Tamilnadu

11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,500/- வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, 6,000 பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கிடும் அடையாளமாக 11 பூசாரிகளுக்கு அதற்கான காசோலைகளையும், 10 பூசாரிகளுக்கு பூசை உபகரணங்களையும், 2 பூசாரிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்குதற்கான மானியம் தலா ரூ.12,000/-க்கான காசோலையையும், 3 பூசாரிகளின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஒரு பூசாரியின் வாரிசுதாரருக்கு குடும்ப நலநிதி ரூ.50,000/-க்கான காசோலைகளையும் வழங்கினார்.

மேலும், பூசாரிகளின் நலனுக்கான 11 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

முதலாவது அறிவிப்பு - ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாடை வழங்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - உறுப்பினர் மரணம் அடைந்தால், அவருடைய வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு - கிராம கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 இலட்சம் ரூபாயாக ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது ! தற்போது உங்களுடைய கோரிக்கையை ஏற்று ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

நான்காவது அறிவிப்பு - இயற்கை எய்திய உறுப்பினரின் ஈமச்சடங்குக்காக தற்போது வழங்கப்படும் தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு – அருகாமையில் இருக்கின்ற பெரிய திருக்கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு, தேர்ந்த பயிற்றுநர்களை கொண்டு புத்தொளிப் பயிற்சி நடத்தப்படும்.

ஆறாவது அறிவிப்பு - தற்போது பூசாரிக்கு 3 ஆயிரம், பூசாரிகளின் மகனுக்கு 3 ஆயிரம், மகளுக்கு 5 ஆயிரம் என திருமணத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி, மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும்.

ஏழாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது வழங்கப்படும் பள்ளிக்கல்வி நிதி உதவி, மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

எட்டாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி ஆண்டுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் தொழில் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி, ஆண்டுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும்.

பத்தாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகள் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

பதினோராவது அறிவிப்பு - உறுப்பினர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் நிதி உதவி ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

Also Read: ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு