Tamilnadu
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பஷீர் அகமது. இவருடைய மகன் ஹாஜா முகைதீன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் செய்திப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், உணவருந்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு கஞ்சா வழக்கில் கைதாகிப் பிணையில் வெளிவந்திருந்த சலீமின் மகன் அப்துல் பாசித் தலைமையில், மூன்று பேர் கொண்ட கும்பல் ஹாஜா முகைதீனின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது.
அவரது மாமியார் கதவைத் திறந்தபோது, அக்கும்பல் ஹாஜா முகைதீனிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளது.உடனே வீட்டுக்குள்ளிருந்த ஹாஜா முகைதீன், வாசலில் இருந்த கேட் அருகே சென்று விசாரித்துள்ளார்.
அப்போது அப்துல் பாசித், தன்னை கோவிலூரைச் சேர்ந்த ஒருவர் தாக்கிவிட்டதாகவும், அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் புகாரைப் பெற மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், 'நீங்கள் வந்து இதைப் பற்றிக் கேளுங்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிக் கதவைத் திறந்து ஹாஜா முகைதீன் வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தபோதே, அப்துல் பாசித் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பாட்டிலால் அவரது தலையில் அடித்துள்ளார். மேலும், அந்த கஞ்சா கும்பல் பாட்டிலால் ஹாஜா முகைதீனின் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கொடூரமாகக் குத்திக் காயப்படுத்தியதுடன், அவரிடமிருந்த கைப்பேசியையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும், பலத்த காயமடைந்த செய்தியாளரை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, ஹாஜா முகைதீன் தற்போது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?
-
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி
-
“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!
-
பரந்தூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? – பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
-
“தமிழர்கள் படுகொ* செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது; த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி கேள்வி!