Tamilnadu

“ஆணவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி” : தேர்தல் பரப்புரையில் கனிமொழி விமர்சனம்!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் ஐ.பெரியசாமியை ஆதரித்து கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்

அப்போது பேசிய கனிமொழி எம்.பி "இந்தத் தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி அவர்களுக்கு வாக்குச் சேகரிக்க வந்துள்ளேன். உங்களின் இந்த ஆரவாரமான, ஆக்ரோஷமான வரவேற்பைப் பார்க்கும்போதே நமது வெற்றி இப்போதே உறுதியாகத் தெரிகிறது.

இந்தப்பரப்புரை என்பது வெறும் வாக்குச் சேகரிப்பு கிடையாது; இது வெற்றிக்கான நன்றி தெரிவிப்புப் பரப்புரை.

இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் செய்தியாளர் ஒருவர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி அவர்களிடம், 'உங்களின் முந்தைய வாக்கு வித்தியாச சாதனையை நீங்களே முறியடிப்பீர்களா?' என்று கேட்டார். அதற்குப் பதில் ஒன்றுதான் – அவருடைய சாதனையை அவரேதான் முறியடிக்க முடியும், வேறு யாரால் அது முடியும்?

நமது அரசு 1.31 கோடி மகளிருக்கு மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறது. கல்லூரியில் பயிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல், 3.8 லட்சம் மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

தேர்தல் அறிக்கையில் காலை உணவுத் திட்டம் என்பது வாக்குறுதியாகக் கொடுக்கப்படவில்லை. ஆனால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பசியோடு இருக்கக் கூடாது என்ற உன்னத நோக்கில் நமது அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்தது.

மக்களைத் தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம், இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48, கலைஞர் கனவு இல்லம் என நமது அரசின் எண்ணற்ற சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

நம்மை இந்து மக்களுக்கு எதிரான அரசு என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், நமது திராவிட மாடல் ஆட்சியில் தான் 4000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 7500 ஏக்கருக்கும் மேலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இந்த அளவிற்குப் ஆன்மீகப் பணிகள் சிறப்பாகச் செயல்பட்டது கிடையாது.

இந்த அரசு சிறுபான்மையின மக்களுக்கானது மட்டுமல்ல; பெரும்பான்மையாக உள்ள இந்து மக்கள் உட்பட அனைவருக்கும் பொதுவான அரசு தான் நமது திமுக அரசு. நமது அரசின் ஒவ்வொரு திட்டத்தின் மூலமும் பயன்பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் இந்து மக்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அடுத்து, எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தனது சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைத்தவர். தன்னை அரியணையில் அமர வைத்த சசிகலா அம்மையாருக்கே துரோகம் செய்தவர் அவர். 'தான்' தான் எல்லாம் என்று ஆணவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நமது அரசு மீண்டும் பொறுப்பேற்றவுடன், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 5 லட்சம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். 35 லட்சம் கல்லூரி மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும்.

மேலும், உங்கள் கோரிக்கைகளான விவசாயப் பொருட்களுக்குத் தனி குளிர்பதனக் கிடங்கு, திண்டுக்கல் பூட்டுத் தொழிலை மேம்படுத்தத் தொழில் வளர்ச்சிக் குழுமம், மற்றும் சின்னாளப்பட்டியில் புதிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் ஆகிய அனைத்தும் நமது அரசு பொறுப்பேற்றவுடன் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்." என தெரிவித்தார்.

Also Read: தமிழ்நாடெங்கும் ஹிட்: ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" இணையத்தில் வைரல்!