu

அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மிசா வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் விதமாகச் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசினார். அப்போதே அவையில் இருந்த தி.மு.க.உறுப்பினர்கள் இதற்குத் தங்களின் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.இதற்கு முன்னதாக, மிசா சட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை முதலமைச்சர் விஜய் சைகை மூலம் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

இதற்குக் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வரும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளே கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இருப்பினும், மிசாவின் தியாக வரலாற்றைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் அவமதித்தே பேசி வருகிறார்.

இந்நிலையில்,உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறான தகவல்களைச் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது உரிமைமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தி.மு.க.வினர் கடிதம் அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ”கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் எப்போதும் உண்மைக்கு மாறாகப் பொய்யான தகவல்களைப் பேசி வரும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், அவையில் இல்லாத எனது தலைவரைப் பற்றி உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறார்.

அவரது கருத்துகளுக்கு எதிராக உரிமைமீறல் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளோம். உரிமைமீறல் கடிதத்தைச் சபாநாயகரிடம் கொடுத்துள்ளோம். தான்தோன்றித்தனமாகப் பேசி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய தி.மு.க. கொறடா எ.வ.வேலு, ”அவையில் இல்லாத ஒருவரைப் பற்றிச் சட்டமன்ற உறுப்பினர் பேசுவதற்கு விதியிலேயே இடமில்லை. அப்படிப் பேசவும் கூடாது. ஆனால், சட்டத்துறை அமைச்சர் தொடர்ந்து அவையில் இல்லாதவர்களைப் பற்றியே பேசி வருகிறார்.சர்க்காரியா கமிஷன் பற்றி அவையில் ஏற்கனவே ஏராளமாக விவாதித்துள்ளோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும் பேசியிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் பேசியிருக்கிறார். அனைவருக்கும் தெரிந்த பழைய செய்திகளையே மீண்டும் மீண்டும் கொண்டு வருவதற்கு என்ன காரணம்? ஜனநாயகம் சர்வாதிகாரப் போக்கிற்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மிசா சட்டத்தை எதிர்த்து அன்று ஜனநாயகப் போராட்டம் நடைபெற்றது.

அதில் தி. மு. க.வைச் சேர்ந்த 419 பேர் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைகளை அனுபவித்தனர். அப்படி மிசாவை எதிர்த்துப் போராடியவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் பேசியுள்ளார்.சர்க்காரியா கமிஷனில் 28 குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டன.

ஆனால், மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்ந்த இஸ்மாயில் கமிஷனில், இதில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்தத் தியாகத்தைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால், அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றுதான் நாங்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!