Tamilnadu
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா கோரிக்கை குறித்து தீர்வு காணப்படும்"- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவிப்பு.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்த நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட சில இடங்களில், நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது தெரியாமல், பொதுமக்கள் பலர் மனைகளை வாங்கி, வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, `முதல்வரின் முன்னெடுப்பு திட்டம்' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும், வீட்டுவசதி வாரியத்தின் அலுவலகங்களில், புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு 5952 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகளான, வீட்டுவசதி வாரியத்தால் நிலம் கையகபடுத்தப்பட்ட நிலங்களில், குடியிருப்போருக்கு தடையின்மை சான்று கோருதல், பெயர் மாற்றம் செய்தல், பல இடங்களில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நில எடுப்பு நடவடிக்கை கைவிடப்பட்டு, நிலங்களை திரும்ப அளித்தல் போன்ற பல்வேறு விதமான கோரிக்கைகள் பொது மக்களால் அளிக்கப்பட்டுள்ளது.
இம்மனுக்களை தனித் தனியாக ஆய்வு செய்ய, அரசாணை எண்.10, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நி.எ.2.2) துறை, நாள் 23.01.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, இரு நபர் குழு நியமிக்கப்பட்டது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், நில ஆர்ஜிதம் செய்யப்படாத நில உரிமையாளர்களுக்கு, நில எடுப்பு தொடர்பான தீர்வம் பகரப்படுவதற்கு முன்பு உள்ள இனங்களில், 4396 ஏக்கர் நிலங்கள், சிறப்பு குழுவால் வாரிய நில எடுப்பிலிருந்து விடுவிப்பு செய்யப்பட்டு, மக்களுக்கு நீண்ட கால பிரச்சினைகளை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தீர்த்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு நபர் குழு அமைத்து, நில எடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்பு ஏற்பட்ட பிரச்சனைகளை குறிப்பாக நில எடுப்பு நடவடிக்கையினை அறியாமல், மனைகளை வாங்கி, வீடுகள் கட்டிய பொதுமக்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இரு நபர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு கோரிக்கைகளை ஆய்வு செய்யும் பட்சத்தில், 5952 மனுக்கள் இருந்த காரணத்தினால், கோரிக்கைகளை தனித் தனியாக ஆய்வு செய்து, அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்க கோரப்பட்டது.
இரு நபர் குழு தனது ஆய்வினை துரிதப்படுத்தி குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் காளப்பட்டி, வெள்ளக்கிணறு, கணபதி, விளாங்குறிச்சி ஆகிய இடங்களிலும், சென்னை மாவட்டத்தில் கே.கே நகர். இராமாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மேலும், மற்ற மாவட்டங்களிலும் வரப்பெற்ற மனுக்களை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரு நபர் குழு குறிப்பாக, நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்கள், தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதையும், நில எடுப்பு செய்யப்பட்டதை அறியாமல் மனை வாங்கி வீடு கட்டியவர்கள் குறித்தும், மீதமுள்ள நிலங்கள் எவ்வளவு நிலங்கள் உரிமையாளர்களிடமும் / வாரிசுதாரர்களிடமும் வைத்துள்ளார்கள் என்பது குறித்தும், வருவாய்த் துறை மற்றும் வீட்டுவசதித் துறை ஆவணங்களை ஆய்வு செய்து, அரசிற்கு பரிந்துரை வழங்க இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
விரைவில், இரு நபர் குழுவின் விசாரணை அறிக்கையினை பெற்று, அரசிடம் ஒப்புதல் பெற்று, மக்களுடைய நீண்ட கால கோரிக்கையினை தீர்ப்பதற்கும், நில உரிமையாளர்களுக்கு பட்டா கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Also Read
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
தடை... அதை உடை... “கற்றனைத் தூறும் அறிவு” சிலை திறப்பு.. சிலை கூறும் செய்தி என்ன? - விவரம்!