Tamilnadu

“துப்பாக்கி முனையில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் FCRA சட்டம்” : பி.வில்சன் எம்.பி கண்டனம்!

துப்பாக்கி முனையில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிப்பதைப் போன்றது FCRA சட்டம். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலாவது போதிய கால அவகாசம் இருக்கும்; ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் அத்தகைய அவகாசம் கூட இல்லை என தி.மு,க எம்.பி வில்சன் கண்டித்துள்ளார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் வில்சன் எம்.பி கூறியது வருமாறு:-

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்தச்) சட்டம் (FCRA) நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருத்தச் சட்டத்தின்படி, ஒரு தொண்டு நிறுவனம் உரிமம் (License) பெறாவிட்டாலோ, புதுப்பிக்கத் தவறினாலோ அல்லது உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ, வெளிநாட்டு நிதி உதவியுடன் கட்டப்பட்ட அந்த நிறுவனத்தின் கட்டடங்கள் அரசுடைமையாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என எதனையும் 'உரிமம் இல்லை' எனக் கூறி அரசே கையகப்படுத்த முடியும். முன்பு அமலாக்கத்துறை மூலம் மிரட்டிப் பார்த்தவர்கள், தற்போது இந்தச் சட்டத்தையே இயற்றியுள்ளனர்'

குறிப்பாக, கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி வரும் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யக்கூடிய வகையில் இந்தக் கொடூரமான சட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி முனையில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிப்பதைப் போன்றது இந்தச் சட்டம். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலாவது போதிய கால அவகாசம் இருக்கும்; ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் அத்தகைய அவகாசம் கூட இல்லை.

இஸ்லாமியர்களுக்கு வக்ஃப் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அவர்களின் சொத்துகளைப் பறிக்க முயன்றது போலவே, இந்தச் சட்டத்தை நிறைவேற்றினால் கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துமே பாதிப்புக்குள்ளாகும். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதும், யாரிடம் முறையான உரிமம் இல்லையோ அவர்களின் சொத்துகள் அனைத்தும் ஒன்றிய அரசிடம் சேர்ந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களிடமிருந்து சொத்துகளை எப்படிக் கொள்ளையடிப்பது என்று திட்டமிட்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களில் அப்படி என்ன தவறை நீங்கள் கண்டீர்கள்? 'தேசிய பாதுகாப்பு' என்கிற பெயரில் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சொத்துகள் இந்தியாவில் உள்ள இரண்டு பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இதைப் பற்றி விரிவாக விவாதிக்கவில்லை; ஆனால், இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை நிறைவேற்ற முடியும்.

கிறிஸ்தவர்களின் புனிதமான தவக்காலத்தில் இத்தகைய செயல்களைச் செய்கின்றனர். இந்த நேரத்தில் கொண்டு வரப்படும் இச்சட்டம், அவர்களின் பிரார்த்தனை மற்றும் மனநிலையைப் பாதிக்கும் வகையில் உள்ளது.

இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடும். வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தின்போது சொத்துகளைப் பறிக்க முயன்றது போலவே, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டமும் சொத்துகளைப் பிடுங்குவதற்குச் சமமாகும். இது வெறும் தொண்டு நிறுவனங்களோடு மட்டும் நின்றுவிடாது; இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சொத்துகளைப் பறிப்பதற்கே வழிவகை செய்யும்

கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பழங்குடியின மக்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் பயனடைந்து இன்று நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர். அவர்களின் சொத்துகளைப் பறிக்கும் நோக்கோடே இந்தச் சட்டம் பார்க்கப்படுகிறது. இச்சட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடக்கம் முதலே தனது கண்டனத்தைத் தெரிவித்து வருவதோடு, இது தொடர்பாகப் பிரதமருக்குக் கடிதமும் எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘இல்லத்தரசி திட்டம்’ : தேர்தல் களத்தில் எதிரிகளும் உதிரிகளும் க்ளீன் போல்டு - அமைச்சர் கீதா ஜீவன்!