Tamilnadu
23 ஆம் புலிகேசி மந்திரிசபை : முதலமைச்சர் விஜய் தொடங்கி... : புட்டுபுட்டு வைத்த முரசொலி!
முரசொலி தலையங்கம் (08-05-2026)
23 ஆம் புலிகேசி மந்திரிசபை!
“ஒரு கோமாளி அரண்மனைக்குப் போவதால் அவன் அரசன் ஆகிவிட மாட்டான். அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும்” என்ற பழமொழியைச் சொல்லி, 'பதிமூன்றும் ஜோக்கராக வந்தால் என்ன செய்வது?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். தினந்தோறும் நடப்பது காமெடி மட்டுமல்ல, டிராஜிடி.
சுற்றுச் சூழல் அமைச்சருக்கு தனது துறையே தெரியவில்லை. 'சுற்றுலாத்துறை எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது'என்றார். இரண்டு தடவை இதையே சொன்னதும் நிருபர்தான் திருத்துகிறார். உடனே அவர், ‘ரீ டேக் போகலாமா' என்றார். ரீல்ஸ் மந்திரி சபைதான் இது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?
•அறநிலைய அமைச்சர் ரமேஷ் ஆய்வு என்ற பெயரால் முறுக்கு பொட்டலங்களை முகர்ந்து பார்க்கிறார். தயாரிப்பு தேதியைப் பார்த்து, ‘இது இந்த தேதியில் தான் தயாரிக்கப்பட்டதற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்கிறார். முறுக்கு செய்யும் ஒவ்வொரு இடத்துக்கும் அதிகாரியை அனுப்பி அவர்கள் பார்த்த பிறகுதான் சீல் வைக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாரா ரமேஷ்?
•குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து வரவில்லை என்ற ஆதங்கத்தில் ஒரு இளைஞர் கேட்கிறார். அதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் சொன்ன பதில் என்ன தெரியுமா?'நீங்க நல்லா சாப்பிட்டுட்டீங்க... நான் இன்னும் சாப்பிடல’என்கிறார் பார்த்திபன். பஸ் வரலை என்பதற்கு இதுதான் பதிலா? ' நீங்க நல்லா சாப்பிட்டுட்டீங்க... நான் இன்னும் சாப்பிடல' என்பதையே பத்து தடவை சொல்கிறார் பார்த்திபன். நிலைமையின் மோசத்தை புரிந்து கொண்டு போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த இளைஞரை போகச் சொல்கிறார். அந்த இளைஞரை போகவிடாமல் தடுத்து நிறுத்தி, 'நீங்க நல்லா சாப்பிட்டுட்டீங்க... நான் இன்னும் சாப்பிடல' என்கிறார் பார்த்திபன். அமைச்சர் இவர்.
•விஜய்யின் சினிமா நண்பர் ஸ்ரீநாத் இப்போது அமைச்சர் ஆகிவிட்டார். அவரிடம் கச்சத்தீவு பற்றி கேட்கிறார்கள். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பக்கத்தில் இருந்த இன்னொரு அமைச்சர் குமார், “நோ கமெண்ட்ஸ்...நோ கமெண்ட்ஸ்' என்று அவர் காதில் 'கத்தி'ச் சொல்கிறார். உடனே ஸ்ரீநாத்தும் 'நோ கமெண்ட்... நோ கமெண்ட்ஸ்' என்கிறார். நோ கமெண்ட்ஸ் என்று சொல்வதற்குத் தான் இவரை அமைச்சர் ஆக்கினார்களா?
•இன்னொரு இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி கேட்கிறார்கள். 'இப்போதைக்கு இதைப் பற்றி பேச வேண்டாமே' என்கிறார் அமைச்சர் ஸ்ரீநாத். இவர் எப்போது பேசுவார் அமைச்சர் பதவி போன பிறகா?
•இதைவிடக் கொடுமை தூத்துக்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீநாத், திருச்செந்தூர் தொகுதிக்கு போய் நன்றி சொல்ல, 'இது உங்க தொகுதி இல்லீங்க’என்று அந்த மக்கள் மண்டையில் தட்டி அனுப்பி வைத்துள்ளார்கள். •சூலூரில் 18 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் கொடூரம் நடக்கிறது. அது பற்றி தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் கேட்டால், உடனே சிரிக்கிறார். ‘நடந்திருப்பது மிகப்பெரிய கொடுமை. இனி இது போல் நடக்கக்கூடாது' என்றாவது சொல்ல வேண்டியதுதானே. சிரிக்கிறார். 'இது மாதிரியெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது' என்கிறார்.
•தனது துறையையாவது ஒழுங்காக கவனித்தாரா என்றால் அதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்குஉலகத் தொழில் நிறுவனங்களை அழைக்க ரீல்ஸ் போடுகிறார்தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா. இந்த ரீல்ஸை பார்த்துவிட்டு கம்பெனிகள் படையெடுத்து வருவார்கள்.
•அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் கூட தற்குறி கூட்டத்தில் சேர்ந்ததும் அதைப் போலவே ஆகிவிட்டார். சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேள்வி எழுப்பினால், "உங்க வீட்டுல எல்லாரும் நல்லாத் தானே இருக்காங்க... உங்க குழந்தைக- ளுக்கு ஏதும் பிரச்சினையா?” என்று கேட்கிறார் செங்கோட்டையன். பாலியல் வன்கொடுமை எல்லா வீட்டிலும் வரிசையாக நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பாரா?
•ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களை முதலமைச்சர் விஜய் மதிப்பதே இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தது முதல், முதலமைச்சர் ஆனது வரையிலும் அதன் பின்னரும் ஊடகங்களைச் சந்திக்கவே இல்லை. இது பற்றி கேட்டால் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், “செய்தியாளர்களைச் சந்தித்துத் தான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை. செய்தியாளர்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று பெஞ்ச் மார்க் வைக்காதீர்கள்”என்று சொல்லி இருக்கிறார். அப்படியானால் இவர் எதற்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதானே? தலைமைச் செயலகத்தில் இருக்கும் செய்தியாளர் அறையை மூடிவிட வேண்டியதுதானே?
•கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜனுக்கு, ‘ஆய்வு பண்றோம்' என்பதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை. 'சார் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க' என்று கையெடுத்து கும்பிடுகிறார்.
•‘முதலமைச்சர் பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்’என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். இவரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது?
•அமைச்சரவையில் இரண்டாவது இடம் என்று சொல்லப்படும் அமைச்சர் புஸ்சி ஆனந்த், எதைக் கேட்டாலும் கையெடுத்து கும்பிடுகிறார். 'விஜய் சாரை இட்டுனு வந்து, இட்டுனு போறதே கஷ்டம்' என்ற புகழ்பெற்ற பொன்மொழியால் புகழ் பெற்றவர் இவர்.
•‘முதல் போட்ட அமைச்சர்' என்று ஊடகங்களால் அடையாளப்படுத்தப்படும் ஆதவ் அர்ஜூனா, கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுபவரைப் போல பேசிக் கொண்டே இருக்கிறார்.
•இவ்வளவு பேரும் இப்படி என்றால் முதலமைச்சர் விஜய்க்கு, தான் முதலமைச்சர் ஆகிவிட்டோம் என்ற நினைப்பே வரவில்லை. இன்னமும் தேர்தல் பரப்புரையைத்தான் செய்து கொண்டுள்ளார். பழைய பேச்சையே பேசி வருகிறார். ஒரு படத்தில் கவுண்டமணி கோட்டைச்சாமியாக நடிப்பார். தூக்கத்திலேயே எல்லா காரியத்தையும் தப்புத் தப்பாகச் செய்வார். அதைப் போல, 'கோட்டைச்சாமி எந்திரி... இப்போ நீங்கதான் முதல் மந்திரி' என்று யாராவது விஜய்யை எழுப்பி விடுங்கள்.
Also Read
-
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம் : தி.மு.க கண்டனம்!
-
3 மாதங்களாவது தாங்குமா த.வெ.க ஆட்சி? : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“அநாகரிகமான பேச்சு” : அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சாடல்!
-
திருச்சி ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி : கைது செய்த காவல்துறை!
-
பதில் சொல்ல துப்பில்ல ; அதை விட்டுட்டு...! : செங்கோட்டையனுக்கு தி.மு.க IT WING கண்டனம்!