Tamilnadu
”டெல்லி அடிமை அதிமுக வரும் தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்கக்கூடாது!” :தூத்துக்குடியில் முதலமைச்சர் பேச்சு!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (12-04-2026) தூத்துக்குடி தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
முத்துநகருக்கு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்திருக்கிறேன். மீன்வளமும் – துறைமுகமும் - வணிகமும் செழிக்கும், தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் என்ன ஸ்பெஷல்? தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய் போன்றே, இந்த மாவட்ட மக்களும் இனிமையானவர்கள்! ஸ்வீட் மட்டுமா, தமிழ்நாட்டுக்கே உப்பு சப்ளை செய்வதும் நீங்கள்தான்!
தனது ஆஸ்தி மொத்தத்தையும் விற்று ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் மண், இந்த மண்! அவர் மட்டுமா, வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், அண்மையில் மறைந்த தகைசால் தமிழர் ஐயா நல்லகண்ணு உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளை தமிழ்நாட்டுக்கு தந்த மண், இந்த தூத்துக்குடி மண்!
நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு - கே.வி.கே. சாமி, தலைவர் கலைஞரால் ‘முரட்டு பக்தன்’ என அழைக்கப்பட்ட அண்ணன் என். பெரியசாமி உள்ளிட்ட பல கழகத் தீரர்களைத் தந்த மண்!
இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடியில் பரப்புரையை முடித்துவிட்டு, தூத்துக்குடி வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. தூத்துக்குடியில் பரப்புரை என்றதுமே, வரும் வழியில் கடந்த 5 ஆண்டில் இங்கு எத்தனை முறை வந்திருக்கிறோம் என்று நான் யோசித்துக் கொண்டே வந்தேன். எனக்கே மலைப்பாக இருந்தது. எத்தனை அரசு நலத்திட்ட விழாக்கள், எத்தனை ஆய்வுகள், எத்தனை தொழிற்சாலைகள் தொடக்க விழா, புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்.
எல்லாவற்றிற்கும் மேல் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள், தூத்துக்குடி, இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, தூத்துக்குடிக்கு ஓடோடி வந்து பார்த்தேன். பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களையும், கூடுதல் அதிகாரிகள் உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் உங்கள் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டேன். அப்போது, ஒன்றிய அரசு ஒரு ரூபாய்கூட தராத நிலையிலும், நம்முடைய அரசு சார்பில் நிவாரண உதவிகளை அறிவித்து, 666 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை நேரில் வந்து வழங்கினேன்.
அதுமட்டுமா, வெள்ளப் பாதிப்பில் அதிகம் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். இவ்வாறு, தூத்துக்குடி எப்போதும் பார்க்காத அளவு அதிக திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி இருக்கிறோம்.
அதற்கு முக்கியக் காரணம், இங்கு வரவேற்புரை ஆற்றிய கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி. கனிமொழி அவர்கள், உங்கள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காரணத்தினால், என்னிடம் பேசி, எப்படியாவது பல்வேறு திட்டங்களை வாங்கிவிடுவார்கள். அதேபோன்று, அதிகாரிகளிடமும், பொறுமையாக – பெயருக்கு ஏற்றவாறு கனிவோடு பேசி – அனைத்து வேலைகளையும் வாங்கிவிடுவார்கள்.
அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் – கழகப் பணியிலும் சிறிது இடைவெளி கிடைத்தாலும், உடனே தூத்துக்குடிக்குத்தான் புறப்படுவார்கள். நான் போன் பண்ணும்போது, “என்னம்மா, தூத்துக்குடியில்தான் இருக்கிறாயா” என்று நானே கேட்பேன். கனியும் சிரித்துக் கொண்டு, “ஆமாண்ணே, தூத்துக்குடிதான்” என்று சொல்வார்கள். இப்படி பணி செய்த காரணத்தினால்தான், பின்தங்கிய மாவட்டங்களில் இருந்த இந்த தூத்துக்குடி, இப்போது வேகமாக வளர்ந்து முன்னேறி, தெற்கில் முக்கியமாக கவனிக்கப்படும் மாவட்டமாக இருக்கிறது.
இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில், இரண்டு நாள் முன்பு ‘தி இந்து’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. “ஒரு காலத்தில் பின் தங்கிய மாவட்டங்கள் என அறியப்பட்ட தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள், திராவிட மாடல் ஆட்சியில் அந்த இமேஜை உடைத்து வெளியே வரத் தொடங்கிவிட்டது” என்று எழுதியிருந்தார்கள். இந்தளவுக்கு சாதனைகளைச் செய்து காட்டிய உரிமையோடு, உறவோடு, பாசத்தோடு உங்களைப் பார்த்து, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். இப்போது, உங்கள் அனுமதியோடு நமது வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தலாமா?
முதலில்,
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள். நம்முடைய கழகத் தீரர் என்னுடைய ஆருயிர் அண்ணன் என். பெரியசாமியின் அருமை மகள். “என்னால் பெண் சிங்கம்” என்று பாராட்டப்பட்டவர். திராவிட மாடல் ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட முத்திரைத் திட்டங்களுக்கு பொறுப்பான சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அமைச்சர்! உங்கள் மண்ணின் மகள் கீதா ஜீவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள். மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்து, மீனவர் நலனுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டியவர். தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். இதுவரை திருச்செந்தூர் தொகுதியில் ஆறுமுறை போட்டியிட்டு, அனைத்து முறையும் வெற்றி பெற்றவர். இதிலிருந்தே அவர் எப்படிப்பட்ட செல்வாக்கோடு தொகுதியில் இருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த முறையும் அனிதா, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன் அவர்கள். ஏற்கனவே விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பல்வேறு திட்டங்களை இந்தப் பகுதிகளுக்கு கொண்டு வந்தவர். பார்க்க, பழக அடக்கமானவர். அவருக்கு, மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊர்வசி எஸ். அமிர்தராஜ் அவர்கள். கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதுமட்டுமல்ல, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜின் அருமை மகன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். அவருக்கு நீங்கள் மீண்டும் கை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கா. கருணாநிதி அவர்கள். கோவில்பட்டி நகராட்சித் தலைவர். இவரது அப்பா கயத்தாறு காளிப்பாண்டியன் கேட்டுக் கொண்டதால், தன்னுடைய பெயரையே தலைவர் கலைஞர் அவர்கள் இவருக்கு வைத்தார். அந்தக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய கோவில்பட்டிக்கு, சீவலப்பேரி நீரைக் கொண்டு வந்து தாகம் தீர்த்தவர், முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். அவரின் பெயரைக் கொண்ட கருணாநிதி அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் பை.மு. ராமஜெயம் அவர்கள். தென் திருப்பேரை வட்டாரத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மக்கள் பணியாற்ற இந்த இளைஞருக்கு, நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவர்கள் அனைவரின் வெற்றியும் உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் அனைவரும் இப்போது உட்காரலாம். சீட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது!
நான் ஒன்றும் சும்மா ஆதரவு கேட்டு வரவில்லை. ஏற்கனவே எத்தனை முறை நேரில் வந்து திட்டங்களை தந்தேன் என்று சொன்னேன். இப்போது 5 ஆண்டுகளில் உங்கள் மாவட்டத்திற்காக என்னென்ன செய்திருக்கிறோம் என்று பெரிய லிஸ்ட்டே நான் வைத்திருக்கிறேன்.
இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டி, என்னுடைய தங்கை கனிமொழியை, இந்த தூத்துக்குடி மாவட்ட மகளாக உங்களிடம் நான் ஒப்படைத்திருக்கிறேன். அதனால் என்னிடத்தில் பட்டியல் பெரிதாக இருக்கிறது. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
தென் தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்காவை தூத்துக்குடி மீளவிட்டானில் திறந்து வைத்திருக்கிறேன்.
சிலாநத்தம் சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் மின் வாகன தொழிற்சாலை. புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட 18 மாதத்தில் உற்பத்தியே தொடங்கிவிட்டது. அப்படி ஒரு ஸ்பீடு! இதனால் தமிழ்நாட்டின் மின்வாகனத் தலைநகராக தூத்துக்குடி மாறியிருக்கிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உயர்தர பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக் கட்டடம். சென்ற மாதம்தான் துணை முதலமைச்சர் உதயநிதி வந்து திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடங்கள்.
தூத்துக்குடி மாவட்டத் தந்தை குரூஸ் பர்னாந்து திருவுருவச் சிலை.
கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு மணிமண்டபம்.
வீரமாமுனிவர் மணிமண்டபம்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று, குடமுழுக்கும் நடத்தியிருக்கிறோம்.
நமது அரசும், நம்முடைய தூத்துக்குடி எம்.பி. தங்கை கனிமொழியும் தொடர் முயற்சி செய்து, தூத்துக்குடி வாகைகுளத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, இரவு நேர விமான சேவையும் தொடங்கியிருக்கிறது. அதனால்தான், இப்போது நிகழ்ச்சி முடித்து, இப்போது அதில்தான் செல்லப் போகிறேன்.
பொதுவாக, முதலீட்டாளர்கள் மாநாடு என்றால், சென்னையில் நடத்துவார்கள். இல்லை என்றால், கோவையில் நடத்துவார்கள். ஆனால், நம்முடைய அரசில், முதன்முதல் T.N. ரைசிங் மாநாட்டை தூத்துக்குடியில்தான் நடத்தினோம். அந்த நிகழ்ச்சில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
ஏரல், சாயர்புரம், திருவைகுண்டம், சாத்தான்குளம் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள்.
ஒட்டபிடாரத்தில் புதிய அரசுக் கல்லூரி.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விரிவாக்கப் பணிகளும் நடந்திருக்கிறது.
பழையகாயல் படகு இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பு தடுப்புச் சுவர்.
முக்காணி, பழையகாயல் கூட்டுக்குடிநீர் திட்டம்.
சாத்தான்குளம் - உடன்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் புனரமைப்பு.
திருவைகுண்டம் பேட்மாநகரத்தில் மினி ஸ்டேடியம்.
கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு புதிய கட்டடம்.
உடன்குடி அனல் மின் நிலையத்தில் 650 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்பட்டு உற்பத்தி தொடங்கிவிட்டது.
தூத்துக்குடி சிப்காட்-இல் பர்னிச்சர் பூங்கா.
பெரியதாழை மீன் ஏலக் கூடம்.
வேம்பார் கருப்பட்டி மற்றும் பனை பொருட்கள் குறுங்குழுமக் கட்டடம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலை, குடிநீர், கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான பகுதிகளில் இப்போது மழை நீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம்.
தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைய இருக்கிறது.
ஸ்பேஸ் பார்க் (விண்வெளிப் பூங்கா) அறிவித்திருக்கிறேன்.
ஒட்டப்பிடாரம் அல்லிக்குளம் பகுதியில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
தருவைகுளத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதியம்-புத்தூர் ஜவுளிப்பூங்கா அமைக்க அடிக்கல்,
காயல்பட்டணத்தில் அரசு உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
திருவைகுண்டத்தில் புதிதாக கட்டும் மருத்துவமனை கட்டடத்திற்கு மறைந்த நம்முடைய தோழர் நல்லகண்ணு அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இன்னும் நிறைய இருக்கிறது.
தூத்துக்குடியில் மீனவ தோழர்கள் நிறைய பேர் இருப்பீர்கள். உங்களுக்காக திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளும் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் இப்போதுதான், பரமக்குடி நிகழ்ச்சியில் பேசிவிட்டு அப்படியே கிளம்பி தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். அதனால், எல்லாவற்றையும் சொல்வதற்கு எனக்கு நேரம் இல்லை.
ஒன்றை மட்டும் நான் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். தூத்துக்குடிக்காக இந்த ஸ்டாலின் போன்று, இதற்கு முன்பு வேறு யாரும், இவ்வளவு கவனமும் - முக்கியத்துவமும் கொடுத்து டெவலப் பண்ணியிருக்க மாட்டார்கள்! அதை மட்டும் என்னால் அடித்து சொல்ல முடியும்! நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.
இப்படி, ஐ.டி. வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, விளையாட்டுத்துறை வளர்ச்சி, துறைமுகம், கப்பல் என்று சாதனைகளால் நினைவில் வைத்திருக்க வேண்டிய நம்முடைய தூத்துக்குடியை, வேதனைகளால் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய காலம் 5 ஆண்டுக்கு முன்பு இருந்தது.
தூத்துக்குடி என்று சொன்னால், 13 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூட்டை ஞாபகத்துக்கு வர வைத்த பாவிகளின் ஆட்சியாக அ.தி.மு.க. இருந்தது.
2018 மே 22 மறக்க முடியுமா? சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டு இருக்கிறாரே எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி... காவல்துறைக்கு பொறுப்பு வகித்து கொண்டு, “துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததே எனக்கு தெரியாது, நான் இப்போதுதான் டி.வி.யில் பார்த்தேன்” என்று கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் பேட்டி அளித்தார். இதுதான், அவர் ஆட்சி நடத்திய லட்சணம்.
பழனிசாமி சொன்ன பொய்களை எல்லாம் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் விசாரித்து அறிக்கை கொடுத்தார்கள். அதில் தெளிவாக அம்பலமாகிவிட்டது. பழனிசாமிக்கு தெரிந்தேதான் அந்தக் கொலைகள் நடந்திருக்கிறது. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோர் நிமிடத்திற்கு நிமிடம் இங்கு என்ன நடக்கிறது என்று முதலமைச்சராக இருந்த பழனிசாமியிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
இப்படி, பழனிசாமி ஆட்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி நியமன ஆணைகளையும், கூடுதலாக 5 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கியவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை நான் சொல்கிறேன்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு, இன்றைக்கு பெரிய மகா யோக்கியரைப் போன்று, ஊர் ஊராக சென்று பழனிசாமி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார். பேசுகிறார் என்றுகூட சொல்லக் கூடாது. கண்டதையும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
பழனிசாமி கொஞ்சம்கூட மனசாட்சியோ, நேர்மையோ இல்லாதவர் என்பதற்கு, மற்றொரு சாட்சிதான் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை-மகன் கொல்லப்பட்ட கொடூரம்! இன்றைக்கு அந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், தவறு செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்றைய முதலமைச்சர் பழனிசாமி, அந்த கொலையையே மறைக்க பார்த்தார். 'இது லாக்அப் மரணமே இல்லை' என்று கூசாமல் பொய் சொன்ன அன்றைய அமைச்சர், யார் என்று உங்களுக்கு தெரியும், கடம்பூர் ராஜு. இப்போது அவர் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடுகிறார்.
இதை எல்லாம் மக்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள். அதையெல்லாம் மறைக்க வேண்டும்; அதை மறக்க வேண்டும் என்று திட்டம்போட்டு, இப்போது பழனிசாமி என்ன கையாள்கிறார் என்றால், என் மீதும் - இங்கு மேடையில் இருக்கும் தங்கை கனிமொழி மீதும் தனிநபர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி!
இதனால் அவரது அலங்கோல ஆட்சியின் நினைவுகள் மறைந்துவிடுமா என்ன? அவரது தராதரம்தான் இதனால் சந்தி சிரிக்கிறது. “முதலமைச்சராக இருந்தவர் பேசுவது மாதிரியா பேசுகிறார்?” என்று சாமானிய மக்கள்கூட முகம் சுளிக்கிறார்கள். இன்னும் பலர், “இவரெல்லாம் எப்படி முதலமைச்சராக இருந்தார்?” என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
அம்மையார் சசிகலா அவர்களின் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனவர். பிறகு, டெல்லியின் காலைப் பிடித்து அந்தப் பதவியில் தொடர்ந்து இருந்தவர். “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” என்பதுபோன்று, அவர் ஆட்சி செய்த நான்காண்டில் தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் எல்லாம் காணாமல் போனது!
இவர் ஆட்சி செய்த அழகை சொல்லி வாக்கு கேட்டால், பொடிக்கு புகையிலைகூட சிக்காது. அதனால் இப்போது, புது டெக்னிக்-இல் இறங்கியிருக்கிறார். டெல்லியுடன் ஒத்துப் போகும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான், தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் கிடைக்குமாம்.
முதலில், கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சி ஆண்டால் திட்டங்களும் – நிதியும் கிடைக்காது என்று சொல்வதே பச்சை அயோக்கியத்தனம். டெல்லி பா.ஜ.க.தான் இப்படி சொல்லி மிரட்டுகிறார்கள் என்றால், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் பழனிசாமியும் அதையே சொல்லி வாக்கு கேட்கிறார்.
நான்காண்டு பா.ஜ.க.வின் எல்லா விஷயத்திலும் சமரசம் செய்துவிட்டுதானே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்காக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பழனிசாமி அவர்களே!
கஜா, ஒக்கி புயல் இதெல்லாம் தாக்கி தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்கு உள்ளானதே?
மாநில அரசு கேட்ட பேரிடர் நிவாரணம் எவ்வளவு? நீங்கள் இணக்கமாக இருந்த பா.ஜ.க. அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு? சொல்ல தைரியம் இருக்கிறதா? மொத்த மாநிலமும் நீட் விலக்கு கேட்டோமே? கிடைத்ததா? யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டுக்கு நிதியோ – திட்டமோ ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்காது. ஏன் என்றால், தமிழ், தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே அவர்களுக்கு வெறுப்பு! “தமிழ்ப் பண்பாடு என ஒன்று இல்லவே இல்லை, எல்லாமே பாரத கலாசாரம்” என்று ஒற்றைத்துவத்தை பேசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பா.ஜ.க.விடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன திட்டம் கொண்டு வந்தது என்று வேறு, பழனிசாமி கேட்கிறார். நான் சொல்லவா? பாய்ண்ட் பை பாய்ண்ட் பட்டியல் போட்டு சொல்லவா? நேரம் இல்லை… சுருக்கமாக சொல்கிறேன்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் எவ்வளவோ திட்டங்கள்… ஒன்பதாண்டுகள் ஆட்சியில் தொடர்ந்து இருந்தோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் நாம் பார்க்கும் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் எல்லாம் அப்போது வந்ததுதான்.
இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டை தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு நாம் கொண்டு வந்தோம். மிக முக்கியமான 69 திட்டங்களை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.
ஒன்று சொல்கிறேன். அதுவே போதும்… தமிழுக்கு செம்மொழி தகுதி யார் காலத்தில் கிடைத்தது? சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு நீங்கள் பயணிக்கும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் எங்கள் கூட்டணி ஆட்சியில் போட்டதுதான்.
கிண்டி - கத்திப்பாரா, கோயம்பேடு மற்றும் பாடியில் மிகப்பெரிய மேம்பாலங்கள், சென்னை துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலை, சேதுசமுத்திரத் திட்டம் தொடக்கம், சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம், 90 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அனுமதி, பல புதிய ரயில்கள், திருச்சி – கோவை – மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் - ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம், உலகத் தரத்தில் சேலம் உருட்டாலை, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்;
சென்னைக்கு அருகே தேசிய கடல்சார் பல்கலைக்கழகம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம், நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம், கரூர் – ஈரோடு – சேலம் உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், அடக்குமுறை பொடா சட்டம் ரத்து! இன்னும் நிறைய இருக்கிறது!
இது எல்லாம் ஒன்றிய அரசின் கூட்டணியில் தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலுடன், தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள்! இவ்வளவு ஏன், இன்றைக்கு நாம் பெரிய அளவில் விரிவுபடுத்தி வரும் திட்டமான சென்னை மெட்ரோ திட்டம், எங்கள் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்ததுதான்.
இதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? “சென்னைக்கு எதற்கு மெட்ரோ?” “அதுதான் உங்கள் மாநிலத்தில் விடியல் பயணம் திட்டம் இருக்கிறதே? உங்களுக்கெல்லாம் மெட்ரோ சரிபட்டு வராது” என்று, இப்போது கோவை – மதுரை – திருச்சிக்கு நிராகரித்தது போன்றே சென்னைக்கும் நிராகரித்திருப்பார்கள். நல்ல வேளையாக சென்னை தப்பித்துவிட்டது.
நான் இப்போது இவ்வளவு சொன்னேன் அல்லவா... ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் கூட்டணியில் இருந்து நீங்கள் சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன? முடிந்தால் சொல்லுங்கள்.
நீட் விலக்கு தருவோம் என்று சொல்ல வைக்க முடியுமா? மும்மொழி திட்டம் கிடையாது என்று சொல்ல வைக்க முடியுமா? தேசிய கல்விக் கொள்கை எனும் காவிக் கொள்கையை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று சொல்ல வைக்க முடியுமா? நீண்ட காலமாக முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை தருவோம் என்று சொல்ல வைக்க முடியுமா? சிறுபான்மையினருக்கு எதிரான பொது சிவில் சட்டம், வக்பு திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வைக்க முடியுமா? இப்போது, கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக இப்போது கொண்டு வரப் போகும் FCRA சட்டத்தை வாபஸ் வாங்க வைக்க முடியுமா?
இதைப் பற்றியெல்லாம் முதலில் உங்களால் வாய் திறந்து நான்கு வார்த்தை, உங்கள் டெல்லி ஓனரை மேடையில் வைத்துக் கொண்டு பேச முடியுமா? உங்களால் எதுவுமே முடியாது! பா.ஜ.க.கூட இருக்கும்வரை வெறும் தலையாட்டிப் பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் நீங்கள் இருக்க முடியும்! அதனால், உங்களால் ஒருநாளும் வெற்றிபெற முடியாத வீண் சவால்களை நிறுத்துங்கள்.
காலில் விழுந்தோமா, காலை வாரிவிட்டோமா, அடுத்த காலை நோக்கிப் போனோமா, இவ்வளவுதான் பழனிசாமியின் வாழ்க்கைச் சுருக்கம்! அவரது மொத்த அரசியல் வாழ்க்கையுமே இந்த மூன்றில் அடங்கிவிடும்!
அடிமை பழனிசாமியின் ஆட்சி வேண்டாம் என்று முடிவெடுத்து, 2021-ஆம் ஆண்டு எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தீர்கள். உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றி, ஒன்றிய அரசின் வஞ்சனைகளை எல்லாம் மீறி, நம்முடைய வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.
இப்போது, 2026 தேர்தல். தமிழ்நாட்டின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கான செயல் திட்டமாக, தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். முன்பே சொன்னேன், நம்முடைய தேர்தல் அறிக்கை 2026 தேர்தலின் ஹீரோ, ஹீரோயின் மட்டுமல்ல, இதுதான் சூப்பர்ஸ்டார் என்று சொன்னேன்! இந்த சூப்பர்ஸ்டாரை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்தான் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி. தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துதான் இதை தயாரித்தோம். இப்போது நம்முடைய சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் அறிவிப்புகளை சொல்லவா?
முதலில் இல்லத்தரசி திட்டம்! ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்தான்! இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்தும் வாங்கிக் கொள்ளலாம்!
உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த கம்பெனியில் வாங்கிக் கொள்ளலாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் – இவற்றில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டுக்காரரிடம் எல்லாம் கேட்காதீர்கள். கேட்டாலும், ஒப்புக் கொள்ளாதீர்கள். எதாவது முறைத்தால், அண்ணனிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லிவிடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க உங்களுக்காக கொண்டு வரப்பட்டிருக்கும் திட்டம்! பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
எப்படி தலைவர் கலைஞர் சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரோ! அவரது மகனான நானும், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.
அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 இலட்சம் சகோதரிகள் பெற்று வரும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இனி மாதம் 2 ஆயிரம் ரூபாய்! இப்போதே பெண்கள் அனைவரும் கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு? பொங்கலுக்கு முன்னால், சொல்லிவிட்டு 3 ஆயிரம்! பிப்ரவரியில், சொல்லாமலேயே 5 ஆயிரம்! ஆகமொத்தம் 8 ஆயிரம்! அடுத்து, இல்லத்தரசி கூப்பனில் 8 ஆயிரம். “எட்டு + எட்டு! உதயசூரியனுக்குதான் எங்கள் ஓட்டு!” என பெண்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டார்கள். அதனால், நம்முடைய வெற்றியும் இந்த முறை யாரும் எட்டாத உயரத்திற்கு போகப் போகிறது!
இதுமட்டுமல்ல, கல்லூரிக்குப் போகும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன் உதவித்தொகையும் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றப் பெண்கள் என அனைத்து உதவித்தொகைகளும் இனி இரண்டு மடங்காக வழங்கப் போகிறோம். மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுக் கால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். மீனவர்களுக்கு மகிழ்ச்சிதானே?
20 லட்சத்துக்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சார பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்! நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.
ஆயிரம் வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும். அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆக்கப்படும். தூத்துக்குடியில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
நான் முதல்வன் 2.0 திட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு லட்சம் இளைஞர்களுக்கு கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் சரக்கு மேலாண்மையில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். தூத்துக்குடியில் காணப்படும் தனித்துவமான சிவப்பு மணல் திட்டுகளான தேரி நிலங்கள், பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும். இவையெல்லாம் நிறைவேறி, தூத்துக்குடி வாழ்வாதாரம் பெருக, தென் மாவட்டங்கள் தற்போது கண்டுவரும் ஏற்றம் தொடர, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குதான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்!
தமிழ்நாடா? டெல்லியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், தமிழ்நாடு அணிதான் வெல்ல வேண்டும்! கப்பலோட்டிய தமிழரின் மண்ணில் டெல்லிக்கு கப்பம் கட்டும் அ.தி.மு.க. அடிமைகள் டெப்பாசிட்கூட வாங்கக் கூடாது! அதற்கு, தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவனுக்கும், திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், விளாத்திகுளம் தொகுதியில் மார்க்கண்டேயனுக்கும், கோவில்பட்டி தொகுதியில் கா. கருணாநிதிக்கும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் ராமஜெயத்துக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அதேபோன்று, திருவைகுண்டம் தொகுதியில் சகோதரர் ராகுல் காந்தியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்!
அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம். நாடு வளம் பெற, நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! நன்றி, வணக்கம்!
Also Read
-
”பாஜக-வின் கொள்கை பொது சிவில் சட்டம்.. உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி”: முரசொலி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”N.D.A. எனும் பேரிடர்.. டெல்லி அடிமை தான் பழனிசாமி!” புதுக்கோட்டையில் அனல் பறந்த முதலமைச்சரின் பேச்சு!