Tamilnadu
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டம், இந்த இராமநாதபுரம்! இராமநாதபுரத்தின் சிறப்புகள் என்ன..! இராமேஸ்வரம் திருக்கோயில்! உலகப் புகழ்பெற்ற குண்டு மிளகாய்! பசுமையான குளங்கள்!
அதுமட்டுமா, மதிப்புமிக்க மனிதர்கள் பலர் இந்த மண்ணில் பிறந்தார்கள்..! சேதுபதி மன்னர்கள் - வள்ளல் பாண்டித்துரை தேவர் – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் – தியாகி இமானுவேல் சேகரனார் - உலகையே இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அணு விஞ்ஞானி மேனாள் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம்! இவர்களை எல்லாம் தந்த மண், இந்த மண்! சாதி மத வேற்றுமைகளைக் கடந்து, அனைத்து மக்களும், நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்டம்!
2006-க்கு முன்பு வரை, இந்த மாவட்டத்தை ‘தண்ணியில்லாத காடு’ என்று சொல்வார்கள்! அதை மாற்ற நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே, தலைவர் கலைஞர் அவர்களின் அறிவுரைப்படி, இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உருவாக்கினேன். அதைத் தொடங்கி வைக்க வருகை தந்த தலைவர் கலைஞர் அவர்கள், அந்த மேடையிலேயே சொன்னார். “இந்த திட்டப் பணியை, மூன்று ஆண்டுகளில் செய்ய முடியும் என்று எனக்கு அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். இதை, முன்னரே முடிக்க முடிந்தால், பரிசுப் பொருட்களோடு திறப்பு விழாவுக்கு வருகிறேன்” என்று சொன்னார். இரண்டே ஆண்டுகளில், உங்களுக்காக அதை செய்து முடித்து, அதிகாரிகளுக்கு அந்தப் பரிசை பெற்று கொடுத்த இந்த ஸ்டாலின், இன்றைக்கு பெருமையோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
அப்போது மட்டுமா, கடந்த ஐந்தாண்டுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தை புது உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கும் உரிமையோடும் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இராமநாதபுரம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ரெடியா? ரெடி (மக்கள்). திராவிட மாடல் 2.0-க்கு ரெடியா? ரெடி (மக்கள்). மகிழ்ச்சி!
நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, தமிழ்நாடு என்ன நிலையில் இருந்தது? கொரோனாவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்கூட கிடைக்காத நிலையில் இருந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் 0.07 விழுக்காடு என்று சரிந்து கிடந்தது. நிதிநிலைமை படுபாதாளத்தில் இருந்தது. போர்க்கால அடிப்படையில் என்று சொல்வார்கள் அல்லவா... அது போன்று, முதலில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுத்தோம்! அடுத்து, திறமையான நிர்வாகத்தால் நிதி நிலைமையை மீட்டெடுத்திருக்கிறோம்! அதன் பயனாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 11.19 விழுக்காடு என்ற டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம்! இதெல்லாம் சாதாரணமாக நடக்கவில்லை! கடுமையாக உழைத்திருக்கிறோம்!
சிந்தித்துப் பாருங்கள்... கடந்த ஐந்தாண்டுகளில் என்னை செய்திகளில் பார்க்காத நாள் இருக்காது. ஆய்வுக்கூட்டம் – கள ஆய்வுகள் – அரசு நலத்திட்ட விழாக்கள் – காணொளி வாயிலாக திறப்பு விழாக்கள் - நேரடியாக மக்கள் சந்திப்பு என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தேன். நான் மட்டுமல்ல, அரசு இயந்திரத்தையே முழுமையாக செயல்பட வைத்தேன். அமைச்சர்கள் தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் வரைக்கும், கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்! அதற்கு, ஏப்ரல் 23-ஆம் தேதி நீங்கள் அனைவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்! உங்கள் அனுமதியுடன் இப்போது, நமது வெல்லும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தலாமா?
முதலில், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் - ராஜகண்ணப்பன் அவர்கள். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். நம்முடைய திராவிட மாடல் அரசில் அமைச்சராக சிறப்பாக செயல்பட்ட இவர், முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர் சுற்றுச்சாலைகள், கடலாடி ஐ.டி.ஐ. உள்ளிட்ட நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். ராஜகண்ணப்பனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி! நமது வெல்லும் வேட்பாளர் - காதர்பாட்சா முத்துராமலிங்கம்! இவரின் பெயரே, இராமநாதபுரத்தின் நல்லிணக்க குணத்தைச் சொல்லும்! இராமநாதபுரத்தின் மாவீரர் - காதர்பாட்ஷா என்ற வெள்ளச்சாமி அவர்களின் மகன். கழகத்தின் மாவட்டச் செயலாளர். ஏராளமான நலத்திட்டங்களை செய்து கொடுத்திருக்கும் இவரை, கடந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அந்த ரெக்கார்டை இந்த முறை முறியடிக்க, அவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்!
அடுத்து, திருவாடானை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் - காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த இராம. கருமாணிக்கம் அவர்கள். இவரது தாத்தா கரிய மாணிக்கம் - அப்பா, கே.ஆர். ராமசாமி ஆகியோரின் வழித்தடத்தில் வந்திருப்பவர்தான், தம்பி இராம. கருமாணிக்கம் அவர்கள்! மரியாதைக்குரிய அண்ணன் கே.ஆர். ராமசாமி அவர்கள், ஐந்து முறை மக்களின் அன்பையும் - நம்பிக்கையையும் பெற்று, சட்டமன்றத்தில் ஒலித்தவர். அப்படிப்பட்டவரின் அன்பு மகன் இராம. கருமாணிக்கத்திற்கு கடந்த முறை போன்றே இந்த முறையும் ஆதரவு தந்து, கை சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் - கே.கே. கதிரவன் அவர்கள். வழக்கறிஞர். இளைஞரணியில் வளர்ந்தவர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக பணியாற்றி, செவ்வூர் பகுதியில், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பல்வேறு கிராமங்களுக்கு செய்து கொடுத்தவர். இவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
கடந்த முறை நான்கு தொகுதிகளிலும் வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த முறையும், 100 பர்செண்ட் வெற்றியைக் கொடுப்பீர்களா? கடந்த முறையைவிட, அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பீர்களா? வெற்றி உறுதியாகிவிட்டது! வேட்பாளர்கள் உட்காரலாம்!
இராமநாதபுரத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகம் செய்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.
1974-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கிய தமிழ்நாடு உப்புக் கழகம்!
பார்த்திபனூரில் மதகு அணை!
கடலாடி M.L.A.-வாக இருந்த, என்னுடைய ஆருயிர் அண்ணன் சுப. தங்கவேலன் அவர்கள், சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் “இராமநாதபுரத்தில் கிராமச் சாலைகள்தான் இருக்கிறது. நெடுஞ்சாலைகளே இல்லை” என்று சொன்னார். உடனே, தலைவர் கலைஞர் ஐந்நூறு கிலோ மீட்டர் கிராமச் சாலையை, நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் மாபெரும் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தினார்.
இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, 5 ஆயிரம் சுனாமி குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தோம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!
இதன் தொடர்ச்சியாகத்தான், நம்முடைய திராவிட மாடல் அரசில், மீண்டும் 2 ஆயிரத்து 819 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறப்பு குடிநீர்த் திட்டம்.
தேவர் திருமகனார் நினைவிடத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டபம்.
இராமநாதசுவாமி கோவிலில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள்.
கோயில் பணியாளர்களுக்கு 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புகள்.
தியாகி இமானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய அரங்கம்.
இராமேசுவரத்தில் அரசு மருத்துவமனைக் கட்டடம்.
கீழக்கரையில் அரசு மருத்துவமனைக் கட்டடம்.
இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம்.
தனுஷ்கோடி சுற்றுலா தளம் மேம்பாடு.
அரியமான் கடற்கரையில் சாகச சுற்றுலா மையம் அமைக்க ஏற்பாடு.
இராமநாதபுரத்தில் அறிவுசார் மையம்.
பிரப்பன்வலசையில், ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி.
இராமேசுவரம், பாம்பன், மண்டபம் துறைமுகங்களில் மீன் இறங்கு தளம், விற்பனைக் கூடம், தூண்டில் வளைவுகள்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் 219 பணிகள், 154 புதிய கட்டடங்கள்.
நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் 231 பணிகள்.
22 மினி பேருந்துகள்.
திருவாடனை அணைக்கட்டு.
90 கூட்டுறவு சங்கங்களுக்கு பால் தர பரிசோதனைக் கருவிகள் என்று ஏராளமான பணிகள் செய்யப்பட்டிருக்கிறது.
சுருக்கமாக - புள்ளிவிவரமாக சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மூன்றாயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான 46 ஆயிரத்து 770 திட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்திருக்கிறது. 12 ஆயிரத்து 105 கோடி ரூபாய்க்கான நிதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்ல, இங்கு மீனவச் சொந்தங்கள் நிறைய பேர் வந்திருப்பீர்கள். உங்களுக்காக,
ரோச்மாநகர் மீன் இறங்கு தளம் –
திருப்பாலைக்குடி, நம்புதாளையில மீன் இறங்கு தளம் –
ராமேஸ்வரம் - வாலிநோக்கம் - மோர் பண்ணை மீன் இறங்குதளங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் –
மேற்குவாடி - ஏர்வாடி - பாம்பன் வடக்கு - மீனவ கிராமங்களில் குத்துகால் பகுதியிலும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தங்கச்சிமடம் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகையை, 5 ஆயிரத்தில் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.
மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில், ஆயிரத்து 96 மீனவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி இருக்கிறோம்.
மீன்பிடித் தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கும் திட்டத்தில் 3 ஆயிரம் மீனவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
விசைப்படகு மீனவர்களுக்கான மானிய விலை டீசலை 18 ஆயிரம் லிட்டரிலிருந்து, 19 ஆயிரம் லிட்டராகவும், நாட்டு படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து, 4 ஆயிரத்தி 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
மீனவச் சங்கத்தில் இருந்து வந்த சகோதரர்கள், இன்று காலை என்னை நேரில் சந்தித்து, எனக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் என்ன சொன்னேன் என்றால், “உங்களுடைய முகங்களில் பார்த்த மகிழ்ச்சிதான், நம்முடைய ஆட்சியின் சாதனைகளுக்கு சாட்சி” என்று சொன்னேன்!
இந்த ராமநாதபுரத்தில் மட்டுமல்ல, வள்ளுவ முனை இருக்கும் கன்னியாகுமரியில் ஆரம்பித்து, தலைநகர் சென்னை வரைக்கும், ஒவ்வொரு மாவட்டத்திலேயும் என்னென்ன சாதனைகள் செய்கிறோம் என்று உங்கள் முன்பு இருக்கும் இந்த ஸ்டாலின் புள்ளி விவரங்களுடன் சொல்கிறேன்.
நான் கேட்கும் ஒரே கேள்வி. இப்படி என்றைக்காவது ஒருநாள் பழனிசாமி பேசியிருக்கிறாரா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மறைந்த தலைவர்களை – நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது; அடுத்தவர்களின் மரணத்தை எதிர்பார்த்துப் பேசுவது; பெண்களைக் கண்ணியமில்லாமல் பேசுவது என்று தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். வாய்க் கொழுப்பு எடுத்து சாக்கடைக்கு சரிசமமாக வந்து விழும் அவருடைய வார்த்தைகளுக்கு பாடம் புகட்டப் போகும் நாள்தான், ஏப்ரல் 23. மறந்துவிடாதீர்கள்.
கொள்கையற்ற அடிமைக் கூட்டத்தை, சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோகக் கூட்டத்தை, மக்கள் விரட்டியடிக்க வேண்டும். சாதனைகளால் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கும் திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் நீங்கள் அமர்த்த வேண்டும். ஏனெனில், திராவிட மாடலின் திட்டங்கள் என்பது வரலாற்றில் நிற்கும் திட்டங்கள் மட்டுமல்ல; புது வரலாற்றையே படைக்கும் திட்டங்கள்! வெறும் புள்ளி விவரங்களில் அல்ல; கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்டிருக்கும் சாதனை சரித்திரம்தான் திராவிட மாடல்!
முதலமைச்சரான முதல் நாள் நான் போட்ட முதல் கையெழுத்தே, மகளிர் முன்னேற்றத்திற்கான மாபெரும் படிக்கட்டாக அமைந்த விடியல் பயணத் திட்டம். நம்முடைய அரசு பொறுப்பேற்ற 1800 நாட்களில், 935 கோடிக்கும் அதிகமான பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். ஊரெல்லாம் சுற்றி, பூ, காய்கறி விற்று, 5 ஆயிரம் சம்பாதித்தால், அதில் ஆயிரம் ரூபாய் பேருந்திற்கே போய்விடுகிறதென்று கவலைப்பட்டு வேதனையோடு இருந்த பல சகோதரிகள், விடியல் பயணத்தால் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் இந்த ஸ்டாலினை நிச்சயமாக நினைப்பார்கள். பக்கத்து நகருக்கு வேலைக்குச் செல்லும் சகோதரிகள், இந்த ஸ்டாலினுக்கு நன்றி கூறுவார்கள். இரண்டு, மூன்று ஊர் தள்ளியிருக்கும் அப்பா-அம்மாவையும், உறவினர்களையும் அடிக்கடி பார்க்க முடியாமல் தவித்த பெண்கள், நினைத்த உடனே, பேருந்து ஏறிப் போய், அவர்களின் அப்பா–அம்மாவை பார்க்கும்போது, நிச்சயமாக இந்த அண்ணனை நினைப்பார்கள். இப்படி மகளிர் வாழ்வுடன் ஓர் அங்கமாகிவிட்ட விடியல் பயணத்திற்கான பேருந்துகளை, விரைவில் அமையப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், அதிகரிக்கப் போகிறோம்.
இதுமட்டுமா, ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது.
அடுத்து, அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்! இனி அந்தத் தொகை, ஆயிரத்தி 500 ரூபாயாக உயரப் போகிறது.
19 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சூடாக, சுவையாக சத்தான உணவை வழங்கும் “காலை உணவுத் திட்டம்”. இனி அதை, எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப் போகிறோம்!
அதே போன்று, பல லட்சம் உயிர்களைக் காக்கும் “மக்களைத் தேடி மருத்துவம்!”
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களையும் - குடும்பங்களையும் காப்பாற்றிய ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ திட்டம்.
‘பாதம் பாதுகாப்போம்’,
‘இதயம் காப்போம்’,
‘சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம்’,
ஒன்றிய அரசே பின்பற்றப் போவதாக சொல்லியிருக்கும் ‘தோழி விடுதி’,
‘ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு’,
‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’
‘கலைஞர் கனவு இல்லம்’ –
இவ்வாறு நாள் முழுவதும் என்னால் பட்டியல் போட முடியும்!
2021-இல் திராவிட மாடல் ஆட்சிக்காக, உங்களுடைய ஆதரவைக் கேட்டபோது சொன்னேன். அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாக கொடுத்துவிட்டுத்தான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது, 2.0 ஆட்சியில் அடையவிருக்கும் புதிய உயரங்களுக்கான அடித்தளம். அதற்கான செயல்திட்டமாகத்தான், நம்முடைய ‘சூப்பர்ஸ்டாரை’ களமிறக்கி இருக்கிறோம்.
இந்தத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் யார்? நம்முடைய தேர்தல் அறிக்கை! ஒரு பாட்டு இருக்கிறது. “சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் நம்முடைய தேர்தல் அறிக்கை” என்று சொல்லும். சூப்பர்ஸ்டார் என்ன சொல்கிறார்? எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப் போகிறோம்! இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிதானே? இப்போதே வீட்டுக்கு வீடு என்ன டிஸ்கஷன் தெரியுமா? இல்லத்தரசி கூப்பனை வைத்து, என்ன புதிய பொருள் வாங்கலாம்? இதுதான் டிஸ்கஷன்!
இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லையெனில், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். அனைத்துமே உங்கள் சாய்ஸ்தான்! உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-ஐ வாங்கிக் கொள்ளலாம்.
அடுத்து, 20 லட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!
உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில், ஆயிரத்தி 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம். பால் கொள்முதல் விலை, லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை ஆயிரத்தி 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்தி 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தப்படும்.
2030-ஆம் ஆண்டிற்குள் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, கடலோரப் பகுதிகளில் சிப்காட் நீலப் பொருளாதாரப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
மீன் ஏற்றுமதியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களை முழுமையாக பயன்படுத்தி, மீனவர்கள் தங்களுடைய வருவாயைப் பெருக்குவதற்கு தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கடற்பாசி வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்.
நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனை அங்காடிகள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.
மீன் மற்றும் கருவாடு சில்லறை விற்பனை, கடற்பாசி வளர்ப்பு ஆகிய சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
மீனவர்களின் துயரைத் துடைக்க, இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீளாய்வுச் செய்யப்பட்டு, கச்சத்தீவை மீட்க தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இப்படி, நம்முடைய சூப்பர்ஸ்டாரில் ஏராளமான வாக்குறுதிகள் இருக்கிறது. இந்த ஸ்டாலின் சொன்னால், சொன்னதைச் செய்வான்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை உறுதியாகச் செய்வேன்! சொல்லாமல் அதிரடியாகவும் செய்வேன்!
அதனால்தான், “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று இருந்த நிலையை மாற்றி, “தெற்குதான் வழிகாட்டுகிறது” என்ற நிலையை திராவிட மாடலில் உருவாக்கி இருக்கிறோம்.
அப்படி வழிகாட்டும் தெற்கை, வஞ்சிக்கும் செயலில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியிருக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை காரணமாக காட்டி, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கப் பார்க்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு துணைநின்ற தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்கப் பார்க்கிறார்கள். இதை, இந்தியாவில் இருக்கும் அத்தனை ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கப் போகிறோம்.
இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் பழனிசாமிக்கு இருக்கிறதா? மற்றவற்றுக்கெல்லாம் வாய்கிழியப் பேசும் பழனிசாமி, பா.ஜ.க-வின் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்க சொன்னால் மட்டும், “சைலண்ட் மோடுக்கு” போய் விடுகிறார். மோடியையும் – அமித்ஷாவையும் எதிர்த்து பேச வேண்டுமென்றால் பயத்திலேயே “ஸ்விட்ச் ஆஃப்” ஆகிவிடுவார்.
அவர் எதற்காக பிரச்சாரத்திற்கு போகிறார் தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு அடிமை, உலகத்தில் யாருமே பார்த்ததில்லை என்ற கின்னஸ் சாதனையைப் படைக்கத்தான் பிரச்சாரம் செய்கிறார்! இவரின் ஓனர் யாரு? பா.ஜ.க.!
இங்கு மீனவச் சொந்தங்கள் வந்திருப்பீர்கள்... உக்ரைன் போரை நிறுத்திவிட்டேன், அமெரிக்காவையே அலற விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் விஸ்வகுரு மோடி அவர்கள், அண்டை நாடான இலங்கையிடம் பேசச் சொன்னால், மவுனகுருவாக ஆகிடுவிடுவார்! பார்க்கிறோமா, இல்லையா? தட்டிக் கேட்க முடியவில்லை என்று சொல்வதைவிட, தமிழ்நாட்டு மீனவர்கள்தானே என்பதால், தட்டிக் கேட்காமல் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நம்முடைய தமிழ்நாட்டு மீனவர்களை, இந்திய மீனவர்களாக நினைத்திருந்தால், இப்படி அல்லல்பட விட்டிருப்பாரா? கச்சத்தீவு மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத் தீர்மானம் உட்பட எத்தனை கோரிக்கைகளை அனுப்பி வைத்திருப்போம். இதுவரை ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எதுவும் இல்லை. இதுதான் நாம் கேட்கும் கேள்வி!
பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டின் மீது வரும் திடீர் அக்கறை என்பது, வெறும் அரசியல் ஸ்டண்ட் மட்டும்தான்! அவர்கள் செய்வது ராஜதந்திரம் இல்லை; இரட்டை வேட தந்திரம்!
அண்மையில், சென்னையில் ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள், “ஜீரோ B.J.P” என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். அதைத் தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா? “பரகால பிராபகர்”! ஒன்றிய நிதியமைச்சராக இருக்கிறார்களே, அம்மையார் நிர்மலா சீதாராமன், அவரின் கணவர்தான், இந்த “பரகால பிரபாகர்” அவர்கள். அவர் என்ன சொல்கிறார் என்றால், “தமிழ்நாட்டுத் தேர்தல், நாட்டுக்கே முக்கியமான தேர்தல்!” “பா.ஜ.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் - இந்திய அரசியலமைப்புச் சட்டம் போற்றிப் பாதுகாக்கும் உயர்ந்த விழுமியங்கள் மீது விழும் மரண அடி!” அதுமட்டுமல்ல, “மத நல்லிணக்கம் - மொழி நல்லிணக்கம் - மாநிலங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு விழும் மரண அடி!” “சமத்துவம் - சகோதரத்துவம் - சமூகநீதி - சுதந்திரம் - பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றின் மீது விழும் மரண அடி!” என்று எச்சரித்திருக்கிறார்.
நாம் என்ன மொழி பேச வேண்டும் - நாம் என்ன படிக்க வேண்டும் - நாம் என்ன உடுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் பா.ஜ.க.வை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று, பரகால பிரபாகர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். பா.ஜ.க. எவ்வளவு பெரிய டேமேஜை - டேஞ்சரை உண்டாக்கியிருந்தால், அவர் இப்படி பேசியிருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.
அண்மையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் பா.ஜ.க., பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய பன்முகத்தன்மைக்கு பா.ஜ.க. விட்டிருக்கும் நேரடி சவால் இது! மேற்கு வங்கத்தில் இருந்து விட்டிருக்கும் அந்தச் சவாலை, அவர்களால் தமிழ்நாட்டில் விடமுடியவில்லை! ஏன் என்றால், தமிழ்நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருப்பது “திராவிடப் பெருஞ்சுவர்!” தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இந்தத் தமிழ்க் கோட்டையை - சமத்துவத்துக்கு எதிரான மதவாத கும்பல்கள் ஆக்கிரமிக்க ஒருநாளும் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்! இதை, பா.ஜ.க.வும் நன்றாக உணர்ந்திருக்கிறது!
அதனால்தான், “நம்முடைய கையையே எடுத்து, நம்முடைய கண்ணைக் குத்தும் வேலையைச்” செய்ய இன்றைக்கு அவர்கள் அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்! பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்துக் கொண்டு வருவதற்கான, பல்லக்குத் தூக்கியாக மாறியிருப்பவர்தான் பழனிசாமி!
தமிழ்நாட்டுக்கு வரிசை கட்டி வரும் பா.ஜ.க. அமைச்சர்களும் - நட்சத்திரப் பேச்சாளர்களும் தொடர்ந்து என்ன பேசுகிறார்கள்? தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள்! இதை ஒரு நாளாவது கண்டித்திருக்கிறாரா பழனிசாமி?
மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்தாக, தொகுதி மறுசீரமைப்புத் திட்டம் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதை கண்டித்து, தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒரு வார்த்தையாவது பழனிசாமி பேசியிருக்கிறாரா?
பொதுசிவில் சட்டம் குறித்து பழனிசாமியின் நிலைப்பாடு என்ன?
மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து, பெரிய அட்டார்னி ஜெனரல் போன்று லா பாயிண்ட் எல்லாம் பேசிக் கொண்டு இருந்தாரே… பொதுசிவில் சட்டம் பற்றி, கருத்து சொல்வாரா?
பழனிசாமி அவர்களே... காலில் விழுந்து விழுந்து கால்களை வாரிவிட்ட நீங்கள், இப்போது சொந்த மக்களுக்கே குழி பறித்து துரோகம் செய்கிறீர்கள்! இதுதான் பழனிசாமி செய்யும் பச்சை துரோகம்!
பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்த நான்கு ஆண்டுகள் என்பது, ஊழல்களும் - மக்கள் விரோத நடவடிக்கைகளும் நிறைந்த, இருண்ட ஆட்சிக் காலம்! சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அவரின் ஆட்சியின் அடையாளங்கள் என்ன?
பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி! துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி! கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி! கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி! என்று அனைத்துமே நெகட்டிவாகத்தான் இருக்கிறது!
தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி - தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க - சரண்டரான இடம்தான், பா.ஜ.க.வின் வாஷிங்மெஷின்! தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க, அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டின் உரிமைகள்! அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் - பா.ஜ.க.வுக்கு விழும் வாக்குகள்! தனிமனிதர்களைவிட நமக்கு தமிழ்நாடுதான் பெரியது!
எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்! அதனால்தான், நடக்கும் தேர்தல் - தமிழ்நாடு வெர்சஸ் NDA என்று அழுத்தமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியைக் கொடுத்து, விரட்ட வேண்டும்! டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு இருக்கும், டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு அடிமைகள் தமிழ்நாட்டில் ஆளக் கூடாது!
நேற்று, ஐ.பி.எல் மேட்ச் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் வேனில் வரும்போது ஐ–பேடில் மேட்ச் பார்த்தேன். டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது! அதேபோன்று, இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போவது யாரு? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? தமிழ்நாடு அணி (மக்கள்).
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... நாம் போராடுவது, தி.மு.க.வின் வெற்றிக்கு மட்டுமல்ல; கூட்டணியின் வெற்றிக்காகவோ மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக!
அதற்கு, முதுகுளத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பன் அவர்களுக்கும் - இராமநாதபுரம் தொகுதியில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் அவர்களுக்கும் - பரமக்குடி தொகுதியில் கே.கே. கதிரவன் அவர்களுக்கும், வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!
திருவாடானை தொகுதியில் இராம. கருமாணிக்கம் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
அடுத்து அமையவுள்ள நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிப்போம்! இது உங்கள் ஸ்டாலினின் கேரண்டி! நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
Also Read
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”N.D.A. எனும் பேரிடர்.. டெல்லி அடிமை தான் பழனிசாமி!” புதுக்கோட்டையில் அனல் பறந்த முதலமைச்சரின் பேச்சு!
-
“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சந்தீப் மிட்டலை திரும்பப் பெறுக : தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு MP கடிதம்!