Tamilnadu
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் த.வெ.க அமைச்சர் : ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகப் புகார்!
முருகப்பெருமானின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு, திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தற்போதைய த.வெ.க அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார் அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் நேற்று முதல்முறையாக மதுரைக்கு வருகை தந்தார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து அவர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்தார்.வழக்கமாக இக்கோயிலின் நடை பகல் 1:00 மணிக்குச் சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4:00 மணிக்குத் திறக்கப்படும். 1:00 மணிக்கு நடை சாத்தப்படுவதை முன்னிட்டு, பகல் 12:45 மணிக்கே கோயிலுக்குள் உள்ள சில வாயில்களின் கதவுகள் சாத்தப்படுவது நடைமுறையாகும்.
ஆனால் நேற்று, அமைச்சர் நிர்மல்குமார் கோயில் வாசலுக்குப் பகல் 12:57 மணியளவில் வருகை தந்தார். அவரை வரவேற்கக் கோயில் துணை ஆணையர் ஞானசேகர், சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலர்கள் அங்கு காத்திருந்தனர்.பின்னர், கோயிலுக்குள் அவர் பகல் 1:00 மணிக்கு நுழைந்தார். அங்கு அவருக்கு அறங்காவலர் சண்முகசுந்தரம், கோயில் அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோயில் சிவாச்சாரியார்கள் அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்ற அவர், பகல் 1:00 மணிக்கு மேல் மூலஸ்தானத்திற்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அமைச்சருடன் ஏராளமான கட்சியினர் வந்திருந்ததால், ஏற்கனவே கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.
தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்துவிட்டு, மதியம் 1:20 மணியளவில் கோயிலை விட்டு வெளியேறினார். பின்னர் 1:30 மணியளவில்தான் நடை சாத்தப்பட்டது. இது அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, த.வெ.க தொண்டர்கள் சிலர் அமைச்சர் நிர்மல்குமார் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். உடனடியாக அங்கிருந்த கோயில் பணியாளர்கள், மூலஸ்தானத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினர். எனினும், அதனைக் கண்டுகொள்ளாத கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து தங்களது கைப்பேசிகளில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!