Tamilnadu
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்துள்ள மஞ்சகரணையில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில், தற்போது வரை 5-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அமைச்சர் அருண்ராஜ் இதுவரை 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு :-
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
Also Read
-
‘புதிய தலைமைச் செயலகம்?.. 5 நாள் தான்.. போராட்டம் வெடிக்கும்’ : தவெக அரசுக்கு கெடு விதித்த மீனவர்கள்!
-
‘கரூர் கொடுந்துயரத்தின் ஒராண்டு நிறைவு.. மனிதத் தன்மையற்ற விஜய்’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தமிழ்நாட்டில் கூடுதல் ரயில் சேவைகள் : தயாநிதி மாறன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில்!
-
“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!