Tamilnadu

“சட்டப்பேரவை மரபை மீறுகிறார் சபாநாயகர்.. திமுக மீதான அரசியல் தாக்குதல்” : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர் விஜய், காவல்துறையின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிப்பதைவிட, திமுகவை குறிவைத்து அரசியல் குற்றச்சாட்டுகளை அடுக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சட்டப்பேரவை என்பது அரசியல் மேடை அல்ல; மக்களின் பிரச்சினைகள், ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த கேள்விகளுக்கு அரசு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய ஜனநாயகத் தளம். ஆனால், முக்கியமான காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தையே கடந்த கால அரசியலைத் தோண்டி எடுக்கும் களமாக மாற்றியிருப்பது, நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரின் அரசியல் முதிர்ச்சியையே கேள்விக்குறியாக்குகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், மிசா, சர்காரியா கமிஷன் மற்றும் முரசொலி மாறன் குறித்து முதலமைச்சரின் பதிலுரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்தப் பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சட்டப்பேரவை விதிகளை மேற்கோள்காட்டி திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில், “மிசா, சர்காரியா கமிஷன், முரசொலி மாறன் ஆகியோர் குறித்து முதலமைச்சரின் பதிலுரையில் உண்மைக்கு மாறாக பேசப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சட்டமன்ற விதிகளை மேற்கோள்காட்டி திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு எடுத்துரைத்தார்.

ஆனால், சபாநாயகர் எந்த விளக்கத்தையும் ஏற்காமல், சபை மரபுகளுக்கும் விதிமுறைகளுக்கும் முரணாக முதலமைச்சரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்துவிட்டார். இது சட்டவிதிமுறைகளை மீறும் செயலாகும். இதனைக் கண்டித்து தோழமைக் கட்சிகளின் சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறுகையில், “முதலமைச்சரின் பதிலுரை பல சங்கடங்களை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், முதலமைச்சர் தேவையற்ற பேச்சுகளையே பேசியுள்ளார். இன்று மீண்டும் அவை கூடியபோது, தேவையற்ற பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக முன்வைத்த கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்துள்ளார். மிசா தியாகங்களை கொச்சைப்படுத்துவது நியாயமற்றது” என்றார்.

இதுகுறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.எல்.ஏ நித்யானந்தன் கூறுகையில், “காவல்துறை மானியக் கோரிக்கையில் நேற்று பதிலளித்த முதலமைச்சர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நேற்று தொடக்கத்தில் 26 நிமிடங்கள் எதிர்க்கட்சிகள் பேசிய பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் பேசினார்.

வழக்கில் உள்ள விஷயங்கள், தீர்ப்பு அளிக்கப்படாத விவகாரங்கள், குற்றம் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கக்கூடாது. ஆனால், மிசா, சர்காரியா கமிஷன் மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

முதலமைச்சரின் உரை முடிந்தவுடன் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கேட்டும் அது மறுக்கப்பட்டது. மேலும், நேரமில்லா நேரத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்து பேச வேண்டும் என திமுக கேள்வி எழுப்பியபோது, பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

முதலமைச்சர் பேசிய பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தது சட்டப்பேரவை மரபுகளை மீறிய செயலாகும்” என்றார். இதனால், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தாண்டி, முதலமைச்சரின் பதிலுரை, அவைக்குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மரபுகள் தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!