Tamilnadu
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற IPL விளையாட்டின் போது, தற்போதைய தவெக அமைச்சராக இருக்கும் கில்லி சரத் என்று அறியப்படும் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோவே அவருக்கு ஆப்பாக மாறியுள்ளது.
அண்மையில் இது பெரும் சர்ச்சையான நிலையில், அது குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரை என்று தனது குழந்தை மற்றும் மனைவியுடன் விளக்கம் அளித்திருந்தார். எனினும் அவரது விளக்கமே பலருக்கும் மேலும் சந்தேகத்தை வலுவடைய செய்திருந்தது. போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரது அமைச்சரவையில் இப்படி பட்டவருக்கு பதவி கொடுப்பது குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வரும் வண்ணமாக இருக்கிறது.
அமைச்சர் கில்லி சரத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கழக மாணவர் அணி சார்பில் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு :
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர்.
அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
Also Read
-
கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!