Tamilnadu
நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள்.. : த.வெ.க அரசுக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
அடக்குமுறைகளால் கழக முன்னாள் அமைச்சர்களை மிரட்ட முடியாது; கழகத்தை கடுகளவும் கூட அச்சுறுத்த முடியாது! என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல் நிலையத்திற்கு கையெழுத்திடச் செல்லவிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களை, அவரது அறைக்குள்ளேயே தடுத்து நிறுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தி, புதிதாகக் கிடைத்த அதிகார வெறியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்கத் துப்பில்லை. மின் கட்டணக் குளறுபடிகளைச் சரிசெய்ய முடியவில்லை. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேண்டிய தண்ணீரையும் பெற இயலவில்லை. பயிர்கடன் தள்ளுபடி கோரி போராடும் விவசாயிகளுக்குப் பதில் சொல்லவும் முடியவில்லை. ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதை கேள்விகேட்க துளிகூட திராணியற்று “டைவர்ஷன் பாலிடிக்ஸ்” மட்டுமே தங்களுக்குத் தெரிந்த ஒரே நிர்வாகம் எனச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களது அறையில் நடைபெற்ற சோதனையின் முடிவில் “எந்த ஆவணங்களும் எடுக்கவில்லை” என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை என்றால், அவசர அவசரமாக “நள்ளிரவில்” இந்த ரெய்டு திட்டமிடப்பட்டதா? யார் விருப்பத்தை நிறைவேற்ற இப்படி ரெய்டு நடத்தப்பட்டது? கரூர் செல்வதற்கு முன்பு கைது செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், ஏற்கெனவே டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கு உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் டாஸ்மாக்கை வைத்தே இந்த பழிவாங்கல் நடவடிக்கை ஏன்? டாஸ்மாக்கை தனியாருக்கு விடும் செய்தியை திசைதிருப்ப இந்த ரெய்டா?
“மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை” என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் ரெய்டு முடிந்ததும் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரை மட்டுமல்ல, கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, எஸ்.எஸ். சிவசங்கர் எனத் தேடித் தேடி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே இப்படி அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
இதனைப் பார்க்கும்போது, “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அடக்குமுறைகளால் கழக முன்னாள் அமைச்சர்களை மிரட்டவும் முடியாது. கழகத்தினைக் கடுகளவு கூட அச்சுறுத்த முடியாது என்பதை நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கழகத்தை மிரட்ட நினைத்தவர்கள் அரசியல் களத்திலிருந்தே காணாமல் போனதுதான் கடந்தகால வரலாறு! “அரசியல் பழிவாங்கல்” ஒரு வழிப்பாதை அல்ல! இதை “Diverson” பாலிடிக்ஸ் செய்ய விரும்பும் தவெக அரசும், அதன் முதலமைச்சர் விஜய் அவர்களும் புரிந்து கொள்வது நல்லது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சங்கி எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு.. : தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“தோழர் நல்லகண்ணு சிலை திறப்பு.. கலைஞர் சொன்ன வார்த்தை” : உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!
-
“தமிழ்நாட்டின் உயர்சிறப்பு மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க அரசு!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
‘நீட்’ விலக்குப் போராட்டம்.. நெருப்பை அணையாமல் காத்தது திமுக : பாகம் 2-யை வெளியிட்ட முரசொலி தலையங்கம்!
-
'அ.முத்துலிங்கம் இயல் விருது' - ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கான அங்கீகாரம் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து!