Tamilnadu

“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சென்னையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மக்கள் 100% வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இன்றும் (மார்ச் 27), நாளையும் (மார்ச் 28) அனுப்பப்படுகிறது என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, “சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் இன்று (மார்ச் 27) முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் இருந்து அனுப்பப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், FLC (முதல்நிலை சரிபார்ப்பு) முடிந்த பின், இயந்திரங்கள் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பப்படுகிறது.

தேர்தலையொட்டி, வேட்பாளர் பிரச்சாரத்திற்காக காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ள இடங்களைத் தவிர வேறு இடங்களைக் கேட்டால் அவற்றிற்கு அனுமதி கொடுப்பதில்லை.

அரசியல் கட்சிகள் கேட்கும் இடங்களில் எவ்வளவு கூட்டம் வரும், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

நாளைக்கு தேர்தல் கூட்டம் நடத்தப் போகிறோம் என இன்று அறிக்கையாக அறிவித்து அனுமதி கேட்டால் வழங்கப்படாது. 48 மணிநேரத்திற்கு முன்பாக இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முன் அனுமதி பெறவில்லை என்றால் அனுமதி கிடையாது.”

Also Read: “பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு!” : முரசொலி தலையங்கம்!