Tamilnadu
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழுவில் பல்கலைக்கழக மான்ய குழுவின் பிரதிநிதி மற்றும் அரசின் மற்றொரு பிரதிநிதியை இணைத்து 5 பேராக உயர்த்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ”மரியாதைக்குரிய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, திராவிட மாடல் ஆட்சியின் போது, நெடிய சட்டப்போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றோம்.
அந்தச் சட்டத்தின் செல்லுபடியாக்கம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், துணைவேந்தர்கள் தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC -University Grants Commission) பிரதிநிதியை சேர்க்கும் நோக்கில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-இல் இருந்து 5 ஆக உயர்த்துவது குறித்து பேசுவதும், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு - உயர்கல்வித்துறை முன்னெடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல், ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய ஏற்பாடுகளை முன்வைப்பது - தமிழ்நாடு அரசின் சட்டநிலையையும், உயர்நீதிமன்றத்தில் அரசு முன்வைத்துள்ள வாதங்களையும் பலவீனப்படுத்தும்.
துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட்டு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், திராவிட மாடல் ஆட்சியில், உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற வெற்றியை, தமிழ்நாடு அரசின் - மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!