Tamilnadu
”N.D.A. எனும் பேரிடர்.. டெல்லி அடிமை தான் பழனிசாமி!” புதுக்கோட்டையில் அனல் பறந்த முதலமைச்சரின் பேச்சு!
கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11-04-2026) புதுக்கோட்டையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
புதுக்கோட்டை – திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை! தொடர்ந்து இரண்டாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்க - புது வரலாற்றைப் படைக்க புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறேன்.
புதுக்கோட்டையின் சிறப்புகள் என்ன? குகைக் கோவில்கள், கல்வெட்டுகள், தொல்லியல் சின்னங்கள் என்று, எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் பண்பாட்டையும் - வரலாற்றையும் சொல்லும் ஊர்தான், புதுக்கோட்டை!
புதுக்கோட்டைக்கு என்று பெரிய வரலாறு இருக்கிறது. இங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். கீரனூர் முத்து மற்றும் விராலிமலை சண்முகம்! இன்றைய இளைஞர்கள் அவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நினைவூட்ட விரும்புகிறேன். 1965-இல் தாய்த்தமிழைக் காப்பதற்காக தங்களின் உயிரையே தந்த இளைஞர்கள் அவர்கள்! அப்படிப்பட்ட மொழிப்போர் தியாகிகளைத் தந்த புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறேன்.
தமிழுக்கு மீண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஆபத்து வந்திருக்கிறது. அந்த பா.ஜ.க.வையும் – அவர்களை தூக்கி சுமக்கும் அடிமை அ.தி.மு.க.வையும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன்.
இந்தத் தேர்தல் என்பது, எதற்கான தேர்தல்? இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார், தமிழ்நாடா? டெல்லியா? தமிழ்நாட்டுக்கு எது தேவை? மக்களாட்சியா? சர்வாதிகாரமா? இதை நீங்கள், ஏப்ரல் 23 அன்றைக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காட்ட வேண்டும்; நிரூபிக்க வேண்டும்!
அதற்கு வேட்பாளர்களை உங்கள் அனுமதியோடு அறிமுகப்படுத்தலாமா?
முதலில், திருமயம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் ரகுபதி அவர்கள். மிக நீண்ட அரசியல் வரலாறு கொண்டவர்! அமைச்சராக தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்பவர் மட்டுமல்ல; நம்முடைய ஆட்சி மீது பரப்பப்படும் அவதூறுகளை, ஆணித்தரமான வாதங்கள் மூலமாக, ஊடகங்களில் எதிர்கொள்ளும் திறமை படைத்தவர். அரிமளம் ஒன்றியத்தில் புதிய சமத்துவபுரம்; இலங்கைத் தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் என்று ஏராளமான திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்திருக்கிறார். இவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மெய்யநாதன் அவர்கள். நம்முடைய மதிப்பைப் பெற்ற, மாண்புமிகு அமைச்சர். கீழாத்தூர் அரசு கலைக் கல்லூரி - திருவரங்குளம் விளையாட்டு மைதானம் - ஆலங்குடி அறிவுசார் மையம் போன்ற திட்டங்களை, உருவாக்கித் தந்து, மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, விராலிமலை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் அவர்கள். வழக்கறிஞர் - புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். விராலிமலை தொகுதிக்கு நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செய்து தரப் போகிறவர். இவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் முத்துராஜா அவர்கள். அரசுப் பணியை விட்டுவிட்டு, மக்கள் பணிக்கு வந்த உழைப்பாளர். கடந்த முறை வென்று, மூடப்பட்ட முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர். புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டு வந்திருக்கிறார். இவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் சின்னத்துரை அவர்கள். 12 ஆண்டுகளாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்து, மக்களுக்காக உழைக்கும் உன்னதமான தோழர். விவசாயத் தொழிலாளர்களின் நலனைக் காக்க பாடுபடும் தோழர் சின்னத்துரை அவர்களின் குரல், மீண்டும் சட்டமன்றத்தில் ஒலிக்க அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த அருமைத் தம்பி டி. ராமச்சந்திரன் அவர்கள். நம்முடைய முன்னாள் அமைச்சர் என்னுடைய பெருமதிப்பிற்குரிய அருமைச் சகோதரர் சு. திருநாவுக்கரசர் அவர்களின் அருமை மகன். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். அறந்தாங்கி தொகுதியில் கடந்த முறையும் வெற்றி பெற்று நல்ல பல திட்டங்களை கொண்டு வந்த ஒரு சிறப்புக்குரிய இளைஞர். தம்பி ராமச்சந்திரனுக்கு, கை சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களின் வெற்றி உறுதிதானே? உறுதி (மக்கள்). மக்கள் உறுதி செய்துவிட்டார்கள், வேட்பாளர்கள் உட்காரலாம்!
நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் – ஒவ்வொரு வட்டத்திற்கும் – ஒவ்வொரு ஊராட்சிக்கும் என்ன தேவை என்று பார்த்து செய்திருக்கிறோம்.
இப்படி, இந்தப் புதுக்கோட்டை மாவட்டத்தை புத்தம் புது கோட்டையாக உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் சிலவற்றை மட்டும் ஹைலைட்ஸாக சொல்ல வேண்டும் என்றால்,
திருமயத்தில் அரசு மருத்துவமனை,
நெல் கொள்முதல் நிலையம்,
ஆலங்குடியில் நெல் கொள்முதல் நிலையம்,
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி பக்கத்தில், பல் மருத்துவக் கல்லூரி,
புதுக்கோட்டை ராஜகோபால தொண்டைமான் அவர்களுக்கு மணிமண்டபம்,
புதுக்கோட்டை அண்ணா சிலையில் இருந்து, அறந்தாங்கி செல்லும் சாலையில், கீரனூர் வரை 40 கோடி மதிப்பீட்டில் சாலைகள்,
344 அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள்,
தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இருக்கும் 33 திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. 255 திருக்கோயில்களின் பராமரிப்புக்கு மானியத்தை உயர்த்தியிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, 4 இலட்சம் பேர் பயனடையும் வகையில், ஆயிரத்து 820 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
இப்படி, இன்னும் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது! இவ்வளவும் செய்து கொடுத்திருக்கும் காரணத்தினால்தான் உங்களிடம் உரிமையுடன் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளைப் பற்றி, நிறைய செய்திகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தி.மு.க. அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால், அது சாதனை திட்டமாகத்தான் இருக்கும்! நம்முடைய சாதனைகள்தான் இந்தியாவிற்கே ‘Bench-Mark’-காக இருக்கும்! எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்.
கிரிக்கெட்டில் பல பிளேயர்ஸ், பல ரெக்கார்டுகளை வைத்திருப்பார்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தீர்கள் என்றால், அவரிடம் அனைத்து ரெக்கார்டுமே இருக்கும்! அரசியலில் அப்படிப்பட்ட முறியடிக்க முடியாத அனைத்து ரெக்கார்டும் தி.மு.க.தான் செய்திருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கிறேன். இனியும் தொடர்ந்து நாம்தான் ரெக்கார்டு பிரேக் செய்யவும் போகிறோம்.
நம்முடைய திட்டங்களைப் பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன், ஒன்றிய அரசே காப்பி அடித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில், தி.மு.க.தான், O.G.! இந்த ஸ்டாலினின் அப்படிப்பட்ட திட்டங்களை சொல்லவா.
இங்கு ஏராளமான மகளிர் வந்திருக்கிறீர்கள். இங்கு இருக்கும் என் சகோதரிகளிடம் கேட்கிறேன். மாதந்தோறும் 15-ஆம் தேதி, உங்கள் அக்கவுண்ட்டுக்கு இந்த அண்ணன் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வருகிறதா? வருகிறது (மகளிர்). திராவிட மாடல் 2.0-வில் உரிமைத்தொகையை எவ்வளவாக உயர்த்தப் போகிறோம்? டபுள் ஆக்கப் போகிறோம். இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப் போகிறோம்! இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள், தங்களின் அன்றாட செலவுகளுக்குகூட, மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதை உரிமைத்தொகையால் உடைத்திருக்கிறோம். ‘எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர்’ என்று மகளிர் அனைவரும் உரிமையுடன் பேசுகிறார்கள்!
அடுத்து, விடியல் பயணம்! பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் புரட்சித் திட்டம்! சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகை போக்குவரத்திற்கே செலவாகிவிடும் என்று, வீட்டுக்குள்ளேயே பலர் முடங்கியிருந்த நிலையை உடைத்திருக்கிறோம்.
அடுத்து, காலை உணவுத் திட்டம்! சென்னையில் அசோக் நகரில் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றிருந்தேன்… ஒரு குழந்தையிடம் அன்பாக பேசிக் கொண்டிருக்கும்போது, “சாப்பிட்டியாமா” என்று கேட்டேன். அந்தக் குழந்தை, “இல்லை… சாப்பிடவில்லை” என்று சொல்லியது. விசாரித்தபோது, அப்பா–அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போவது உள்ளிட்ட காரணங்களால் சில குழந்தைகள், காலையில் சாப்பிடாமல் வருகிறார்கள் என்று தெரிந்தது… குழந்தைகளை பசியுடன் தவிக்கவிடலாமா? அவர்கள் பசியைப் போக்க வேண்டும் என்றுதான், காலை உணவுத் திட்டத்தை தொடங்கினேன்.
அந்தத் திட்டத்தை செயல்படுத்தியதால்தான் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருவதும் அதிகமாயிருக்கிறது. அவர்களின் கற்றல் திறனும் அதிகமாகியிருக்கிறது! இப்படிப்பட்ட காலை உணவுத் திட்டத்தை, ஐந்தாம் வகுப்பிலிருந்து, இனி எட்டாம் வகுப்பு வரையில் விரிவாக்கம் செய்யப் போகிறோம்.
அதேபோன்று, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் அனைவரும் டிகிரி படித்தவர்களாக உயர வேண்டும் என்பதுதான் நம்முடைய கனவு. ஆனால், காலேஜுக்கு வரும் மாணவிகளில் சிலர், பாதியிலேயே டிராப்-அவுட் ஆகிவிடுகிறார்கள் என்று தகவல் வந்தது. இதை உடனே சரி செய்ய வேண்டும் என்று கொண்டு வந்ததுதான், புதுமைப்பெண் திட்டம்! இந்தத் திட்டத்தின் மூலமாக ஆறு இலட்சத்து 95 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து இன்றைக்கு படிக்க வைத்துக் கொண்டிருப்பவன்தான் உங்கள் முன்பு நிற்கும் இந்த ஸ்டாலின். இது அந்த மாணவிகளின் படிப்பை தொடர்வதற்கு, பெரிய துணையாக இருந்தது.
இதைப் பார்த்ததும், மாணவர்களும், இப்படியொரு திட்டம் எங்களுக்கு கிடையாதா என்று உரிமையாக கேட்டார்கள். அப்படி, மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட திட்டம்தான், தமிழ்ப்புதல்வன். திராவிட மாடல் 2.0-வில் இதையும் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம்.
அடுத்து, நான் முதல்வன் திட்டம். நம்முடைய மாணவர்கள் படித்து முடித்த பிறகும் வேலையில்லாமல் இருப்பதற்கான சூழ்நிலையை அடைகிறார்கள். அதற்கான காரணத்தை ஆராய சொன்னேன். நம்முடைய மாணவர்களுக்கு படிப்புடன் சேர்த்து, ஸ்கில் டெவலப்மெண்ட் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காக சிந்தித்து, உருவாக்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு என்னுடைய முதல் பிறந்தநாள் அன்றைக்கு இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
அதன்மூலமாக நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் நல்ல வேலைகளில் அமர வேண்டும் என்று உருவாக்கியதுதான், நான் முதல்வன் திட்டம்! அதன் ரிசல்ட் என்ன? இதுவரைக்கும் இல்லாத அளவில், நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!
அடுத்து, தோழி விடுதி! இங்கு இருக்கும் பலரும் உங்களுடைய மகள்களை, பெண் பிள்ளைகளை வேலைக்காக, வெளியூருக்கு அனுப்புவீர்கள். அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்கியிருக்கிறார்களா என்று எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். அதை புரிந்து கொண்டுதான், தோழி விடுதிகளை தொடங்கினோம். அந்த விடுதிகளில் ஏராளமான பெண்கள் பாதுகாப்பாக தங்கியிருந்து பணிகளை செய்கிறார்கள். இன்றைக்கு ஒன்றிய அரசே இந்தத் திட்டத்தை காப்பி அடிக்கிறது.
அடுத்து, தாயுமானவர் திட்டம். ஒரு முறை கள ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது வயதான பெண்மணி ஒருவர், முதுமையால் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முடிவதில்லை என்று கவலைப்பட்டார்கள். இதைப்பற்றி நான் ஆய்வு செய்தேன். 70 வயதுக்கு மேற்பட்ட பலரும் கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வாங்குவதில் இருக்கக்கூடிய சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வந்தது. அவர்கள்தான் வாங்குவதில்லையே என்று நான் சும்மா இருந்துவிடவில்லை. வயதான அவர்களுக்கு நாம்தான் துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அப்படி தொடங்கியதுதான், தாயுமானவர் திட்டம். இந்தத் திட்டத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் சுமார் 15 இலட்சம் பேரின் வீடுகளுக்குத் தேடிச் சென்று, அரிசி – பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! அவர்களும் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!
ஆனால், இத்தனையும் செய்து கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின், கொரோனாவில் போயிருக்க வேண்டும் என்று பழனிசாமி வன்மத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
பழனிசாமி அவர்களே… இந்த ஸ்டாலின் இருந்து, என்னுடைய மக்களுக்கு இன்னும் ஏராளமான திட்டங்களை செய்யத்தான் போகிறேன்; அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்!
தமிழ்நாட்டை இன்றைக்கு இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி பெற்ற மாநிலமாக, நம்முடைய திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது. இந்த அடித்தளத்தில் இருந்து, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய உயரங்களுக்கான பயணத்தை தொடங்கப் போகிறோம். அதற்கான திட்டமாகத்தான் ‘சூப்பர்ஸ்டார்’ வந்திருக்கிறார். “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா… சின்னக் குழந்தைகள்கூட சொல்லும்”. அதுதான் நம்முடைய தேர்தல் அறிக்கை!
அதில் என்ன ஹைலைட்? இங்கு இருக்கும் மகளிரைக் கேட்கிறேன்… உங்கள் அண்ணன் இந்த ஸ்டாலின் கொடுக்கப் போகும் கூப்பன் எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய் (மக்கள்)! மகளிர் எல்லாம் இப்போதே வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம் என்று டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்! இந்தத் திட்டத்தில் எவ்வளவு தொகையோடு கூப்பன் தரப் போகிறோம்! எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்!
இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-ஐ வாங்கிக் கொள்ளலாம்! வீட்டுக்காரரிடமெல்லாம் கேட்காதீர்கள். ஏதாவது கேட்டு முறைத்தார்கள் என்றால், அண்ணனிடம் சொல்லிவிட்டேன் என்று நீங்கள் சொல்லிவிடுங்கள். உங்கள் இஷ்டம். உங்கள் சாய்ஸ்.
அடுத்து, 20 இலட்சத்துக்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!
உயர்கல்வி முடித்திருக்கும் 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம். நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்.
புதுக்கோட்டையில் இயந்திரத் தயாரிப்பு குழுமம் உருவாக்கப்படும். இந்த ஸ்டாலின் சொன்னால், சொன்னதை செய்வான்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்!
ஆனால், பா.ஜ.க.வின் கிளைக் கழகச் செயலாளராக இருக்கும் பழனிசாமி அவர்களால், இப்படி ஏதாவது சாதனைகளை சொல்லி, வாக்கு கேட்க முடியுமா?
எங்கேயாவது, அவர் சாதனைகளை சொல்லி, பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, கொள்கைகளைப் பற்றி பேசி பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, மாநில உரிமைகளுக்கு பழனிசாமி குரல் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள்!
ஏன் என்றால், பாதம்தாங்கி பழனிசாமியிடம் கொள்கைகளும் இல்லை; சாதனைகளும் இல்லை! அதனால்தான், சாக்கடைக்கு சமமான சொற்களையும், அவதூறுகளையும் பேசி, அவர் ஒரு தரமற்றவர் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
N.D.A. எனும் பேரிடரை, தமிழ்நாட்டுக்குள் பின்வாசல் வழியாக கொண்டு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி! அவர் பழனிசாமி இல்லை. ஆமாம்சாமி! அடிமைசாமி!
அ.தி.மு.க. எந்தக் கூட்டணியில் அடிமை சாசனம் எழுதி கொடுத்து சேர்ந்திருக்கிறது? அன்னைத் தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்யும் N.D.A. கூட்டணியில் சேர்ந்திருக்கிறது! அந்தக் கூட்டணி டெல்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி! அனைவருக்கும் தெரியும். ஊழல்வாதிகளும் - தேர்ந்த துரோகிகளும், காவி கும்பலை தோளில் சுமந்து கொண்டு வருகிறார்கள்.
நேற்றுகூட, பா.ஜ.க.வில் இருக்கும் ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்? தமிழ்நாட்டில் N.D.A. கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று பேசியிருக்கிறார். அடிமைசாமியான பழனிசாமி இதற்கு ஏதாவது பதில் சொன்னாரா? என்ன சொல்வார்? ஒன்றும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டுக்கு வரும் பா.ஜ.க. அமைச்சர்கள் எல்லாம் என்னவெல்லாம் பேசிவிட்டு போகிறார்கள் என்று பத்திரிகைகளில், டி.வி.யில், செய்திகளில் வருகிறது. அனைத்தையும் பார்க்கிறீர்கள்.
அமைச்சராக இருக்கக்கூடிய பியுஷ் கோயல் – அமைச்சராக இருக்கக்கூடிய தர்மேந்திர பிரதான் என்று இங்கு வருபவர்கள் எல்லாம், இந்தித் திணிப்புக்கு ஆதரவாக மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து அடிமைசாமி ஏதாவது குரல் கொடுத்திருக்கிறாரா?
ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான் அவர்களின் வேலை என்ன? கல்வியை வளர்ப்பதில்லை; கல்வியை காவிமயமாக்கினார்! இந்தியைத் திணிக்க மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவிட்டு செல்கிறார். இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நம்முடைய குழந்தைகளின் படிப்புக்கு கொடுக்க வேண்டிய, இரண்டாயிரம் கோடி ரூபாய் கல்வி நிதியை கொடுக்காமல் தடுப்பது! இதெல்லாம்தான், அவரது வேலை.
மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துங்கள், இரண்டாயிரம் கோடியை தருகிறோம் என்று அமைச்சர் பிரதான் சொன்னார். இரண்டாயிரம் கோடி இல்லை; பத்தாயிரம் கோடியே கொடுத்தாலும், இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டேன்… எங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவையும், ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் நானே கொடுத்துக் கொள்கிறேன் என்று உறுதியாக சொன்னவன் தான், இங்கே உங்கள் முன்னால் நிற்கின்ற ஸ்டாலின்!
இதுவே அடிமைசாமியாக இருந்தால், எதிர்த்து குரல் கொடுத்திருப்பாரா? இதெல்லாம் R.S.S. அமைப்பின் நீண்ட கால செயல்திட்டங்களின் ஒரு பகுதி.
எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்றால், நம்முடைய குழந்தைகள் கல்வி நிலையங்களைவிட்டு வெளியேற வேண்டும்; அறிவியல்பூர்வமாக சிந்திப்பதை நிறுத்த வேண்டும்; வாட்ஸ்அப் வதந்திகளையும், பிற்போக்குத் தனங்களையும் நம்ப வேண்டும்; அப்போதுதான் அந்தக் காலம் போன்றே நாம் முன்னேறாமல் முடங்கிக் கிடப்போம்; ஒரு சிலர் மட்டும் வாய்ப்புகளை தட்டிப் பறித்து, முன்னேறுவார்கள். இதுதான், அவர்களின் திட்டம்; அவர்களின் எண்ணம். இதற்கான செயல்திட்டங்களுக்கு எல்லாம் ஆமாம்சாமி போடும் முரட்டு அடிமையாக வாய்த்திருப்பவர்தான், இந்த அடிமைசாமி! அடுத்தடுத்த துரோகங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்தான், N.D.A. கூட்டணி!
பழனிசாமிக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மேல் அக்கறை இருந்தால், தர்மேந்திர பிரதான் தொடங்கி, அமித் ஷா - மோடி வரைக்கும் மேடையில் உட்கார வைத்து, “இது தமிழ்நாடு! இங்கு பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்த இருமொழிக் கொள்கை மட்டும்தான் இருக்கும்” என்று ஆணித்தரமாக பேச முடியுமா அவரால்? ஒரு அடிமையால் ஓனரை எதிர்த்து பேச முடியாது.
பிரதமர் மோடி அவர்களைப் பார்த்து, “தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் - ‘வணக்கம்’, ‘நன்றி’ என்று மட்டும் சொல்லி, தமிழில் பேச முடியவில்லை என்று வருத்தப்படுவதாக” சொல்கிறீர்களே, பிறகு ஏன், தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிகமாக நிதி வழங்குகிறீர்கள் என்று கேள்வி கேட்பாரா, இந்த அடிமை பழனிசாமி?
அமித்ஷா அவர்களைப் பார்த்து, “சமஸ்கிருதம்தான், அனைத்துக்கும் மூலமொழி” என்று நீங்கள் சொல்வது தவறு என்று பழனிசாமியால் வாதிட முடியுமா? அதற்கான முதுகெலும்பு பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரை சும்மா ஒன்றும் ஆமாம்சாமி, அடிமைசாமி என்று சொல்லவில்லை. எதற்கெல்லாம் ஆமாம்சாமி போடுகிறார்?
குடியுரிமைத் திருத்தச் சட்டம்! அவர் நினைத்திருந்தால் அவர்கள் எம்.பி.க்கள் ஆதரிக்காமல், அதை தடுத்திருக்க முடியும். ஆனால், ஆமாம்சாமி போட்டு இசுலாமியர்களுக்கு துரோகம் செய்தார்.
அதேபோன்று, வக்பு திருத்தச் சட்டத்தையும் ஆதரித்து, சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தார் அடிமைசாமி.
அடுத்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக F.C.R.A. சட்டம் கொண்டுவரப் போகிறார்கள். கூட்டணியில் இருக்கும் பழனிசாமி, தேர்தலுக்காகவாவது அதை எதிர்த்து பேசியிருக்கிறாரா?
அடுத்து, நீட் தேர்வை பற்றி பேசுகிறார்… நீட் தீர்மானத்தை ஒன்றிய அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலமாக மறைத்து வைத்தவர்தான் பழனிசாமி. அந்த மாதிரி துரோகம் எல்லாம் யாரும் பண்ணவில்லை!
உடனே, நாங்கள் என்ன பண்ணோம் என்று கேட்பார்… நான் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறேன்… நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை பிரதமர் வேட்பாளராக இருந்த அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்களே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்களைப் பார்த்து, “தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தாருங்கள்” என்று அடிமைசாமியால் கேட்க முடியுமா?
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டப்பூர்வமாக நாங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். கொள்கையை விற்று பிழைக்கும் அடிமைசாமி கூட்டத்துக்கு சுயமரியாதை உணர்வும் இருக்காது; மாநில உரிமைகளும் புரியாது!
இப்போதுகூட, நாடு முழுவதும் மக்கள், “மோடி ஜி, Where is L.P.G.” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல ஹோட்டல்களை இழுத்து மூடிவிட்டார்கள். பல ஹோட்டல்களில் மெனுவை குறைத்துவிட்டார்கள். பல ஹோட்டல்களில் விலையை ஏற்றிவிட்டார்கள். இதனால், உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் முழுவீச்சில் சரிசெய்ய முயற்சிக்காமல், சிலிண்டர் விலையை 200 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். அதுவும் சரியாக வழங்கப்படுவதில்லை.
இதையெல்லாம் எதிர்த்து பழனிசாமி குரல் கொடுத்திருக்கிறாரா? அதனால்தான், அவரை அடிமைசாமி என்று சொல்கிறோம். பழனிசாமி அவர்களே… துரோகத்தில் டாக்டரேட் வாங்கும் அளவுக்கு அனைவருக்கும் இவ்வளவு துரோகம் செய்துவிட்டு, வாய் கூசாமல் பொய்யாய் பேசிக் கொண்டிருக்கிறீர்களே!
தமிழ்நாட்டு மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பா.ஜ.க.வின் வழக்கம்! அதற்குத் துணை போவதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம்! இவர்களின் அத்தனை துரோகங்களையும் கடந்துதான், நாம் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
உரிமைத்தொகை தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்றால் – விடியல் பயணம் தொடர வேண்டும் என்றால் – காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்படாமல் தொடர வேண்டும் என்றால் – திராவிட மாடல் ஆட்சிதான் மீண்டும் அமைய வேண்டும்!
அதற்கு, திருமயம் தொகுதியில் ரகுபதி அவர்களுக்கும் - ஆலங்குடி தொகுதியில் மெய்யநாதன் அவர்களுக்கும் - விராலிமலை தொகுதியில் செல்லப்பாண்டியன் அவர்களுக்கும் - புதுக்கோட்டை தொகுதியில் முத்துராஜா அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அதேபோன்று, கந்தர்வக்கோட்டை தொகுதியில் சின்னதுரை அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அறந்தாங்கி தொகுதியில் டி. ராமச்சந்திரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு வரும் N.D.A. கூட்டணி தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டை மீண்டும் இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவார்கள்.
நாம் போராடுவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக! இப்போது சொல்லுங்கள்... வெற்றி பெறப் போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? சொல்லுங்கள்… தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?
தலைநிமிர்ந்த தமிழ்நாடு வளம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! உரக்கச் சொல்லுங்கள்… வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
தமிழ்நாடு வெல்லட்டும்!
Also Read
-
“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சந்தீப் மிட்டலை திரும்பப் பெறுக : தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு MP கடிதம்!
-
நிதானம் கெட்ட பழனிசாமி : மே முதல் வாரத்தில் மொத்தமாக திமிர் அடங்கிவிடும் - முரசொலி!
-
“அவர்களது மூட நம்பிக்கைகளை உடைக்கிறேன் பாருங்கள்…” - தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
தஞ்சை முதல் தூத்துக்குடி வரை.. முதலமைச்சரின் 4-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் விவரம் உள்ளே!