Tamilnadu

”பின்வாங்கிய தவெக அரசு.. அரசுப்பணியில் ராதன் பண்டிட்.. சட்டமன்றம் வரை எதிரொலித்த கடும் எதிர்ப்பு!”

மதச்சார்பற்ற அரசாக செயல்படக்கூடிய அரசு நிர்வாகத்தில் முதலமைச்சர் விஜயின் தனி ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றி வேலை தமிழ்நாடு அரசின் சார்பாக நேற்று (மே 12) முதலமைச்சரின் சிறப்பு அரசியல் ஆலோசகராக நியமித்து அரசாணை வெளியிட்டனர்.

முக்கியமான அரசின் முடிவுகளையும் சிக்கலான காலகட்டத்தில் அரசுக்கு சரியான வழிகளைக் காட்டக்கூடிய அரசு நலத்திட்டங்களில் முடிவுகளைக் கையாளக்கூடிய இத்தகைய பதவியில் ஒரு மதரீதியான பிற்போக்கு விசயங்களையும், அறிவியல் ரீதியாக எந்த ஒரு கருத்தையும் கையாளாமல் ஜோதிட ரீதியாக ஒரு கருத்தை அணுகும் நபரை பதவியில் அமர்த்தியது கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

குறிப்பாக, திமுக கூட்டணிக் கட்சிகளாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத தவெக அரசிற்கு நல்லெண்ண அடிப்படையிலும் பின்புறமாக பாஜக புகுந்துவிடக் கூடும் என்ற அச்சத்திலும் ஆதரவு தெரிவித்த விசிக, CPI, CPIM மற்றும் IUML உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்வினையாற்றின.

இதுகுறித்து வழக்கம்போல பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்தார் முதலமைச்சர் விஜய். இந்நிலையில், இன்று (மே 13) தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டப்பேரவை கூடியது. அப்போது, தவெக ஆதரவு தெரிவித்திருந்தாலும், இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு பேசிய விசிக எம்.எல்.ஏ வன்னியரசு, “ஜோதிடம், பில்லிசூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளுக்குச் சற்றும் இடம் தராமல், அறிவியல் சிந்தனையை வளர்க்கும் திட்டங்களுக்கு இந்த புதிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தனிச் சட்டத்தைத் தமிழ்நாட்டிலும் உடனடியாகக் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தி பேசினார்.

இதே போன்று, IUML, கொமதேக, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டோரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், ”ஜோதிடத்தில் விஜய்க்கு நம்பிக்கை இருந்தால் தனியாக அவரை ஆலோசித்துக் கொள்ளட்டும்? ஏன் அரசுப் பதவி தருகிறார்? ஜோதிடரை முக்கிய நபராக முன்னிறுத்தி இளையோருக்கு தவறான வழி காட்டுகிறார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நியமனத்தில் கடும் அதிருப்தி இருக்கிறது” என கடுமையாக தனது கண்டனத்தை சட்டப்பேரவையிலேயே பதிவு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளெல்லாம் முடிந்த பிற்பாடு சிறிது நேரத்தில், முதலமைச்சரின் தனி ஜோதிடராக நியமிக்கப்பட்ட ராதன் பண்டிட்-ன் நியமனத்தை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது. இப்படி தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சரியான வழிகாட்டல் இல்லாமல் திணறி வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று தனிமனிதரான அவரது ஆஸ்தான ஜோதிடரை அரசுப்பணியில் யாருடைய ஆலோசனையில் பெயரில் நியமித்தார். ஒருவேளை தனக்கு ஆலோசனை வழங்கிய ஜோதிடருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அரசின் முதன்மையான இடத்தில் அவரை வைக்க முன்வந்து விட்டாரா என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல், போகப் போக கற்றுக்கொண்டு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவார் என்று பார்த்தால், தொடக்கம் முதலே பிற்போக்கான விசயங்களை அரசு நிர்வாகத்தில் புகுத்த நினைப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

மக்களுக்கான நல்ல அரசு என்பது, ஒரு சார்பின்மையில்லாமல் மத ரீதியாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக சிந்தித்து மக்களையும், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனை முதலமைச்சர் விரைவில் கற்றுக்கொள்வாரா என்பதனை பார்ப்போம். இல்லையெனில் காலமே தனது பதில்களால் கற்றுக்கொடுக்கும்.

Also Read: “Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்த தவெகவின் Dirty Politics” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!