Tamilnadu
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!
முரசொலி தலையங்கம் (25-06-2026)
விஜய் ஆணவம் அடக்கப்பட வேண்டும்!
ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியின் அலுவலகமாகச் சென்று சீட்டுப் பிச்சை எடுத்து அவர்களைக் காட்டி மெஜாரிட்டி இருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது யார் தயவிலும் நான் ஆட்சியில் இல்லை, மக்கள் தயவால்தான் ஆட்சியில் இருக்கிறேன்எ ன்று முதலமைச்சர் விஜய் சொல்வது ஆணவம் அல்லாமல் வேறு என்ன?
காங்கிரஸ் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகளும் முஸ்லிம் லீக்கும் அமைச்சர்கள் பதவி பெற்று விட்டார்கள், அதனால் தான் சொல்வதற்கு எல்லாம் ‘ஆமாம் சாமி' போடுவார்கள் என்பது ஆணவம் அல்லாமல் வேறென்ன?
‘நீங்கள் கேட்டது அமைச்சர் பதவி. இந்தா கொடுத்தாச்சு. அமைதியாக இரு' என்று சொல்லும் வகையில்தான், ‘உங்கள் தயவால் நான் முதலமைச்சர் ஆகவில்லை' என்று சொல்வதும். இப்படி ஆணவத்துடன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எந்த முதலமைச்சரும் பேசியது இல்லை.
பெரும்பான்மை பலத்துடன் வந்து அமர்ந்த முதலமைச்சர்கள் கூட, சபையில் இருக்கும் கட்சிகளைப் பார்த்து, ‘நீங்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். நாம் இணைந்து ஆட்சி செய்வோம்' என்று சொல்வார்கள். ஆனால், துள்ளுகிறார் விஜய். ‘நீயே அயிரை மீன்... உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை?' என்று ஒரு பழமொழி உண்டு. அத்தகைய ஆணவமானப் பேச்சு இது.
இவர் போய் கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினாராம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தோற்றுவிட்டாராம். பெருந்தலைவர் காமராசர் தோற்றபோது, வருந்தினார் பேரறிஞர் அண்ணா. அந்தப் பண்பை விஜய் போன்ற கெட்ட மதியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது. கொளத்தூரில் நன்றி தெரிவிக்கப் போன அவரைப் பார்த்து அந்தத் தொகுதியே அழுதது. அதுதான் உண்மையான செல்வாக்கு ஆகும். விஜய்க்கு ஏன் வோட்டுப் போட்டோம் என்று நித்தமும் இரவில் பெரம்பூர் தொகுதி மக்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். அதிகமான மின்வெட்டுத் தொகுதி பெரம்பூர்தான். முதலமைச்சர் விஜய் தொகுதி. அதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி? கோட் சூட்?
‘அப்பா எங்கே என்று தேடுகிறாராம் ஒருவர்”. குட்டிக் கதை சொல்கிறார் விஜய். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் இணையத்தில், சமூக வலைதளத்தில் பலரும் எழுதியதைப் படித்தால் சட்டசபைக்கே இனி விஜய் வரமாட்டார். கோட்டைப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டார். இந்த தலையங்கத்தில் மேற்கோள் காட்ட முடியாத வகையிலான பதிலடிக் கேள்விகளை பொதுமக்கள் கேட்கிறார்கள். 'அப்பா-மகன் பற்றிப் பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?' என்று கேட்கிறார்கள். பதில் வசனம் சொல்ல முடியுமா? சொன்னால் அது அவையையே அசிங்கம் ஆக்கி விடாதா?
மிகக் கேவலமான சூழலுக்கு தமிழ்நாட்டைக் கொண்டு வந்து விட்ட பாவத்துக்குப் பதில் சொல்ல வேண்டியவர் விஜய்தான்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலுரை தந்த முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தை இன்னமும் சினிமா சூட்டிங் போல நினைத்துக் கொண்டு நவரச காட்சிகளை அரங்கேற்றி இருக்கிறார். அவை நாராசமாக இருந்ததே தவிர நன்றாகவும் இல்லை. நியாயமாகவும் இல்லை. அவரது பல பிளாப் ஆன படங்களைப் போலத்தான் அவரது பதில் உரையும் இருந்துள்ளது.
•மின்வெட்டுக்குப் பதில் இல்லை.
•பயிர்க் கடன் ஏமாற்றத்துக்குப் பதில் இல்லை.
•பாலியல் வன்கொடுமைகளுக்குப் பதில் இல்லை.
•போதை மருந்துகள் அதிகமானதற்குப் பதில் இல்லை.
•த.வெ.க. நிர்வாகிகளே குற்றச் சம்பவத்தில் இடம்பெறுவதற்கு பதில் இல்லை.
•தூய்மைப் பணியை தனியாருக்குத் தாரை வார்க்கிறார்கள் என்பதற்குப் பதில் இல்லை.
•பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
•பள்ளிக் கூடங்களுக்குச் சென்று த.வெ.க. நிர்வாகிகள் ரீல்ஸ் போட்டு வருவதற்குப் பதில் இல்லை.
•முதலமைச்சர் நடித்த படங்களில் இருக்கும் ஆபாசமான பாட்டுகளுக்கு மாணவ, மாணவிகள் ஆட வைக்கப்படுவதற்குப் பதில் இல்லை.
•முதலமைச்சரின் படம் பள்ளி வகுப்பறைகளில் கட்டாயப்படுத்தி மாட்டப்படுவதற்குப் பதில் இல்லை. கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
- இப்படி எதற்கும் பதில் இல்லை. ஆனால் தன்னை சத்தியசீலனைப் போல, புனிதவானைப் போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் பேசி இருக்கிறார்.
அவர் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் மனைவி தாக்கல் செய்த வழக்கு இருக்கிறது. அவரது மனைவி வைத்த குற்றச்சாட்டுகள் மிகமிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் ஆகும். வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக அவர் மீது வழக்கு இருக்கிறது. உயர்நீதிமன்ற விசாரணையில் வருமான வரித் துறையால் உறுதி செய்யப்பட்டவை அவை. கரூரில் சினிமா சூட்டிங் எடுக்க ஏழு மணிநேரம் மக்களை காக்கவைத்து சோறு தண்ணீர் இல்லாமல் துன்புறுத்தி மூச்சுத் திணறி 41 உயிர்களைப் பலி தீர்த்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு சாட்சி சொல்லும் 19 காவலர்களை தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களுக்கு தூக்கியடித்துள்ளார் உள்துறையை கையில் வைத்துள்ள விஜய். இத்தகைய விஜய் தான் மகா யோக்கியரைப் போல சட்டமன்றத்தில் கொம்பு சுற்றுகிறார்.
குதிரை பேரம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்தவர் விஜய். அ.ம.மு.க. உறுப்பினரை தனது கட்சிக்கு மாற்றிக் கொண்டவர் அவர். தி.மு.க. கூட்டணியில் வென்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தந்து ஆதரவைப் பெற்றவர் அவர். இவை அனைத்தும் அரசியல் பொது ஒழுங்குக்கு முரண் ஆனது ஆகும். இப்படிப்பட்டவிஜய்க்கு அரசியல் நெறிமுறைகளைப் பற்றி பேசுவதற்கு உரிமை உண்டா?
தி.மு.க. மீது பழிபோட்டு ஆட்சிக் காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைக்கிறார் முதலமைச்சர் விஜய். இப்போதே நாட்டு மக்கள், அவருக்கு எதிராக கொந்தளித்து வீடியோ போட்டுக் கொண்டுள்ளார்கள். இப்படியே போனால் வீதிக்கு வந்து போராடுவார்கள். அடுத்து விரட்டி அடிக்கப் போகிறார்கள்.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!