Tamilnadu
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
கடந்த 2020-ம் ஆண்டு உலகமே கோவிட் தொற்றால் பாதிப்படைந்து லாக்டவுன் போடப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், கடைகளுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் இருந்தன. குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைகளை பூட்டும்படி உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கைகள் எடுத்தனர்.
அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுக ஆட்சியின்போது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உரிய நேரத்திற்கு மேலாக கடையை திறந்து வைத்திருந்தார்கள் என்று கூறி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தனியார் வாகனத்தில் ஏற்றி, காவல்நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கே போலீசார் தாக்கியதில் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து தமிழ்நாட்டில் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் வலியுறுத்தல்கள் வெளியான நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு, வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டது. இதனிடையே ஜெயராஜ்-பென்னிக்ஸின் இறப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்பட்டமான பொய்யான அறிக்கையை வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் அந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தால் இந்த வழக்கு சிபிஐ-இடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்தே சாட்சிகளின் வாக்குமூலம்படி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நீதிமன்றத்தில் சுமார் 2,427 பக்க குற்றப்பத்திரிகையை CBI தாக்கல் செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றத்தில் போலீசாரிடம் கிடுக்குப்பிடி கேள்வி கேட்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அண்மையில் இன்று (மார்ச் 23) தீர்ப்பு வெளியாகும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் இன்று (மார்ச் 23), அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2020ஆம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த வழக்கில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் விசாரணையின்போது, “நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா–மகன் கிடைத்திருக்கிறார்கள்; அடித்து பயிற்சி எடுத்துக்கலாம்” என்று போலீசார் பேசிக்கொண்டதாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Also Read
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!
-
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!
-
“பதவியைக் காக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறியவர்தான் பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!