Tamilnadu
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
சென்னை கீழ்பாக்கம் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளர் ஒருவர் மீது டி.ஐ.ஜி விஜயலட்சுமி என்பவர் காலணியை எடுத்து வீசியும், காலணியால் பலமுறை தாக்கியதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எனவே டி.ஐ.ஜி. விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளர் ஒருவர் மீது டி.ஐ.ஜி விஜயலட்சுமி என்பவர் தனது காலணியை எடுத்து வீசியும், காலணியால் பலமுறை தாக்கியதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. காவல்துறை உயர் அதிகாரியின் இந்த சட்டவிரோத மனித உரிமை மீறல் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
அமைச்சுப் பணியாளர்கள் இ-ஆபிஸ் நடைமுறையில் ஒரு கோப்பை உயர் அதிகாரிகளுக்கு கணிணி வாயிலாக அனுப்பும் போது அதற்கான எண்கள் தரப்படும். அந்த வகையில் அமைச்சுப் பணியாளர் டி.ஐ.ஜி. விஜயலட்சுமிக்கு ஒரு கோப்பை அனுப்பி அதற்கான எண்ணை தந்துள்ளார். அப்போது அந்த எண் தனக்கு ராசியல்லை என்று கூறி தனது காலணியை எடுத்து அமைச்சுப் பணியாளரை பல முறை தாக்கியுள்ளார்.
சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க வேண்டிய காவல்துறையின் உயர்அதிகாரி மனித மாண்புகளை அவமதித்தும், சட்டத்திற்கு விரோதமாகவும், அறிவியலுக்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை இயக்குநரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, அமைச்சுப் பணியாளரை காலணியால் தாக்கிய டி.ஐ.ஜி. விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அமைச்சுப்பணியாளருக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும், தமிழ்நாடு காவல்துறையில் இதுபோன்ற அதிகார அத்துமீறல் இனி நடைபெறாமல் தடுக்கவும், காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கும் உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஊழியர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!