Tamilnadu

சென்னையில் 700 அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மாளிகை, அச்சகம் ஆகியவை திறப்பு! : முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.03.2026) சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 133 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்”;

18.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “முதல்வர் திருமண மாளிகை”, 8.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “மாநகராட்சி அச்சகம்”, 9.81 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “முதல்வர் விளையாட்டுத் திடல்”, 9.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம்”;

பெருங்களத்தூரில் 4.73 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ஆகிய முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் உள்ள முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 3.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையம்;

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 14.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், வியாசர்பாடி, கக்கன்ஜி நகரில் 10.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், தண்டையார்பேட்டையில் 16.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், வெங்கடாபுரம், தெற்கு பூங்கா தெருவில் அமைந்துள்ள முழுநேர கிளை நூலகத்தில் 6.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் ஆகிய 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 133 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் 2,99,570 சதுர அடி கட்டடப் பரப்பளவில் இரண்டு தொகுதிகளாக (பிளாக் A மற்றும் பிளாக் B) 700 குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.  

700 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு பிளாக் Aவில் 390 வீடுகளும், பிளாக் B வில் 310 வீடுகளும், மாற்றுத்திறனாளிகளுக்காக பிளாக் A வில் 23 வீடுகள், பிளாக் Bவில் 12 வீடுகள் என  மாற்றுத்திறனாளிகளுக்காக 35 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளில்” உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் 415 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கூடம், படுக்கைஅறை, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதோடு மாற்றுத்திறனாளிகளுக்கென 35 குடியிருப்புகளும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்குடியிருப்பு வளாகத்தில் 770 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், 8 எண்ணிக்கையிலான மின் தூக்கி வசதிகள், 6 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி, 20 எண்ணிக்கையிலான 1,350 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், 2022 சதுர மீட்டர் பரப்பளவில் புல்வெளி வசதிகள், 1381 சதுர மீட்ட பரப்பளவில் திறந்தவெளி  இடம், 824 சதுர மீட்டர் பரப்பளவில் வணிகப் பகுதி மற்றும் 2,237 சதுர மீட்டர் பரப்பளவில் சாலை பகுதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 10 பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.  ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.  

முதல்வர் திருமண மாளிகையானது 23,600 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களுடன், 648 நபர்கள் அமரும் வகையில் 18.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

இத்திருமண மாளிகையில் ஒரே சமயத்தில் 216 நபர்கள் உணவருந்தும் வசதி, 3 விருந்தினர் அறைகள், மணமகன் மற்றும் மணமகள் அறை, 2 மின்தூக்கி வசதிகள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், கழிவுநீர் தொட்டி, மேல்நிலை குடிநீர் தொட்டிகள், நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

முதல்வர் திருமண மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 10 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

மாநகராட்சி அச்சகமானது 9,027 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் 8.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத்தின் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் அச்சகமும், சேமிப்பு அறை வசதிகள், அலுவலக அறை, DTP பிரிவு, நிலத்தடி தண்ணீர் சேமிப்பு தொட்டி, மின்தூக்கி வசதிகள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

முதல்வர் விளையாட்டுத் திடலானது, 89,298 சதுர அடி பரப்பளவில் 9.81 கோடி ரூபாய் செலவில் பேட்மின்டன், குத்துச்சண்டை, கூடைப்பந்து, வாலிபால் மற்றும் கால்பந்து மைதானங்கள், விளையாட்டு பகுதி, யோகா பகுதி, நிர்வாகக் கட்டடம், கழிப்பறை வசதிகள், பசுமை பகுதி, அமர்விடங்களுடன் மையத் திறந்தவெளி பகுதி, நிலத்தடி தண்ணீர் சேமிப்பு தொட்டி, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. 

இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையமானது 16,770 சதுர அடி நிலப்பரப்பளவில் 16,045 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் 9.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. 

இக்கட்டடத்தின் தரை தளத்தில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், மின்தூக்கி வசதிகள், மின்சார அறை மற்றும் நவீன கழிப்பறை வசதி,

முதல் தளத்தில் வரவேற்பு அறை, பிசியோதெரபி சிகிச்சைப் பிரிவு, சாய்வுதளம் மற்றும் படிகட்டுகள், எடையற்ற இயக்கம், நடைபயிற்சி அறை,  SWD & இழுவை, மின் தூண்டுதல், Tens & IFT  சிகிச்சை, அல்ட்ராசவுண்ட் சிகிச்சை, லேசர் சிகிச்சை, நடைபயிற்சி (இணைப் பட்டை), மின்சார அறை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள்

இரண்டாவது தளத்தில், ஆலோசனை அறைகள், நடைபயிற்சி அறை, உபகரணங்கள் அறை, அளவீட்டு அறை, மின் விநியோக அறை, பட்டறை அறை, சேமிப்பு அறை,  செயற்கை மூட்டு பகுதி, காத்திருக்கும் பகுதி,

மூன்றாம் தளத்தில், பணியாளர் அறை, ஆய்வகம், பணியாளர்கள் உணவு அருந்தும் இடம், உபகரண சேவை அறை, நோயாளிகள் காத்திருப்பு அறை,  உணவு மற்றும் நுகர்பொருட்கள் கடை, மின்சார அறை,

நான்காம் தளத்தில் 15 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் அறை, அமில பை-கார்ப் கலவை பகுதி, மறுசுழற்சி பகுதி, மின்சார அறை மற்றும் நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பூங்கா மற்றும்  நல்ல தண்ணீர் குளம் திறந்து வைத்தல்

முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பெருங்களத்தூரில் 4.73 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இப்பூங்காவானது, நடைபாதை, கூழாங்கற்கல் நடைபாதை, சிறுவர்கள் விளையாட்டுப் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 3.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வால்டாக்ஸ் சாலை முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையம்;

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 14.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம்,  வியாசர்பாடி, கக்கன்ஜி நகரில் 10.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம்,  தண்டையார்பேட்டையில் 16.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் வெங்கடாபுரம், தெற்கு பூங்கா தெருவில் அமைந்துள்ள முழுநேர கிளை நூலகத்தில்
6.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்;

என மொத்தம் 51 கோடியே 01 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான
5 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார். 

Also Read: “உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற புறப்படுங்கள்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!