Tamilnadu
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, "குளம் வற்றிப்போனால், பறவைகள் அடுத்த குளத்தைத் தேடிப் போவது வழக்கம். ஆனால் குளத்தையே வற்றச் செய்துவிட்டு, இன்றைக்கு பறவைகள் அடுத்த குளத்தைத் தேடிப் போகின்ற அபூர்வத்தை, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அந்த கட்சியிலே பொறுப்பிலே இருந்தவர்களும், அடுத்த கட்சிக்கு ஓடுவதை, தாவுவதைக் கண்டு இன்றைக்கு தமிழ்நாடே வியப்படைந்திருக்கின்றது.
ஏன், இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் பொறுத்திருக்க முடியாதா? ஆனால் இன்றைக்கு, குதிரை பேர அரசியலுக்கு எடுத்துக்காட்டு, ஒவ்வொரு எம்.எல்.ஏ.-வும் த.வெ.க-வுக்கு தாவுவதுதான் என்பதை நாங்கள் அடித்துச் சொல்கிறோம்.
ம.தி.மு.க-வினுடைய பொதுக்குழுவிலே, வைகோ, 'இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், அவர்களை நான் வெற்றி பெறச் செய்கிறேன்' என்று த.வெ.க தலைவர் விஜய் சொன்னார் என்று வெளிப்படையாகச் சொன்ன பிறகு, அங்கே குதிரை பேரம், யானை பேரம், எல்லா பேரமும் அந்தப் பக்கம் நடந்திருக்கிறது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், அந்த குதிரை பேரத்துக்கு தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது காவல்துறை எந்த வழக்கும் பதியவில்லை.
ஊத்தங்கரை தொகுதியில் சுகுமார் என்ற வேட்பாளரை அறிவிக்கிறார்கள். அவர் நான்கு நாட்கள் தேர்தல் வேலை பார்த்த பிறகு, இளையராஜா என்பவர் அங்கு சென்று, 'நான் அந்தத் தொகுதியில் நிற்கிறேன்' என்று கூறி சீட் கேட்டு வாங்கிட்டு வந்து போட்டியிடுகிறார். அவர் எப்படிப்பட்ட குணநலன்களைக் கொண்டவர் என்பதை அப்போதே அவர்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.இப்போது அவர் என்ன சொல்கிறார் என்றால், திருநாவுக்கரசு என்பவர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், தனியாகப் பேச வருமாறு அழைத்ததாகவும் கூறுகிறார். எதற்கு என்று இவர் கேட்டதற்கு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போகிறோம், அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசு சொன்னாராம். அவர் எந்த அதிகாரத்தில் சொன்னார், என்னவென்றெல்லாம் இளையராஜா கேட்கவில்லை.
ஆனால், அங்கு எவ்வித பணப் பரிமாற்றமும் பேசப்படவில்லை; பரிமாறப்படவும் இல்லை. இருப்பினும், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே திருநாவுக்கரசு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை எவ்வாறு வாக்குமூலம் வாங்கியிருக்கும் என்பது நமக்குத் தெரியும்; அப்படி திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு நபரைக் கைகாட்டி, அவரிடமிருந்து இன்றைக்கு செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்தி போன்றவர்கள் மீது தொடர்ந்து அம்பு பாய்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால், முதலமைச்சர் விஜய் கரூருக்குச் செல்வதற்கு முன்பாகவே, செந்தில் பாலாஜியைக் கைது செய்துவிட வேண்டும் என்று அவர் போட்ட சபதமாகவே இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இங்கு குதிரை பேரம் நடந்ததற்கான எந்தவொரு அடையாளமும் கிடையாது. காவல்துறை அங்கு வழக்குப் பதிவு செய்ததே தவறானது. அதுவும் ஒரு புகாரின் அடிப்படையில், முறையான விசாரணை கூட நடத்தாமல் அவர்கள் அவசரமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
குதிரை பேர அரசியலுக்கு அத்தாட்சியாக, இன்றைக்கு தவெக ஆட்சிக்கு வந்தவுடனேயே நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கிறார்கள். உடனே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறார்கள்; அடுத்த நிமிடமே தவெகவில் இணைகிறார்கள். எனவே, சட்டமன்றத்தில் தங்களது பலத்தை 108 என்பதிலிருந்து 120 ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடுதான் அவர்கள் குதிரை பேர அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது இன்றைக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.
எனவே, ஒன்றிய அரசு இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 'வாஷிங் மெஷின்'என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு மற்றொரு விசயத்தையும் நாம் சேர்த்துச் சொல்லலாம். 'வாஷிங் பவுடர் நிர்மா' என்று ஒரு விளம்பரப் பாடல் வரும். அந்தத் தூளைப் போட்டவுடனேயே கறை போய்விடும் என்று சொல்வார்கள். அது ஏதோ ஒரு கறைக்கு வேண்டுமானால் பொருந்தும்.
அதுபோல, கறை படிந்தவர்களுக்கெல்லாம் வாஷிங் பவுடராக விஜய் செயல்படுகிறார்.சி. விஜயபாஸ்கர் மீது தற்போது நான்கு வழக்குகளும், எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது மூன்று வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எஸ்.பி. வேலுமணி போன்றவர்கள் தவெகவுக்கு வந்தால் அவர்கள் மீதும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இவற்றையெல்லாம் வெறும் சலவைத் தூள் போட்டு மட்டும் சுத்தம் செய்ய முடியாது என்பதால், இயந்திரத்தில் போட்டுத்தான் துவைக்க வேண்டும். அந்த இயந்திரத்திற்கும் 'விஜய்' என்றுதான் பெயர் வைத்துள்ளார்கள், அதாவது 'வாஷிங் மெஷின் விஜய்'.எனவே, விஜய் என்னும் வாஷிங் மெஷினில், விஜய் என்னும் வாஷிங் பவுடரைப் போட்டுத் துவைத்தால், யார் யார் மீது எல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் இருக்கின்றனவோ, அவர்கள் எல்லாம் புனிதர்களாகவும், புத்தர்களாகவும் மாறிவிடுவார்கள் போலிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது, ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது, டெல்லியின் ஆதிக்கம் இங்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, 'எங்களிடம் இருக்கக்கூடியவர்களை நீங்கள் அணுகி ஆதரவு தாருங்கள்' என்று கேட்டுக்கொள்வது எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவுதான். அந்தத் தொலைநோக்குக் கண்ணோட்டத்தில்தான், 'நான் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் சொன்னதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்றே தவெக ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்று நினைத்த நாங்கள், இன்று ஏன் அவர்கள் ஆட்சி கவிழ வேண்டும் என்று குதிரை பேரத்தில் ஈடுபடப் போகிறோம்? நிச்சயமாக ஈடுபட மாட்டோம். நாங்கள் மக்களைச் சந்தித்துதான் ஆட்சிக்கு வருவோமே தவிர, மக்களைச் சந்திக்காமல் ஆட்சிக்கு வரமாட்டோம். மக்கள் வாக்களித்துதான் நாங்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்வோம்; கொல்லைப்புற வழியாகச் சென்று ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் துளிகூடக் கிடையாது.
மதிமுக எம்.எல்.ஏ.க்களை அவர்கள்தானே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும், நாங்கள் ஏன் சொல்லப் போகிறோம்? மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யக் கூடாது என்று நாங்கள் தடுக்கவில்லை. 'மதிமுக எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் இல்லை' என்று சொல்வதைவிட வேறு வெட்கக்கேடு எதுவும் இல்லை. உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இல்லை. வைகோ பேசுவதைப் பொருட்படுத்தக் கூடாது; அவர் காட்டுக்கூச்சல் போடத் தெரியுமே தவிர, தமிழ்நாட்டிற்குப் பிரயோஜனமாக எதுவும் பேசத் தெரியாத, வெறும் கூச்சல் போடுகின்ற ஒரு நபர்தான்.வைகோ எங்கள் பெயரைச் சொல்லி யாரிடமாவது பணம் வாங்கியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல; அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
அடுத்த ஐந்தாண்டு காலமும் விஜய் தான் முதலமைச்சராக வருவார் என்ற ஜோசியத்திற்கெல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது. ஆயிரம் ஜோசியங்கள் இருக்கலாம், என்னென்னவோ ஜோசியங்கள் சொல்லலாம்; அந்த ஜோசியங்களில் ஒன்றுதான் வைகோ சொல்வதும்.மக்கள் மனதில் இடம் பிடித்த கட்சிதான் திமுக. நாங்கள் மக்களை நேரடியாகச் சந்தித்துதான் ஆட்சியில் அமர்வோமே தவிர, சிறு பிள்ளைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதைப் போலக் கொடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை.இன்று அங்கு நடைபெறுவது திரைப்படப் படப்பிடிப்புதான் . சட்டமன்றம் என்பது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நிலையம் போலாகிவிட்டது.
அங்கு முதலமைச்சர் கதாநாயகனாக நடித்து வருகிறார். நாங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக நடித்து வருகிறோம். எல்லோரையும் நடிகர்களாக மாற்றி இருக்கக்கூடிய பெருமை தவெக ஆட்சிக்குத்தான் சேரும். இங்கு எல்லோருமே நடிகர்கள்தான்; கதை, வசனம், இயக்கம் என எல்லாவற்றையும் சபாநாயகர்தான் இயக்குகிறார்.
இதற்கு கதாநாயகி யார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் சட்டமன்றத்திற்கே வராத ஒரு கதாநாயகி.தேர்தல் வரும்போது பாருங்கள்; ஒரு குளத்தில் தண்ணீர் இல்லை என்றால், தண்ணீர் உள்ள அடுத்த குளத்தைத் தேடிச் செல்வதைப் போலச் செல்வதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு நல்ல நண்பர்களும் அங்கே இருக்கிறார்கள். அந்த நல்ல நண்பர்கள் நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் எங்களிடம் வருவார்கள். அவர்கள் ஒன்றும் 'ஸ்லீப்பர் செல்கள்' கிடையாது; ஸ்லீப்பர் செல்களை எல்லாம் பயன்படுத்துவது முதலமைச்சர் விஜய்தான், நாங்கள் அத்தகைய வழிகளைப் பயன்படுத்த மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!