Tamilnadu
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் அனைவரும் நேற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் அவர்களும், துணைச் சபாநாயகராக எம். ரவிசங்கர் அவர்களும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சட்டப்பேரவை மரபுப்படி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களும் இணைந்து, சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர் அவர்களைச் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய சபாநாயகரை வாழ்த்தி அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:-
”தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய எங்கள் தலைவர்களை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன். என்னை இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, 1.54 கோடி வாக்குகளைத் தந்து வெற்றிபெறச் செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்தக் கூட்டணி வெற்றிக்காக அயராது உழைத்த அனைத்துக் கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சார்பாக, பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டோம். அதன் தொடர்ச்சியாக, இன்றைய முதல் நடவடிக்கையாகப் பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பேரவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு எங்கள் தலைவர் சார்பில் மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவையின் மரபுகளும் விதிகளும் தங்களுக்குப் புதியவை அல்ல.இந்த முறை எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லும் பெரும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது.
முதலமைச்சர் விஜய், நேற்று எங்கள் தலைவர் உள்ளிட்ட பிற தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று சந்தித்தார். அந்தச் அரசியல் மரபு சட்டமன்றத்திலும் தொடர வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் வெறும் 'எதிரிக் கட்சியாக' இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான 'எதிர்க்கட்சியாக' நிச்சயம் செயல்படும். கழகம் என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்.தமிழ்நாடு சிறப்பாக முன்னேற இந்தப் பேரவையில் எடுக்கப்படும் முடிவுகளும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களும், சட்டங்களுமே முக்கியக் காரணம். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும், இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய வகையிலும் இந்தப் பேரவை சிறப்பாகச் செயல்பட வேண்டும்
இந்தப் பேரவையில் ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என நாம் எதிரெதிர் வரிசைகளில் அமர்ந்திருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் முன்வரிசையில் நின்று ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதையே தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எங்கள் தலைவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிக்கடி கூறியது போல, 'இது நமது அரசு அல்ல, இது மக்களுக்கான அரசு'. அதேபோல், இந்தப் புதிய அரசும் அனைவருக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என விழைகிறேன்.எங்களுடைய திராவிட மாடல் அரசு, தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே பணியாற்றியது. அதே தார்மீக அடிப்படையில், இந்தப் புதிய அரசும் தங்களுக்கு வாக்களிக்காத மக்களையும் உள்ளடக்கிய 'அனைவருக்குமான அரசாக' அமையும் என நம்புகிறேன்.
பாஜக ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்கத்தில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்படவில்லை; ஆனால், தமிழ்நாட்டில் அந்த மரபு போற்றப்பட்டது.அடுத்து விரைவில் ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார். ஏற்கனவே நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிகழ்ந்த சிறு தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய தவறுகள் மீண்டும் நடப்பதை நாங்களும் அனுமதிக்க மாட்டோம்.
வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்!
இவ்வாறு அவர் பேசினார்.
Also Read
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!