Tamilnadu
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டத்திற்கு கனிமொழி எம்.பி ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது பேசிய கனிமொழி எம்.பி "இந்த நாட்டிற்கே வழிகாட்டியாகப் போராட்டம் நடத்திய மாணவர்களாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் நாங்கள்கூட வெளியேற்றப்பட்டிருக்கிறோம்.நாங்கள் எல்லாம் கேட்க முடியாத கேள்விகளைக் கேட்கும் சூழலிலும், அவர்களின் இடத்திற்குச் சென்று பார்க்க முடியாத சூழலிலும், அரசாங்கமே நேரடியாகத் தேடிவந்து போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இது மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.
நீட் தேர்வுக்கு எதிராக முதன்முதலில் போராட்டம் நடத்தியவர் அனிதா ஆவார்.நாம் முதன்முதலில் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புகழ்பெற்ற மருத்துவமனைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் யாரும் நீட் தேர்வு எழுதி வரவில்லை.
இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த மருத்துவர்கள் பலர் நீட் தேர்வு எழுதாதவர்களே ஆவர். இவர்கள் மருத்துவத் துறையில் ஆர்வம் கொண்டு முறையாக மருத்துவம் பயின்றவர்கள் ஆவர்.டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கும் தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கும் இடையே ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. டெல்லியில் உள்ளவர்கள் 'நீட் தேர்வை முறையாக நடத்துங்கள்' என்கிறார்கள்; ஆனால், நாமோ 'நீட் தேர்வே வேண்டாம்' எனப் போராடுகிறோம்.நிச்சயமாக மத்திய அரசு நம் வழிக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.
இந்தியைத் திணிக்கக் கூடாது என்று தமிழ்நாடு சொல்லும்போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு அவரவர் மொழி பாதித்ததும் இந்தி திணிப்பை எதிர்த்து போராடினார்கள்.அதேபோல்தான், நீட் தேர்வு தொடங்கிய நாள் முதலே நாம் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
தி.மு.க ஆட்சியில் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்டபோது, ஆளுநர் அதற்கு உடனடியாகக் கையெழுத்திடவில்லை. பல்வேறு தொடர் போராட்டங்களுக்குப் பிறகே, ஆளுநர் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு தற்பொழுது அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக) நிலுவையில் இருக்கிறது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள், 'காவல்துறையினர் எங்கள் மீது தடியடி நடத்துகிறார்கள், இதனால் காவல்துறையைக் கண்டே எங்களுக்குப் பயம் ஏற்படுகிறது' என்று கூறுகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் இருப்பவர்கள் பேசுவதை மட்டும்தான் இந்த மத்திய அரசு கேட்கும்போலும்!
நீட் தேர்வு வேண்டாம் எனத் தமிழ்நாட்டில் மாணவர்கள் தொடர்ந்து வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டின் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.நாம் டெல்லியில் இருக்கிறோமா அல்லது தமிழ்நாட்டில் இருக்கிறோமா என்ற அச்சம் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. பயத்தோடு போராட வேண்டிய ஒரு அவலநிலை இங்கே உருவாகியுள்ளது.
மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.இந்த விவகாரத்தில் யார் உங்களிடம் வந்து ஆதரவு கேட்கிறார்களோ இல்லையோ, நாங்கள் (திமுக) எப்போதும் உங்கள் பக்கமே நிற்போம். நீங்கள் எங்குப் போராடினாலும், உங்களுக்கு எந்த வகையான அச்சுறுத்தல் வந்தாலும், திமுகவும் நானும் உங்களுடன் எப்போதும் துணையாக நிற்போம்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
விஜய்க்கு ‘ஜனநாயகன்’ என்ற பெயர் ஒரு கேடா? கேவலம்! மகா கேவலம்! : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
‘இந்தியாவில் ஆஷஸ் டெஸ்ட்?.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!’
-
‘CJP கட்சியினருடன் 2-கட்ட பேச்சு வார்த்தை.. அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு.. நாளை முக்கிய முடிவு!’
-
பா.ஜ.க ஆட்சிக்குக் காட்டும் விசுவாசமா இது? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி!