Tamilnadu
சென்னை தலைமைச் செயலகம் அருகே பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் : நடந்தது என்ன?
சென்னை துறைமுகம் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் இருந்து இன்று காலை திடீரென துர்நாற்றத்துடன் கூடிய அடர்ந்த புகைமூட்டம் வெளியேறத் தொடங்கியது. நண்பகலிலும் இந்த புகைமூட்டம் காற்றின் மூலம் வேகமாகப் பரவி, தலைமைச் செயலகம், ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை முழுவதையும் மேகமூட்டம் போலச் சூழ்ந்தது.
சாலையெங்கும் பரவிய இந்த நச்சுப் புகையால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குக் கடுமையான மூச்சுத்திணறல், இருமல், குமட்டல், நெஞ்சு எரிச்சல், கண் மற்றும் உடல் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மக்கள், முகத்தில் கைக்குட்டைகளைக் கட்டிக்கொண்டும், கார்களின் கண்ணாடிகளை முழுமையாக மூடிக்கொண்டும் அப்பகுதியைக் கடந்து சென்றனர்.
காற்றில் பரவிய வாயுவின் காரணமாக, தலைமைச் செயலகத்திற்குள் இருந்த அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்தத் திடீர் விபத்து குறித்து சென்னை துறைமுக நிர்வாகத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "துறைமுக வளாகத்தில் கப்பலில் இருந்து இறக்கி வைக்கப்பட்டிருந்த 'சல்ஃபர்' (கந்தகம்) ரசாயனக் குவியலில், அதிக வெயிலின் தாக்கம் காரணமாக வேதிவினை ஏற்பட்டுப் புகையாக வாயுக்கசிவு வெளியேறியுள்ளது. துறைமுகத்தில் எந்தவிதமான தீ விபத்தும் ஏற்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாயுக்கசிவு குறித்த தகவல் வெளியானதும், தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் உடனடியாகத் துறைமுகப் பகுதிக்கு விரைந்தன. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், சல்ஃபர் குவியலின் மீது ரசாயனப் பொடிகளைத் தூவியும், தண்ணீர் பீச்சி அடித்தும் வாயுக்கசிவைத் தணிக்கும் பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர்.வீரர்களின் தீவிர நடவடிக்கையைத் தொடர்ந்து, சல்ஃபர் வாயு வெளியேறுவது தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், துறைமுகத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவு குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். "விதிமீறலோ அல்லது தவறோ நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகரின் மிக முக்கியப் பகுதியான தலைமைச் செயலகம் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த வாயுக்கசிவுச் சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முத்தமிழறிஞர் கலைஞர் 103 : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பட்டியல் உள்ளே!
-
எது நடந்தாலும்.. 6 மாதம் கழித்து தான் கேள்வி கேட்ணுமா? : முதல்வர் விஜய்க்கு கீதா ஜீவன் காட்டமாக கேள்வி!
-
”இதை யாரும் கேட்கக் கூடாதா? இதுதான் ஊழல் ஒழிப்பா? உங்கள் வேட்பாளரை பாருங்கள்” : அப்பாவு கடும் விமர்சனம்!
-
”பிஞ்சு மனதில் நடத்திய அரசியல் வன்முறை.. இப்போது வருத்தப்படும் மக்கள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“பிரச்சார Mode-ல் இருக்கும் விஜய்; தமிழ்நாட்டின் பாதுகாப்புச் சக்தி திமுக” : எழிலன் நாகநாதன் பேட்டி!