Tamilnadu
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான பாக்யராஜ், இன்று (ஜூன் 27) காலமானார். அவருக்கு வயது 73. மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், பின்னர் தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். திரைக்கதை அமைப்பில் புதுமைகளை அறிமுகப்படுத்தியதால், அவர் "திரைக்கதை மன்னன்" என்ற பெருமையையும் பெற்றார்.
சுவர் இல்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், எங்க சின்ன ராசா, ஆராரோ ஆரிராரோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி நடித்துள்ள பாக்யராஜ், பல தலைமுறை ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றவர். அவரது திரைப்படங்களில் நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் சமூகக் கருத்துகள் இயல்பாக இடம்பெற்றிருந்தன.
பாக்யராஜின் மறைவு செய்தி வெளியாகியதும், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்யராஜின் மறைவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ் அவர்கள். தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.”
Also Read
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!