Tamilnadu

“நீட் தடையை உடைப்பதற்கான படையாக DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்” : உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வரும் நிலையில் ”நீட் தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது;மாநிலங்களை நம்பும் காலம் வந்துவிட்டது!” என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி இந்து நாளிதழில் சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில்,அதில் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டங்கள், தேர்வு முறைகேடுகளுக்கு எதிரானவை மட்டும் அல்ல என்றும், திறமையின் ஒட்டுமொத்த அளவுகோலாக சித்தரிக்கப்பட்ட தேர்வின் உள்ளார்ந்த நெருக்கடிகளை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேர்வு முறை மீது லட்சக்கணக்கான மாணவர்கள் நம்பிக்கை இழப்பதானது, ஒட்டுமொத்த நாட்டின் மனசாட்சியையே உலுக்கும் செயலாகும் என்றும் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

நீட் முறைகேடுகளால் மட்டுமின்றி அதன் அடிப்படை சித்தாந்தத்தையே கேள்வி எழுப்பும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக முதலில் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடு என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். நீட் தேர்வின் குறைபாடுகள், அதன் நடைமுறைகள் தொடர்பானது அல்ல, மாறாக தேர்வின் நோக்கத்தையே கேள்வி கேட்பதாக உள்ளது என்றும், மாணவர்களின் போராட்டம் இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல வகையான மருத்துவ நுழைவுத் தேர்வுகளின் சுமையை குறைக்கும் என்றும், மருத்துவக் கல்விக்கான நன்கொடை கட்டணங்களை குறைக்கும், திறமையான மாணவர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆக முடியும் என்கிற மூன்று வாக்குறுதிகளின் அடிப்படையில் ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த மூன்று வாக்குறுதிகளும் தோல்வி அடைந்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ”நீட் தடையை உடைப்பதற்கான படையாக DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என கழக தலைவர் கட்டுரையை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது சமூகவலைத பதிவில், NEET தேர்வில் மட்டுமல்ல, NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்றைய the hindu கட்டுரை!

ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!

அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”