Tamilnadu

”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுப்போம் என கூறியிருந்தார். அதன்படி, திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்தக் கோரி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி த்வெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மறு எண்ணிக்கை நடத்த முடியாது... தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூதும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை... இதுதொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என விளக்கமளித்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வு, இன்று தீர்ப்பளித்தது.

தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட வாக்களிக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தபால் வாக்குகள், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்று பாதுகாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு வந்ததாகக் கூறப்படும் தபால் வாக்கை, பிரிக்காமல் சீல் வைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த உத்தரவை வாக்கு மறு எண்ணிக்கை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகவோ, சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றது செல்லாது என்றோ கருத முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம், சீனிவாச சேதுபதி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஏற்கனவே பெரும்பான்மை இல்லாமல் தவெக அரசு தவித்துவந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளான CPI, CPIM, விசிக உள்ளிட கட்சிகள் ஆதரவளித்தாலேயே முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார்.

தற்போது தமிழ்நாட்டையே தேர்தல் முடிவன்று பரபரப்புக்களாக்கி இறுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம் எல் ஏ-வுக்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்தது அந்தக் கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!