Tamilnadu

பிளாக்மெயில் செய்வதும்தான் உங்களது வேலையா? : தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாட்டின் அரசியல் தேர்தல் களம் சூடுபடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் எப்படியாவது கால்பதித்து விட வேண்டும் என பா.ஜ.க ஒவ்வொரு தேர்தலிலும் பல்வேறு திட்டங்களை தீட்டி முயற்சித்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மதவாத சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் கூட 6 மாநில முதலமைச்சர்களை தமிழ்நாட்டிற்குள் இறக்கியுள்ளது பா.ஜ.க. இங்கு வந்துள்ள பா.ஜ.க முதலமைச்சர்கள் தமிழ்நாடு வடமாநிலம் என்று நினைத்துக் கொண்டார்கள் போல... இந்த மண்ணில் வெறுப்பை விதைக்கும் வகையில் தங்களது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்காத ஒன்றிய பா.ஜ.க அரசு, மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வசதி கொண்டு வரப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். அப்போது பா.ஜ.க வெற்றி பெற்றால் தான் மெட்ரோ ரயிலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாக்குறுதியை நிவேற்றும் இடத்தில் இருந்து கொண்டு,பிளாக்மெயில் செய்யும் வகையில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ்க்கு மதுரை மக்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?

அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : சீர்காழியில் உற்சாக வரவேற்பு!