Tamilnadu

உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மண்டலத்திற்குட்பட்ட 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் 20.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2026) சென்னை மாநிலக் கல்லூரியின் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் 20.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாக்கி வருகின்றார். அதனை செயல்படுத்திட விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களையும், சர்வதேச தரத்திலான முதலமைச்சர் சிறிய விளையாட்டு மைதானங்கள், மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள்ளரங்க விளையாட்டு கூடங்கள் உள்ளிட்ட விளையாட்டு உள்கட்டமைப்புகளை அதிக அளவில் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியும், மேம்படுத்தியும் வருகின்றார்கள். மேலும் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் உயர்கல்வித்துறையின் 2025-2026ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 252 அரசு கல்லூரிகளுக்கு (தொழில்நுட்பக் கல்லூரிகளையும் சேர்த்து) விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக, மொத்தம் 3.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டது.

இதன்படி கல்லூரி மாணவர்களுக்கு விளையாடுவதற்காக சிலம்பக்கோல் (Silambam Stick), கிரிக்கெட் மட்டை(Cricket Bat), கிரிக்கெட் பந்து (Cricket Ball), கிரிக்கெட் பந்து சிந்தடிக் (Cricket Ball – Synthetic), கிரிக்கெட் ஸ்டம்ப் செட் (Cricket Stump set), கைப்பந்து (Volleyball), கைப்பந்து வலை (Volleyball net), கால்பந்து (Foot Ball), கால்பந்து கோல் போஸ்ட் வலை (Football goal post net set), கூடைப்பந்து (Basket Ball), கையெறி பந்து (Throw Ball), சதுரங்க பலகை (Chess Board), காரம் போர்டு (Carrom board), பூப்பந்து ராக்கெட் (Badminton Racket), இறகுப்பந்து (Badminton Cock), தடகள தொகுதி (Atheletic starting block), எறிதட்டு 1கி (Discuss 1kg), எறிதட்டு 1.5 கி(Discuss 1.5kg), எறிகுண்டு 4கி (shotput 4kg), எறிகுண்டு 7.5 கி (Shot put 7.5kg), காற்று நிரப்பும் பம்பு (Leg Pump), அளவு நாடா (Measuring tape) உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

சென்னை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, சென்னை மாநில கல்லூரி (த), காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, இராணி மேரி கல்லூரி, ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சைதாப்பேட்டை அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், லேடி வில்லிங்டன் அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், நெம்மேலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி(த) ஆகிய 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் 20.40 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழா இன்று சென்னை மாநிலக் கல்லூரியின் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மண்டலத்திற்குட்பட்ட 12 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தம் 20.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை, உங்கள் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு இந்த விளையாட்டு உபகரணங்களை கொடுத்துவிட்டு, முதலில் நான் பேசுவதாக இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகு, மகிழ்ச்சியான உங்கள் அனைவரின் முகங்களை பார்க்கும்போது, குறைந்தது 2 நிமிடமாவது பேசலாம் என்று தான் நான் பேசுவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தேன். ஆனால் உங்களுடைய உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நான் என்னவெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அனைத்தையும் பேசிவிட்டார். இருந்தாலும் அவர், உங்களை சந்திக்கின்ற இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த நிகழ்ச்சி ஒரு வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்ச்சி. ஏனென்றால் இன்றைக்கு இந்த மாநிலக் கல்லூரி அரங்கத்திற்குள் கிட்டதட்ட 1,300 பேர் உட்கார்ந்துள்ளீர்கள். இந்த சிறப்பான அரங்கத்தை ஒரு வாரத்திற்கு முன்பு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தான் திறந்து வைத்தார்கள். அதன் பிறகு நடைபெறுகின்ற முதல் நிகழ்ச்சி இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கு Sports Kids வழங்குகின்ற நிகழ்ச்சியாகும்.

இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஏற்கனவே எங்களுடைய விளையாட்டுத் துறையின் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கு, ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12,600 கிராம ஊராட்சிகளுக்கும் இதே மாதிரி ஒரு Sports Kidsஐ நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது.

அதுபோல நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும், மாநகராட்சிகளில் இருக்கக்கூடிய அனைத்து வார்டுகளுக்கும் இதே மாதிரி ஒரு Sports Kidsஐ கொடுத்திருக்கின்றோம். இன்றைக்கு உயர்கல்வித்துறையின் சார்பாக ஒவ்வொரு அரசு கல்லூரிக்கும் Sports Kidsஐ கொடுத்திருக்கிறோம் என்றால், இந்த அரசுக்கு விளையாட்டின் மேல் எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை.

அதுமட்டுமல்ல, ஒரே ஒரு சின்ன உதாரணம் சொல்லி நான் முடித்துக் கொள்கின்றேன். பொதுவாக குழந்தைகள் வெவ்வேறு professions படிக்க ஆரம்பிக்கும்போது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் தங்கள் வீட்டில் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டும்போது பெற்றோர்கள் கொஞ்சம் வருத்தப்படுவார்கள், பயப்படுவார்கள். எங்கே இவன் விளையாட்டில் போய்விட போகிறானோ, அதற்கு எதிர்காலமே இருக்காது. இவனுக்கு சரியான வேலை கிடைக்காது என்று நினைப்பார்கள்.

ஆனால், பெற்றோரின் இந்த கவலையை திராவிட மாடல் அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த முறை முறியடித்துள்ளார்கள். விளையாட்டில் இருந்தாலும் உங்களுடைய எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி. இதுவரைக்கும் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு வருடத்தில், விளையாட்டில் சாதித்த 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி படிப்பு மிக, மிக முக்கியம் சொல்வார்கள். கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் மிக, மிக முக்கியமான துறைகளாக இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, படிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு விளையாட்டும், நம்முடைய உடல் வலிமையும் மிக முக்கியம். அதற்காகதான் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே வந்திருக்கக்கூடிய அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்னும் நீங்கள் வாழ்கையில் மென்மேலும் உயர்ந்து விளையாட்டில் மிகப்பெரிய சாதனைகளை செய்து, நம்முடைய தமிழ்நாட்டிற்கும், நம்முடைய இந்தியாவிற்கும் நீங்கள் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எனவே உங்கள் அத்தனைபேரையும் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த உயர்கல்வித் துறைக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Also Read: தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!