Tamilnadu

தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு குறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர், தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், "தூத்துக்குடி முத்துக்களுக்கான புவி சார் குறியீடு (GI) விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன? புவிசார் குறியீடுகள் தொடர்பான பதிவகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா, பதிவு செய்யப்பட்டதா அல்லது நிலுவையில் உள்ளதா?

இந்த புவிசார் குறியீடு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் என்ன? கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட புவிசார் குறியீடு வேண்டி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தற்போதைய நிலை என்ன?" என்று கேள்விகளை கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா, "தூத்துக்குடி முத்து உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் 2025, டிசம்பர் 9 ஆம் தேதி தூத்துக்குடி முத்துக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு 12 டிசம்பர் 2025 அன்று ஒரு முறைமைச் சரிபார்ப்பு அறிக்கை வழங்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட முறைமைச் சரிபார்ப்பு அறிக்கைக்கு விண்ணப்பதாரர் இணங்குவதற்கான ஒப்புதலை புவிசார் குறியீட்டுப் பதிவகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

விண்ணப்பதாரரிடமிருந்து இணக்கம் கிடைத்தவுடன், புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி விண்ணப்பம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து 128 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை பதிவு, முறைமை சரிபார்ப்பு அறிக்கைக்கு விண்ணப்ப தாரர்களின் விளக்கம், ஆட்சேபங்கள் பற்றிய விசாரணை உள்ளிட்ட நிலைகளில் இருக்கின்றன" என்று பதிலளித்துள்ளார்.

Also Read: டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!