Tamilnadu
“தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த கரந்தை தமிழ்ச் சங்கம்!” : துணை முதல்வர் உதயநிதி உரை!
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் கலைஞர் அவர்களின் சிலையையும், சங்கத்தின் முன்னாள் தலைவர் செம்மொழி வேளிர் ஐயா ராமநாதன் அவர்களின் சிலையையும் திறந்து வைத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை
இன்றைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சங்கத்தின் வளாகத்தில், கலைஞரின் சிலையையும் சங்கத்தின் முன்னாள் தலைவர் செம்மொழி வேளிர் ஐயா ராமநாதன் அவர்களின் சிலையையும் உங்களின் முன்னிலையில் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடியிருக்கின்றோம். இங்கு மட்டுமல்ல இன்று தமிழ்நாட்டில் எந்த அரசு நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடி வருகிறோம். அதற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தது இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாகப் பாடப்பட்டது இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970-களில் டாக்டர் கலைஞர் அவர்கள் அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்கள்.
இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான், இதற்கு எழுந்து நின்று நம்முடைய மரியாதை செலுத்தத் தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொன்னது. இன்னும் சில பேர் சட்டப்பேரவையில் இந்தப் பாட்டையே பாடக்கூடாது என்று ஒரு கூட்டம் சொன்னது.
ஆனால், இந்தப் பாடல் தமிழ்நாடு அரசினுடைய மாநிலப் பாடல் என்பதை அறிவித்து, அதைப் பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். அதைத் தொடர்ந்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான். ஆகவே, தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு வருவதை நான் மிகுந்த பெருமையாகக் கருதுகின்றேன்.
இந்தத் தமிழ்ச் சங்கத்தின் மீது கலைஞர் அவர்களுக்கு எப்பொழுதுமே மிகப்பெரிய ஒரு பற்றும் ஈடுபாடும் உண்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 1962-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் அவர்கள் தஞ்சையில் போட்டியிட்டபோது, இந்தக் கரந்தை பகுதியிலிருந்துதான் தன்னுடைய தேர்தல் பணிகளை அவர் செய்தார்.
கலைஞர் அவர்கள் அன்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கரந்தை தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அப்படிப்பட்ட கரந்தை தமிழ்ச் சங்கத்தில் இன்று கலைஞர் அவர்களின் சிலையையும் ஐயா ராமநாதன் அவர்களின் சிலையையும் திறந்து வைக்கின்ற வாய்ப்பைக் கொடுத்த இந்தத் தமிழ்ச் சங்கத்திற்கு முதலில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
1911-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கம் இன்று 100 ஆண்டுகளைக் கடந்து, தமிழ்ச் சேவை, கல்விச் சேவை எனச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழுக்கு வருகின்ற ஆபத்துகளை எதிர்க்கிறது ஒரு பக்கம், தமிழின் பெருமையைப் பரப்புவது இன்னொரு பக்கம் என இந்தச் சங்கத்தின் பணிகள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன.
தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1920-லேயே முதன்முதலில் தீர்மானம் போட்டது இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான். இந்தச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய செம்மொழி வேளிர் ராமநாதன் அவர்களின் பங்கு மிகச்சிறப்பு வாய்ந்தது, முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய கையெழுத்து இயக்கத்தை நடத்தியவர்.
ஒரு கோடிப் பேர் வரை கையெழுத்துகளை வாங்கி அந்த கோரிக்கையைத் தலைவர் கலைஞர் அவர்களிடம் வைத்தவர். அந்தக் கோரிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையே சேரும்.
அதேபோல் தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் தேவை என்று இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான் முதன்முதலாகத் தீர்மானம் போட்ட சங்கம். எல்லாவற்றையும் விட ஒரு கூடுதல் மிகப்பெரிய ஒரு சிறப்பு என்னவென்றால், 1937-இல் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிக்கின்ற போது அதை எதிர்த்துத் தீர்மானம் போட்டதும் இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான்.
இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிரைப் பங்கேற்க வைத்து, அன்னை தர்மாம்பாள் இந்தக் கரந்தை பகுதியைச் சேர்ந்தவர்தான். அப்பொழுது தொடங்கிய இந்தித் திணிப்பு முயற்சி இப்பொழுது வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
நேற்று கூட நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், இங்கு இருக்கக்கூடிய திருச்சியில் தெற்கு ரயில்வே அலுவலக வாயிலில் இந்தியில் எழுதி வைத்துவிட்டார்கள். அதையும் எதிர்த்து நம்முடைய கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள்தான் முதல் எதிர்ப்புக் குரல் தெரிவித்தார்கள். அதுமட்டுமல்ல இன்று புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டுக்குள் இந்தியைத் திணிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி நிதி, ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய கல்வி நிதி 3,500 கோடி ரூபாயைக் கொடுக்காமல் இன்று ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் அந்த 3,500 கோடி நமக்கு வரவேண்டிய நிதியைக் கொடுப்பேன் என்று இன்றைக்கு ஒன்றிய அரசு சொல்கிறது. மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொண்டால்தான் அந்த நிதியைக் கொடுப்பேன் என்று இன்றைக்கு ஒன்றிய அரசு சொல்கிறது.
ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொல்லிவிட்டார்கள், 3,500 கோடி அல்ல, நீ 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் உன்னுடைய இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் எந்த நேரத்திலும் இடம் கிடையாது. எனவே, அந்த உறுதியை நம்முடைய முதலமைச்சருக்குக் கொடுத்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு இன்று இங்கே சிலையைத் திறந்திருக்கிறோம்.
அதே மாதிரி மிசா சட்டம் வந்த காலத்தில் தி.மு.க-வின் பொதுக்குழு நடத்தத் தமிழ்நாட்டில் யாரும் இடம் தரவில்லை. அப்பொழுது பொதுக்குழு நடத்த இடம் கொடுத்துக் கலைஞர் அவர்களுக்குத் துணையாக நின்றதும் இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் மேல் கலைஞர் அவர்களுக்கு மாறாதப் பற்றும், பாசமும் உண்டு.
அதனால்தான், இந்தச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகக் கலைஞர் அவர்கள் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தத் தமிழ்ச் சங்கத்தைப் போலத் தமிழின் வளர்ச்சிக்காகக் கலைஞர் அவர்கள் பல்வேறு திட்டங்களைச் செய்திருக்கிறார்கள்.
முத்தமிழ் என்றால் இயல் தமிழ், இசை தமிழ், நாடக தமிழ் என்று சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி அறிவியல் தமிழை வளர்த்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
கலைஞரின் வழியில் இன்று நம் முதலமைச்சர் அவர்கள், அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு இன்று தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்துகொண்டு இருக்கிறது. தமிழரின் தொன்மையை வெளி உலகத்திற்குச் சொல்கின்ற வகையில் வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் நம் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். தமிழின் அரிய நூல்கள் எல்லாமே இன்று மின்னுரு (Digital) வடிவில் மாற்றப்படுகின்றன.
தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் இன்று உலகில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அதே மாதிரி உலகின் சிறந்த நூல்களை எல்லாம் தமிழில் கொண்டு வருகின்ற முயற்சிகளை நம் அரசு எடுத்து வருகிறது.
தமிழ் வளர்ச்சிக்கு நாம் இன்று இவ்வளவு பணிகளைச் செய்து வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டும்தான் அக்கறையைக் காட்டிக்கொண்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை 2,500 கோடி ரூபாய்.
ஆனால், நம்முடைய தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 147 கோடி ரூபாய். தமிழ், தமிழ் என்று சொல்லி இன்று மக்களை ஏமாற்றுகின்ற வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார், போலியாக நடிப்பவர்கள் யார் என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். எனவே, இந்த முக்கியமான நேரத்தில் இங்கு இருக்கக்கூடிய நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
அன்னைத் தமிழைக் காப்போம், ஆதிக்க மொழி திணிப்பை என்றும் வீழ்த்துவோம். அதற்கான உறுதிமொழியை இங்கே டாக்டர் கலைஞரின் சிலையின் முன்பு, ஐயா ராமநாதனின் சிலையின் முன்பு அந்த உறுதி மொழியை நாம் ஏற்போம் என்று சொல்லி, இந்தச் சிறப்பான வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றி
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
5 ஆண்டுகளில் மாபெரும் சாதனை.. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!
-
“பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும்; அ.தி.மு.க?” : ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!
-
பாஜகவின் தொடர் அழுத்தம்.. முதலமைச்சராக பதவியேற்ற 4 மாதங்களில் ராஜினாமா.. நிதிஷின் முடிவால் பீகாரில் பரபர!