Tamilnadu
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பயணித்து வந்தது. மாநில அளவில் தனித்த செல்வாக்கு குறைவாக இருந்தாலும், பாசிச எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்திய காரணத்தால் காங்கிரஸ் கட்சியை திமுக தொடர்ந்து அரவணைத்து கூட்டணியில் வைத்திருந்தது.
குறிப்பாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான எம்.பி. இடங்கள் கிடைத்ததோடு, 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை விட அதிக இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டன. பல தொகுதிகளில் திமுக கூட்டணியின் வலிமையாலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வெற்றி பெற்றது 5 இடங்களில் மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில், விஜய் தலைமையிலான தவெக மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது அதே கட்சியுடன் கூட்டணியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக விமர்சித்து வந்த ஒருவருடன் திடீரென கூட்டணி அமைத்தது ‘சந்தர்ப்பவாத அரசியல்’ எனக் காங்கிரஸ் கட்சியினரே விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், “காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும் என தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :- “அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது.
எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.
குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.
சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுகழகம் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும்.
ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன.
இரண்டு தேர்தல்களில் ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம்.
தோல்வி எங்களுக்கு புதிதல்ல!
துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல!
ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்!
காலம் பதில் சொல்லும்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!