Tamilnadu
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், இது தென் மாநிலங்களின் அரசியல் உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கையாகும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடந்தாலும் தென் மாநிலங்களில் பாஜகவால் காலுன்ற முடியாத சூழலே உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து உள்ளே நுழைய முடியவில்லை என்பதால் தமிழ்நாட்டின் தொகுதிகளை வெட்டி குறைத்து எப்படியாவது பாஜக ஆட்சியை கொண்டுவர நினைக்கும் வண்ணம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக தொகுதி மறுவரையறை கொண்டுவந்தால் தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றலாம் என நினைப்பில் 5 மாநில தேர்தல் நடைபெறும் சூழலில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி தொகுதி மறுவரையறை சட்டத்தை அமல்படுத்த நினைக்கிறது ஒன்றிய அரசு.
இதற்கிடையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி, தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட திருத்தங்களை அவசரமாக கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், தொகுதி மறுவரையறை முயற்சியை “ஜனநாயக விரோதம்” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த ‘Delimitation’-ஐ எப்படி செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தச் சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி, இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார்கள். இவர்கள் இப்படி மறைத்து மறைத்துச் செய்கிறார்கள் என்றால், கண்டிப்பாக ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்று, அனைவருக்குமே அந்தச் சந்தேகம் வலுவடைகிறது. தென்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
“என்ன இவன் மிரட்டுகிறான்?” என்று நினைக்காதீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் அதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. ஆம்! தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது! தேர்தல், ஆட்சி அதிகாரம் இது எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்! நாங்கள் சுயமரியாதைக்காரர்கள்! எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்! மாநில உரிமைகள்தான் முக்கியம்! அதுதான், பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் எங்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற உயிர்க் கொள்கை!
தமிழ்நாட்டுக்குத் தவறிழைத்துவிட்டு, வழக்கம்போல் சும்மா கடந்துசெல்ல நினைத்தால், நடப்பதே வேறு! சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில், அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம்!” என எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 ஆக உயர்த்தும் முன்மொழிவு அமல்படுத்தப்பட்டால், மாநிலங்களுக்கிடையிலான பிரதிநிதித்துவ விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட வட மாநிலங்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கம். ஆனால் தென் மாநிலங்களுக்கு பிரதிநிதி்த்துவ இழப்பும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது 80 இடங்கள் கொண்ட உத்தரப் பிரதேசம், புதிய கணக்கீட்டின் அடிப்படையில் 140 இடங்களாக உயரலாம். அதேபோல் பீகார் மாநிலம் 40 இடங்களில் இருந்து 73 ஆகவும், ராஜஸ்தான் 25 இடங்களில் இருந்து 48 ஆகவும், மத்தியப் பிரதேசம் 29 இடங்களில் இருந்து 51 ஆகவும், மகாராஷ்டிரா 48 இடங்களில் இருந்து 79 ஆகவும் அதிகரிக்கும் என கணிப்பு தெரிவிக்கிறது. இம்மாநிலங்களில் இடங்களின் எண்ணிக்கையுடன், அவற்றின் மக்களவை பங்கும் உயர்வு காணும்.
மறுபுறம், தென் மாநிலங்களில் இடங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவற்றின் விகிதாச்சாரம் குறையும் நிலை உள்ளது. தமிழ்நாடு தற்போது 39 இடங்களைக் கொண்டுள்ளது; அது 51 ஆக அதிகரித்தாலும், அதன் பங்கு 7.2 சதவீதத்திலிருந்து 6.0 சதவீதமாக குறையும் என கணிக்கப்படுகிறது.
கேரளம் 20 இடங்களில் இருந்து 23 ஆக உயர்ந்தாலும், அதன் பங்கு 3.7 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக குறையும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா இணைந்து 42 இடங்களில் இருந்து 59 ஆக அதிகரித்தாலும், அவற்றின் பங்கு 7.7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறையும். ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களும் இதேபோன்ற குறைப்பை சந்திக்கும்.
மொத்தத்தில், வட மாநிலங்களின் மக்களவை பங்கு 22.1 சதவீதத்திலிருந்து 25.1 சதவீதமாக உயரக்கூடும் நிலையில், தென் மாநிலங்களின் பங்கு 20.1 சதவீதத்திலிருந்து 18.0 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்படுவது இதன் காரணமாகும். அதேவேளை மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னிலை வகித்த தென் மாநிலங்களுக்கு, இந்த புதிய அமைப்பில் விகிதாச்சார இழப்பு ஏற்படும் என்ற விவாதம் எழுந்துள்ளது. எனவே, மக்களவை தொகுதி மறுவரையறை என்பது வெறும் இடங்கள் அதிகரிப்பை மட்டுமல்லாமல், இந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவ சமநிலையையும் பாதிக்கும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
Also Read
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!