Tamilnadu
கொருக்குப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு வளாகம்: எண்ணூர் கத்திவாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண்ணாம்புக்கால்வாய், கொருக்குப்பேட்டையில் 18.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு வளாகம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண்ணூர் கத்திவாக்கத்தில் 4.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம், 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், 3.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு மைதானம் - கொருக்குப்பேட்டை
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண்ணாம்பு கால்வாய் சாலை, கொருக்குப்பேட்டையில் ரூபாய் 18.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு வளாகம் 15,116 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் சுற்று வேலியுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு திடல், இருக்கைகளுடன் கூடிய குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்கம், குத்துச் சண்டை பயிற்சிக் கூடம், இருபாலருக்கான 4 எண்ணிக்கையிலான இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம், இரு பாலருக்குமான சக்கர சறுக்கு அரங்கம், கேரம் மற்றும் சதுரங்கம் உள்விளையாட்டுக் கூடம், இரு பாலருக்குமான இருக்கைகளுடன் கூடிய கைப்பந்து மைதானம், கிரிக்கெட் வளைப் பயிற்சிக் கூடம், ஓடுதளப்பாதை, கால்பந்து மைதானம், 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய பார்வையாளர் கூடம், பிரம்மாண்டமான விழா மேடை, 2 எண்ணிக்கையிலான உயர் மின் திரை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் பேருந்து நிலையம்
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் 4,160 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பேருந்து நிலையத்தில் ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பேருந்து நிலையம் கால அறை, ஓட்டுநர் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 85 எண்ணிக்கையிலான பேருந்துகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தியத்தின் மூலமாக தினந்தோறும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள்.
எண்ணூர் கத்திவாக்கம் - கலைஞர் நூற்றாண்டு நவீன நூலகம்
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் எண்ணூர் கத்திவாக்கத்தில் 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நவீன நூலகம் கட்டப்பட்டுள்ளது. 352.02 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில் 126 நபர்கள் அமர்ந்து படிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகையான நூல்கள், நாளிதழ்கள், மற்றும் பருவ இதழ்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், மாணவர்கள் இணைய நூலகம், நூல்கள் வழங்கும் பிரிவு, மெய்நிகர் நூலகம், சிறுவர் இணைய நூலகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலமாக இப்பகுதியில் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பயனடைவார்கள்.
எண்ணூர் கத்திவாக்கம் - நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண்ணூர் கத்திவாக்கத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்க நிதியின் கீழ் ரூபாய் 3.00 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமானது தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 877.30 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 எண்ணிக்கையிலான படுக்கை வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுரையீரல் மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், கர்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் குழந்தைகளுக்கான சேவைகள், குடும்பநலம், கருத்தடை மற்றும் பேறு கால சேவைகள், அடிப்படை பரிசோதனைகள், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்தல், உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலமாக கத்திவாக்கம், எர்ணாவூர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர் குப்பம் மற்றும் எண்ணூர் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
Also Read
-
திருட்டுப் பூனையின் உருட்டல்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் : EPS-க்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி!
-
நீங்கள் சொல்லும் தேசியம் எது? : குடியரசுத் துணைத் தலைவருக்கு கேள்வி எழுப்பிய முரசொலி!
-
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!
-
சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
புறநகர் ரயில் ரத்து - தென்னக ரயில்வேயின் அலட்சியம்.. கேட்காமலேயே அரசு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர்!