Tamilnadu

சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் வண்ணமாக இருக்கிறது. குறிப்பாக கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை பெருமளவு அதிகரித்துள்ளது. மேலும் சிறார்களுக்கு போதை பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நள்ளிரவு நேரத்தில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு அருகே வண்ணான்துறை ராமசாமி அவென்யுவில் வசித்து வருபவர் கண்ணன் (45). முன்னதாக அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்த இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவருக்கு தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிக முன் விரோதப் வகைகள் இருப்பதாக சுற்று வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று (செப்.05) நள்ளிரவு அவர் அலுவலகத்தை முடித்துவிட்டு வெளியே அவர் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணனை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதனால் பதறியடித்து ஓடிய கண்ணனை, அந்த கும்பல் விடாமல் துரத்தி வெட்டியுள்ளனர். அறிவாளாலர் ஓட ஓட வெட்டியதில், தவெக நிர்வாகி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கண்ணனின் நண்பர்களையும் அந்த கும்பல் தாக்க முயன்ற நிலையில், அவர்கள் கத்தி கூச்சலிடவே உடனே அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கண்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக நிர்வாகியும் சரித்திர பதிவேடு குற்றவாளியான கண்ணன் கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 5 பேரை கைது செய்து விசாரித்தனர். அப்போது இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றது கண்டறியப்பட்டது.

அதாவது கடந்த 2009-ம் ஆண்டு சிவா என்பவரை கொலை செய்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்குவதற்காகத் தான் இந்த கொலை அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொலை செய்யப்பட்ட கண்ணன் என்பவர் தலைமையிலான கும்பல் தான் சிவாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நேற்று அடையாறு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!