Tamilnadu
அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த த.வெ.க மருத்துவ அணி நிர்வாகி : வலுக்கும் கண்டனங்கள்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டி என்னும் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குவாரியில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி, வடமாநிலத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி மதியம் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் என்ற தொழிலாளியின் கை, எதிர்பாராதவிதமாக அங்குள்ள இயந்திரத்தில் மாட்டித் துண்டானது. வலியால் துடித்த அவரை, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகச் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது, துண்டான அவரது கையைப் பதப்படுத்தப்பட்ட ஐஸ் பெட்டியில் வைக்காமல், சாதாரண பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது நிர்மலின் உறவினர்களுக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறையாகப் பதப்படுத்தப்படாமல் கொண்டு செல்லப்பட்டதால், துண்டான கையை மீண்டும் பொருத்த இயலாமல் போனதாகவும் தகவல் வெளியாகி, இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குச் சென்ற தவெக மருத்துவ அணி மாவட்டப் பொறுப்பாளர் வாசுதேவி, சமூக வலைத்தளங்களில் பரவுவது பொய் செய்தி என்று கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு முறைப்படிதான் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வெள்ளைக் கோட் அணிந்து கொண்டு மருத்துவமனையில் அவர் கொடுத்த இந்த பேட்டி, தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒரு நபர், அரசு மருத்துவமனைக்குள் சென்று எவ்வாறு ஆய்வு செய்யலாம், அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யார் என்றும், விஜய் கட்சியின் உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடத் தொடங்கியுள்ளனரா என்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.
“இதை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இதுபோன்ற நிர்வாக தலையீடுகளை இவர்களே கையில் எடுத்து அரசு மருத்துவர்களுக்கு அவப்பெயரை உண்டாக்குவார்கள். மாவட்ட செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது?” என ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!