Tamilnadu

கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் பகுதியின் ஹானூர் அருகே உள்ள வனப்பகுதியில் வைத்து தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (33) ஆகிய 3 பேரை கடந்த ஆக.16 அன்று கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த 3 பேரின் உறவினர்களையும், கர்நாடக காவல்துறை தாக்கியதற்கும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில், கர்நாடக அரசுக்கு எதிராக எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. அதோடு பேரவையில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, அதற்கும் உரிய விளக்கம் அளிக்காமல், மழுப்பியும், டாப்பிக்கை டைவர்ட்டும் தவெக-வினர் செய்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சரும், அமைச்சரும், இது தங்கள் மாநில பிரச்சினை என்றும், இதில் தமிழ்நாடு தலையிட கூடாது என்றும், சுடப்பட்டவர்கள், மிருகங்களை வேட்டையாடும்போது பிடிபட்டு, வனத்துறையினருக்கு, அவர்களுக்கும் ஏற்பட்ட தகறாரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அப்போதும் கூட தமிழ்நாடு தவெக அரசு வாயை மூடிக்கொண்டு மௌனமாக மட்டுமே இருந்தது. இந்த சூழலில் 3 தமிழர்களின் உடற்கூறாய்வு முடிவுகள் இன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த உடற்கூராய்வில், அவர்கள் மூன்று பெரும் கர்நாடக வனத்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டும், உடலில் பல்வேறு காயங்களும் இருந்தது தெரியவந்தது. அதோடு இந்த தாக்குதலில் அவர்கள் விலா எழும்பும் முறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், அவரது உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, உடலில் நெஞ்சு, தொடை, வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்களும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 3 பேரின் உடல்களிலும் 8.5 சென்டி மீட்டர் அகலத்தில், 6 சென்டி மீட்டர் ஆழத்துக்கு காயங்கள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் காவிரி - மேகதாது பிரச்சினை சூடு பிடித்துள்ள சூழலில், 3 தமிழர்கள் கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இந்த உடற்கூறாய்வு அறிக்கை, அவர்கள் கர்நாடக வனத்துறையினரால் திட்டமிட்டே சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி