Tamilnadu
பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? : த.வெ.க அரசுக்கு சிந்தனை செல்வன் கேள்வி!
பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை-கொள்கை குறிப்பேட்டில் இடம்பெற்ற இட ஒதுக்கீடு வரலாற்று குறிப்பில் தந்தைப்பெரியார் , புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு வி.சி.க பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கண்டம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கடந்த ஜூன் 18 அன்று மறதி எனும் புதைகுழியில் புதைக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் சமூக நீதி சாதனையை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் ஒரு பதிவை முக நூலில் பகிர்ந்திருந்தேன்.
“…இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முதல் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் ஜூன்18 என்றும் அந்த நாளில் அம்பேத்கரை ஏன் நினைவு கூற வேண்டுமெனவும் சில வரலாற்றுத்தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு எனது சட்டமன்ற அனுபவத்தையும் கீழ்கண்டவாறு பதிவுசெய்திருந்தேன்.
கடந்த முறை நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட துறையின் கொள்கை குறிப்பேட்டை வாசித்த போது அந்த கொள்கை குறிப்பேட்டிலும் தந்தைப்பெரியாரின் பெயர் இடம் பெற்றதைப்போல புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு குறிப்பிடப்படவில்லை.
இதோ அரசின் அந்த கொள்கை குறிப்பு:
( பக்கம் 6 மற்றும் 7)
தமிழ்நாட்டில் 1921ஆம் ஆண்டு முதல் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 88 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளனர். இட ஒதுக்கீட்டின் அளவு பல்வேறு காலங்களில் உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய அரசமைப்பு சட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ அரசாணை என்று அழைக்கப்பட்ட பல்வேறு பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை செல்லாது என உச்ச நீதிமன்றத்தால் 1951 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் வழி நடத்திய பெருந்திரளான எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களின் விளைவாக அரசமைப்பு சட்டத்தில் பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டு முதல் அரசமைப்பு சட்டத் திருத்தத்திற்கு வழி வகுத்தது. பல நூற்றாண்டுகளாக அநீதிக்கு உள்ளாக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மக்கள் கல்வி சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கான சமூக நீதிப் போராட்டத்தில் இது ஒரு வரலாற்றுச் சாதனை என போற்றப்படுகிறது.
இந்த பக்கங்களை வாசித்த போது ஏன் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பை குறிப்பிட வில்லை என துறைச்செயலாளரிடமும் அன்றைய துறை அமைச்சர் அண்ணன் கண்ணப்பனிடமும் கேள்வி எழுப்பினேன். மனுவாக வேண்டுகோள் விடுத்தேன். தோழர் ரவிக்குமார் , தோழர் கவுதமசன்னா , தோழர் எஸ் வி ராஜதுரை ஆகியோரை சந்தித்து வரலாற்றுத் தகவல்களை சேகரித்தேன். இன்னொரு முயற்சியாக ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களை சந்தித்தேன். அவர் தான் வெளியிட்ட மண்டல் கமிஷன் தீர்ப்பு குறித்த நூலை என்னிடம் தந்து அதை முதல்வரிடம் சமர்ப்பிக்கும்படி வழி காட்டினார். அந்த தீர்ப்புரையில் நீதிபதிகள் இந்த வரலாற்று உண்மைகளை பதிவு செய்திருந்தனர்.
முழு தகவலையும் சேகரித்த தெம்பில் சட்டப்பேரவையிலும் பேசினேன். மூன்றாண்டுகால தொடர் முயற்சிகள் பலன் தந்தது. ஒரு வழியாக அந்த கொள்கை குறிப்பேடு திருத்தப்பட்டது.
திருத்தப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் கொள்கைக்குறிப்பேட்டில் ….பக்கம் 9
1951-இல் இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் வழி நடத்திய எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களின் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தில் பிரிவு 15(4) சேர்க்கப்பட காரணமாக அமைந்தது. பாரதப்பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்து இந்த முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழி வகுத்தனர். இந்த திருத்தம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கான விதிகளையும் இயற்ற வழிவகுத்தது.
இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அரசின் கொள்கை குறிப்பேட்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது பெரும் மகிழ்ச்சியை தந்தது. அன்றைய சட்டப்பேரவைச்செயலாளர் திருமிகு சீனிவாசன் சொன்னார். நானறிந்த வகையில் கடந்த 75 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் அரசின் கொள்கை குறிப்பேடு இவ்வாறு திருத்தப்படுவது இதுதான் முதல்முறை என்று
இந்த சாதனையை எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan நம் தலைவருக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கிறேன்.
தங்கள் வாழ்வையும் இளமையையும் போராட்ட வாழ்வில் பொசுக்கிக்கொண்ட முதல் தலைமுறை சிறுத்தைகளுக்கு இதை காணிக்கையாக்குகிறேன்.
என தொடர்கிறது அந்த பதிவு. இத்தகு தொடர்முயற்சிகள் அந்த வரலாற்றுக்குறிப்பின் பின்னணியில் உள்ளன.
சற்றுமுன் கிடைக்கப்பட்ட புதிய அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கையை ஆசை ஆசையாய் வாசித்த போது அதிர்ந்து போனேன்.
அதில் இடம்பெற்ற இட ஒதுக்கீடு வரலாற்று குறிப்பில் தந்தைப்பெரியார் , புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. நீதிகட்சியின் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த இருட்டடிப்பை கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்.
இதை அமைச்சர் பெருமக்களின் குற்றமாக என்னால் கருத முடியவில்லை. அவர்கள் புதிதாக பொறுப்பேற்றவர்கள். துறையின் அரசு செயலாளரும் அவரை வழிநடத்தும் அரசு தலைமை செயலாளருமே இதற்கு பொறுப்பாவார்கள் என்பதை நான் நன்கறிவேன்.
கொள்கை குறிப்பில் பெரும்பாலும் திருத்தங்களை புதிய அரசுகள் மேற் கொள்வதில்லை. அது அப்படியே தொடரும். நலத்திட்டங்கள்தான் திருத்தப்படும் அல்லது சில தருணங்களில் நீக்கப்பட்டு புதியன சேர்க்கப்படும்.
ஆனால் கொள்கை குறிப்பேட்டை அரசு தலைமைச்செயலாளரின் வழிகாட்டல் இன்றி மாற்றி இருக்க முடியாது.
சில அதிகாரிகளின் அடாவடிதனம் கடந்த திமுக ஆட்சிக்கு பல நேர்வுகளில் கெட்டப்பெயரை வாங்கி கொடுத்ததை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் சட்டமன்றத்தில் பலமுறை எச்சரிக்கையாக பேசியிருப்பதை நினைவூட்டிட கடமை பட்டுள்ளேன்.
தமிழக முதல்வர் Chief Minister of Tamil Nadu அவர்கள் உடனே இதை சரி செய்திட வேண்டும். இந்த வரலாற்று இருட்டடிப்பிற்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வரலாற்றை இருட்டடிப்பு செய்வதை விட பெரிய வன்கொடுமை வேறெதும் இருக்க முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்கள் - தவெக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு!
-
பரந்தூர் விமான நிலையம் ரத்து : த.வெ.க-வின் சூழலியல் அல்ல சூழ்ச்சியியல் - முரசொலி கண்டனம்!
-
“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக” : த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
“மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
234 சட்டமன்றத் தொகுதிகளை 110 மாவட்டங்களாக பகுத்து தி.மு.க அறிவிப்பு! : முழு பட்டியல் உள்ளே!