Tamilnadu

மிசா வரலாறு தெரியாமல் சகட்டுமேனிக்கு பேசக் கூடாது : அமைச்சர் நிர்மல்குமாருக்கு, பெ.சண்முகம் கடும் தாக்கு!

மிசா காலத்தில் அரசியல் கைதிகள் கடுமையான சித்திரவதைகளைச் சந்தித்தார்கள்.வரலாறு தெரியாமல், சகட்டுமேனிக்குச் சேற்றை வாரி இறைப்பது போல அமைச்சர்கள் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம் "கடந்த 4 ஆம் தேதி த.வெ.க அமைச்சர்கள் சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். நாளை நடைபெற உள்ள த.வெ.கவின் தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், நாளை நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்பதைத் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன்.

சட்டமன்றம் முதலில் சட்டமன்றமாக நடைபெற வேண்டும். மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கக்கூடிய மன்றமாகவும், அதற்கான தீர்வுகளையும் சட்டங்களையும் உருவாக்கக்கூடிய மன்றமாகவும் அது திகழ வேண்டுமே தவிர, கத்தல் மன்றமாக நடத்தப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.சட்டமன்றம் தற்போது சத்த மன்றமாகவும், சண்டை மன்றமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

சட்டமன்றம் மக்கள் வரிப்பணத்தில் நடந்து வருகிறதே தவிர, எவருடைய சொந்தப் பணத்திலும் நடைபெறவில்லை. எனவே, மக்களின் நேரம் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். வீணான விவாதங்களால் சட்டமன்றத்தின் கால அவகாசம் வீணடிக்கப்படுகிறது.ங

நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்காவது முதலமைச்சர் பதில் சொன்னாரா? சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு கேள்விக்குக் கூட முதலமைச்சர் முறையாகப் பதில் அளிக்கவில்லை. தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் எப்போதும் இப்படி நடந்ததில்லை.

மானியக் கோரிக்கை என்றால் அதன் மீது முறையான விவாதம் நடைபெற வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு உரிய பதில்களை வழங்க வேண்டும். 'நாங்கள் நினைத்ததையெல்லாம் பேசுவோம்' என்ற முறையில் சட்டமன்றத்தைப் பயன்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது. த.வெ.கவின் கொள்கை மற்றும் நிலைப்பாடுகளைப் பொறுத்தே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து ஆண்டுகால ஆதரவு அமையும்.

த.வெ.க அமைச்சர்கள் முதலில் வரலாற்றைப் படியுங்கள்; குறிப்பாக இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைப் படியுங்கள். மிசா (MISA) காலத்தில் சென்னை மத்தியச் சிறைச்சாலையில் நடைபெற்ற கொடுமைகள், வன்முறைகள் மற்றும் கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் தொடர்பாக இஸ்மாயில் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் விரிவான அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாரும் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல்குமார் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது; அது அவரது அறியாமையை வெளிப்படுத்தும் கருத்தாகும். மிசா காலத்தில் அரசியல் கைதிகள் கடுமையான சித்திரவதைகளைச் சந்தித்தார்கள்.வரலாறு தெரியாமல், சகட்டுமேனிக்குச் சேற்றை வாரி இறைப்பது போல அமைச்சர்கள் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அகில இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் மிசா காலத்தில் நடந்த கொடுமைகள் தொடர்பாக எண்ணற்ற ஆவணங்கள் உள்ளன. அவற்றை அமைச்சர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.சர்க்காரியா ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் மூலம் எவர் மீதும் முறையாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுமில்லை, வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை, யாரும் கைதும் செய்யப்படவில்லை" என்றார்.

Also Read: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!