Tamilnadu
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.வின் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற,- "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நாள் மாபெரும் கருத்தரங்கில்” சிறப்புரையாற்றிய இந்து என் ராம் அவர்கள், "தமிழ்நாட்டில் கலைஞருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.” என்றும் “மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கலைஞர் அவர்கள் காட்டிய பாதையில் தி.மு.க. தொடர்ந்து சிறப்பாக இயங்கும் !” என்றும் உறுதிபடக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இந்து என். ராம் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-
கலைஞர் தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை வைத்தார். சிறுகதைகள், நாவல்கள், நாடகம் இதெல்லாம் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும், அதை மீண்டும் ஆய்வு செய்வதுபோன்று இன்றைக்கு சொல்கிறோம். நாடகங்கள், திரைப்படம், வசனம் எழுதுவது என அனைத்துத் துறைகளிலும் அவர் சிறந்த முறையில் செயலாற்றினார்.
கலைஞர் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம், அவர் “Not born with a silver spoon”. நிலப்பிரபுத்துவம் மேலோங்கி இருந்த ஒரு தஞ்சை மாவட்டத்தில் தனது சாதனைகளை நிகழ்த்தினார். சிறு வயதிலிருந்தே, அது ஒரு பெரிய சவால்; போராட்டம்தான். அதற்கு காரணம் அவரே சொல்லியிருக்கிறார், "உழைப்பு, உழைப்பு, உழைப்பு!"
என்னதான் பெரிய மேதையாக இருந்தாலும், உழைப்பு இல்லையென்றால் ஒன்றுக்கும் செல்லாது; செல்லாத காசாக வீணாகிவிடும். அதனால்தான் அவருடைய கல்லறையில், "ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்” என்று எழுதச் சொன்னார்.
சுயமரியாதை அவருடைய மூச்சு. தோளில் போட்டிருக்கும் துண்டை இடுப்பில் கட்ட வேண்டி வரும் என்பதற்காகவே, நாதஸ்வரம் பயில்வதை அவர் நிறுத்திவிட்டார். அதைச் சிறு வயதிலேயே அவரால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. ஜாதியின் கொடுமைக்கு அது ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தது. 14 வயதிலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் இதெல்லாம் அவருக்குள் ஆழமாக ஊறிவிட்டன. பல நேரங்களில் கோபம் வரும்; கடுமையான விமர்சனம் வரும்; பல குற்றச்சாட்டுகள் வரும். இரண்டு முறை அவருடைய ஆட்சியை மோசமான முறையில் ஒன்றிய அரசு கலைத்துவிட்டது. முதல் முறை காங்கிரஸ் அரசு; இரண்டாவது முறை சந்திர சேகர் தலைமையிலான கூட்டாட்சி அரசு. அப்படி இருந்தாலும் அவருக்கு அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது அதிக மதிப்பு இருந்தது .
நாங்கள் சில நேரங்களில் அவர்களை விமர்சனம் செய்வோம். 'தி இந்து' பத்திரிகையில் நான் ஆசிரியராக இருக்கும்போது, அதற்கு முன்னால் கூட சில விஷயங்களில் வேறுபாடு வரும். அதைப் பற்றி விமர்சனம் செய்வோம்; சில நேரங்களில் கடுமையாகக் கூட விமர்சனம் செய்திருக்கிறோம். போன் செய்து “என்ன இதுபோன்று எழுதிவிட்டீர்கள்?” என்று கேட்பதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் அவர் எடுத்ததில்லை.
இன்றைக்கு எவ்வளவு பேரை கைது செய்கிறார்கள்! ‘நக்கீரன்' கோபால் மீது அநியாயமாக வழக்கு போடுகிறார்கள். இப்போது நடந்தது உங்களுக்குத் தெரியும்... உதயநிதி ஸ்டாலின் அவர்களை மோசமான முறையில் கைது செய்து கொண்டு போனார்கள். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்; அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்; அவசரப்படத் தேவையில்லை. இருந்தாலும் தொடக்கக் கட்டத்திலேயே காணப்படும் இந்தச் சகிப்பின்மை ஒரு மோசமான அறிகுறி என்றுதான் சொல்வேன்.
முதலமைச்சர் விஜய் அவர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, இந்தச் செயல்களை இப்போது வாபஸ் பெற வேண்டும்; மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மேல் நான் இங்கு பேச வேண்டியதில்லை.
இது ஒரு பத்திரிகையாளருக்கு முக்கியமான விஷயம். பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல; அரசியல்வாதிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு, திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு என அனைவருக்கும் இது ஒரு முக்கியமான விஷயம். விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? கடுமையான எதிர்ப்பைக் கூட சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
நீதிமன்றங்கள் அநியாயமாகக் கைது செய்து, அநியாயமாக வழக்கு போடுபவர்கள் மீது விலக்கு கொடுப்பார்களா? சரியான முடிவுக்கு வருவார்களா? இந்தியா முழுவதும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களிலேயே ஒரு சில மோசமான அறிகுறிகள் இருக்கின்றன; அதை வாபஸ் பெற வேண்டும்.
விமர்சனம் நல்லது!
கலைஞனுடைய வாழ்க்கை அதற்கு நன்றாக ஒரு மாதிரியாக இருக்கிறது. அதனால் அனைத்து விஷயங்களிலும் அவருக்குக் கோபம் வராது என்று சொல்ல முடியாது. சில விஷயங்களுக்கு எதிராகவும் எழுதுவார்; அவரால் எழுத முடியும் அல்லவா? நீங்கள் ஏதாவது சொன்னால் விமர்சனத்திற்குப் பதில் கொடுக்க முடியும்.
தினமும் அதைச் செய்வார். எனக்குப் பலமுறை, பல உதாரணங்கள் அதில் இருக்கின்றன. நான் ஆக்டிவ்-ஆ பத்திரிகையாளராக இருக்கும்போது எழுதும்போது, உடனே போன் செய்து “என்ன இந்த மாதிரி எழுதிவிட்டீர்கள்?” என்று சொன்னால், "நான் உங்களைப் பார்க்கிறேன்” என்று கூறி அங்கு போனால், அங்கு வேறு மாதிரி அந்தப் பேச்சு போய்விடும். இரண்டாவது, அணுகுமுறை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநிலங்களில் முதலமைச்சரையோ, பெரிய தலைவர்களையோ பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. காங்கிரஸ் கட்சியிலும் அப்படித்தான்; பா.ஜ.க. விலும் அப்படித்தான். சில இடங்களில் வேறு மாதிரி இருக்கலாம். ஆனால் கலைஞரைப் பத்திரிகையாளர்கள் அணுக முடியும். அறிவாலயத்திற்கோ, கோபாலபுரத்திற்கோ சென்றால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அவர் செல்லும்போது பத்திரிகையாளர்களைப் பார்த்தால் நிறுத்திப் பார்ப்பார்; “என்ன?” என்று கேட்பார்; அவர்கள் சொல்வதற்கு ஒரு சுவாரஸ்யமான பதில் கொடுப்பார்.
மாநில உரிமைகளைப் பற்றி ஆழமான சிந்தனை உடையவர். ஒரு நாளிலும் அதை விட்டுக் கொடுக்கவில்லை.
இன்றைக்குத் தி.மு.க. பதவியை இழந்தது, பவர் இழந்ததா? சேகர் பாபு அவர்களே, என்ன நடந்தது என்று அன்னைக்கு பார்த்தோம். ஊழியர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் வெளியில் வந்து இதை எதிர்த்தார்கள். யாராவது சொல்லிச் செய்தார்களா? அது தானாகவே நடந்துவிட்டது. அமைப்பு இருக்கிறது; அதே நேரத்தில் ஒரு இயல்பான எதிர்வினை அங்கு நடந்தது. அதனால் தி.மு.க. பதவியை இழந்ததனால், பவர் இழந்தது என்று சொல்ல மாட்டோம்.
ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் பேசினார். அதைப்பற்றி நான் அதிகமாகப் பேசத் தேவையில்லை. ஆனால் தி.மு.க. ஒன்றுமே இல்லை என்பது போலச் சில போக்குகள் இருக்கின்றன.
சோவியத் ஒன்றியத்தின் தலைவரான ஜோசப் ஸ்டாலின் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார். இரண்டாம் உலகப்போரின் போது, "போப் ஆண்டவரை நம் பக்கம் கொண்டு வர வேண்டும்” என்று சொல்லும்போது, சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் என்ன சொன்னார் என்றால், “போப்பிடம் எத்தனை படைப்பிரிவுகள் உள்ளன?”. அதாவது, உங்களுக்கு எத்தனை எம்.பி.க்கள் இருக்கிறார்கள்? தொகுதி மறுவரையறை மசோதா விரைவில் வரப்போகிறது. தி.மு.க. என்ன நிலை எடுக்கப்போகிறது? இன்றைக்கு ‘தி இந்து'வில் கூட ஒரு சிறப்புச் செய்தி வந்திருக்கிறது. அதனுடைய விவரங்களுக்குள் நான் போகத் தேவையில்லை. என்ன எதிர்பார்க்கிறார்கள், கோரிக்கைகள் என்ன, எப்படி அணுகுவார்கள் என்பது பற்றி ‘தி இந்து'வில் இன்றைக்கு முதன்மைச் செய்தி வந்திருக்கிறது. எனவே, நாடு முழுவதும் இதைத்தான் பார்க்கிறார்கள்.
தி.மு.க. திடீரென்று மாறுமா
தி.மு.க. ஒன்றிய அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய போர்வையில் வரக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு என்ன நிலை எடுக்கப் போகிறார்கள், என்ன சொல்லப் போகிறார்கள், எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் எம்.பி.க்கள் என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் ஒரு முக்கியமான பிரதானமான விஷயமாக இருக்கிறது. சரியான முடிவு எடுப்பார்கள் என்றுதான் நான் நம்புகிறேன்.
இன்றைக்குத் தி.மு.க. பதவியை இழந்தாலும், பலத்தை இழக்கவில்லை. ஒரு முக்கியமான அகில இந்தியக் கட்சியாகத் தான் இருக்கிறது.
கலைஞர் அவர்களுக்கு டெல்லிக்குச் சென்று பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசை இல்லை; அதில் மிகவும் தெளிவாக இருந்தார். ஜெயலலிதா அவர்களுக்கும் அந்த ஆசை இருந்தது; அதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த கவனம் முழுமையாகத் தமிழ்நாட்டில் இருந்ததனால் தான், இந்த அளவுக்குக் கட்சியைப் பலமாக வைத்துக்கொண்டு, ஆட்சியில் இருந்தாலும் பலமுறை தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
அதே மாதிரிதான் முன்னாள் முதலமைச்சர் என் நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களும். அவர் கலைஞரின் கார்பன் காப்பி இல்லை. கார்பன் காப்பியாக இருப்பது நல்லது இல்லை. அவர் பாணியே வேறு; நடைமுறையில் செயலாற்றுவார். “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” தான் அவருடையதும். இன்றைக்கும் நாங்கள் நடைப்பயிற்சி போகும்போது பார்க்கிறேன், எப்படி உழைக்கிறார் என்று!
கட்சியைப் பாதுகாத்து வளர்த்து, வெற்றியிலும் தோல்வியிலும் சிறந்த முறையில் தொடர்ந்து தக்கவைப்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். அதனால் இன்றைக்கும் தி.மு.க. தொண்டர்கள், தலைவர்கள் என்ன பாராட்டுகிறார்கள் என்றால், அவர் வெறும் எழுதுவது மட்டுமல்ல, பேச்சு மட்டுமல்ல, அதில் சிறந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்து கட்சியை வளர்த்தார்.
அதனால்தான் அகில இந்தியக் கட்சி எதுவும் தமிழ்நாட்டில் 1967-க்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றவில்லை. இது இந்திய அரசியலின் ஒரு நிரந்தர அம்சமாகிவிட்டது என்று சொல்லலாம். பல மாநிலங்களில் இதைப் பார்க்க முடியாது. ஒரு மாநிலக் கட்சி, ஒரு பெரிய மாநிலத்தை முழுவதுமாக மாற்றிவிட்டு, அகில இந்தியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. ஒரு நாளும் இங்கே அதிகாரத்தைப் பிடிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. இதில் பெரியாருடைய பங்களிப்பு இருக்கிறது; பேரறிஞர் அண்ணாவினுடைய பங்களிப்பு இருக்கிறது;
கலைஞருடைய பங்களிப்பு இருக்கிறது; மு.க.ஸ்டாலின் அவர்களுடைய பங்களிப்பு இருக்கிறது. அது இன்னும் தொடரும். இந்தக் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
தோற்றது ஒரு அதிர்ச்சிதான்; அதை யாரும் எதிர்பார்க்கவில்லை, நானும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது ஒன்றும் புதிய பெரிய அனுபவம் இல்லை. அதனால் இந்தச் சூழ்நிலையில் கலைஞருடைய வாழ்க்கை, அரசியல், அவருடைய மேதைமை எல்லாம் நமக்குச் சிறந்த பாடங்களைக் கொடுக்கும்.
அதைச் சொல்லிவிட்டு, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், என்னை அழைத்தவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு விடைபெறுகிறேன். நன்றி!
இவ்வாறு இந்து என்.ராம் அவர்கள் பேசினார்.
Also Read
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!