Tamilnadu
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களை த.வெ.க வென்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வந்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ஆளுநர் வழி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து, தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்கொள்ள நேரிடும் என்ற அச்சுறுத்தலின் பேரில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்துபேசிய பிறகு, வெளியில் இருந்து த.வெ.க.விற்கு ஆதரவு தருவதாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.
அதனையடுத்து, த.வெ.க தலைவர் என்கிற முறையில் நேற்று (மே 10) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சராக பதவியெற்றுக் கொண்டார் விஜய்.
தொடர்ச்சியாக, இன்று (மே 11) 17ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி, முறையே முதலமைச்சராக விஜய்யும், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினும் உளமாற உறுதியேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
அதன் பின், அகர வரிசைப்படி தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், மரியாதை நிமித்தமாக இன்று (மே 11) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.
அப்போது, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை வாசல் வரை சென்று கட்டியணைத்து வரவேற்று, இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்துபெற வந்த முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று பொன்னாடைப் போர்த்தி, வாழ்த்துகளை தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க.வின் 75 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை பறைசாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க 75’ என்ற நூலை முதலமைச்சர் விஜய்க்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!