Tamilnadu
Delimitation: புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் படுதோல்வியடைந்ததை அடுத்து நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை தொகுதி மறுவரையறை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மதோசாவை தோல்வியடை உறுதியானையாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தொகுதி மறுவரையறை எனும் கருப்புச் சட்டத்திற்கு எதிரான நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து, இந்த வெற்றியைப் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம்.
மாநில முதல்வர்கள் - எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தினோம். நேற்று முன்தினம் கருப்புக் கொடி ஏற்றி, கருப்புச் சட்ட நகலைக் கொளுத்தினேன்!
நேற்று திண்டுக்கல்லில் வெற்றிக்கான வெடியைக் கொளுத்தினேன்! தீ பரவட்டும் என்று சொன்னேன். அது பார்லிமெண்ட் வரை பற்றிக் கொண்டது. 50, 60-களில் பார்த்த பழைய தி.மு.க.வைப் பார்க்க வேண்டி வரும் என்று எச்சரித்தேன். இதுதான்டா தி.மு.க. பாருங்கள் என்று நேற்று ஸ்ட்ராங்காகக் காட்டியிருக்கிறோம்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில், முழுக்க முழுக்க பா.ஜ.க.வுக்குச் சாதகமாகக் கொண்டு வரப்பட்டது கருப்புச் சட்டம். கருப்புச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்த அனைவருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சராக என்னுடைய நன்றி! நன்றி! நன்றி!
முக்கியமாக, இதில் முழுக்க முழுக்க என்னுடன் நின்ற தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்ல வேண்டும்! பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற மாறுவேடத்தில் இந்தச் சட்டத்தைப் பா.ஜ.க. கொண்டு வரப் பார்த்தார்கள்.
இந்த ஏமாற்றுத் திட்டத்தை முன்னின்று தோற்கடித்ததே பெண்கள்தான்! அவர்களுக்கு என்னுடைய சல்யூட்! இந்தியா கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்ற காரணத்தினால், இது சாத்தியமாகியிருக்கிறது.
வடக்கு – தெற்கு என நமக்குள்ளே பிளவை ஏற்படுத்தி, சண்டை போட்டுக் கொள்ள வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்குச் சரியான சம்மட்டியடி கிடைத்திருக்கிறது. 12 ஆண்டுகளில் முதல் முறையாகப் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்திருக்கிறது!
பா.ஜ.க. இனி நாடு முழுக்கப் பெறப் போகும் தோல்விகளுக்கான தொடக்கம் இது! எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான தொடக்கம் இது! நாம் ஒன்றுபட்டால் வெற்றி உறுதி என நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். அது உண்மை எனக் காட்டியிருக்கும் தொடக்கம் இது!
நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் “பெண்கள் இடஒதுக்கீட்டிற்கும் இந்த மசோதாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.தொகுதி மறுவரையறை ஒரு தேச விரோதச் சட்டம். இதை அனுமதிக்க மாட்டோம். இதை அனைவரும் சேர்ந்து தோற்கடிப்போம் என ராகுல்காந்தி தெரிவித்தார்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கும் நன்றி
மம்தா பானர்ஜி, அகிலேஷ், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி, சுப்ரியா சுலே, நவீன் பட்நாயக், ஹேமந்த் சோரன், ஃபரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோருக்கு நன்றி டி. ராஜா, எம்.ஏ. பேபி, கே. சந்திரசேகர ராவ், சிரோமணி சுக்பீர் சிங் பாதல் ஆகிய தேசியத் தலைவர்களுக்கும் நன்றி! பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோருக்கும் நன்றி!
தமிழ்நாட்டில் இருக்கிற நம்முடைய கொள்கைத் தோழமைகளான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்! இப்போது நாம் பெற்றிருப்பது பாதி வெற்றிதான்!
2001-ஆம் ஆண்டில் செய்தது போன்றே, இப்போதும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2051 வரை, தொகுதி எண்ணிக்கையை மறுவரையறை செய்வதைத் தள்ளி வைக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்!
2023-ஆம் ஆண்டு நாம் ஆதரித்து நிறைவேற்றிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இப்போது இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கே அமல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறைச் சட்டம், தமிழ்நாட்டின் துரோகிகள் யார் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறது.
அப்படித் துரோகம் செய்த பழனிசாமியின் அடிமைக் கும்பலுக்குத் தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்திருக்கிறது. பழனிசாமி டெல்லியின் ஏஜெண்ட் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது!
நம்முடைய திராவிட இயக்க வரலாறு என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தத்திற்குப் போராடி, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது தி.மு.க.! எப்போதெல்லாம் இந்தித் திணிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் உறுதியாகப் போராடி வென்றது தி.மு.க.!
தமிழ்நாட்டின் உரிமைகளை, பிரதிநிதித்துவத்தைத் தடுக்க நினைத்ததைப் போராடி வென்றிருக்கிறது தி.மு.க.! இந்தியாவே இன்றைக்கு தி.மு.க குறித்து உயர்வாகப் பேசுகிறது! நம் வெற்றிகள் தொடரட்டும், தொடரும்!
தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பா.ஜ.க.வுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அ.தி.மு.க.வுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மறக்கவே முடியாத மாபெரும் தோல்வியைக் கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பா.ஜ.க-வுக்கு எப்போதும் தமிழ்நாடு அடிபணியாது” : தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி எம்.பி பேச்சு!
-
”ஆபத்தான அரசியல் நோக்கம்.. அதிகாரத்தை தக்கவைக்க பாஜக போட்ட திட்டம்.. படுதோல்வியால் கலக்கம்!”
-
”மண்ணைக் கவ்விய N.D.A. கூட்டணி; ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”திராவிட இயக்கத்தின் கொள்கை மகளிர் முன்னேற்றம்.. திமுக-விற்கு பாடம் எடுக்க வேண்டாம்” : முரசொலி பதிலடி!
-
மோடி அரசு கொண்டு வந்த கருப்பு சட்டம் படுதோல்வி; டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!